News
Loading...

பாவ வரியை உயர்த்தலாமே!

பாவ வரியை உயர்த்தலாமே!

வரி என்பது மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் எளிதாக இருக்க வேண்டும். அந்தவகையில், மத்திய–மாநில அரசாங்கங்கள் விதிக்கும் ஏறத்தாழ 17 வரிகளுக்கு பதிலாக, ஒரேவரியாக விதித்தால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்று ‘சரக்கு சேவை வரி’ என்றொரு ஒருங்கிணைந்த வரியை கொண்டுவர, பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் மசோதாவை  நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. அதன்தொடர்ச்சியாக, 18 மாநில சட்ட சபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிப்படி, சரக்கு சேவைவரி கவுன்சில் என்ற அமைப்புதான் வரிவிகிதங்களை நிர்ணயிக்கவேண்டும். இதற்கு மத்திய நிதிமந்திரி தலைவராக இருப்பார். துணை நிதிமந்திரி, மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் இருப்பார்கள். 

தமிழகத்திலிருந்து அமைச்சர் மாபா பாண்டியராஜன் இந்த கவுன்சிலின் உறுப்பினராக இருக்கிறார். அவர் சரக்கு சேவை வரியால் தமிழகத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. அதை சரிக்கட்ட என்ன செய்யவேண்டும்? என்று ஆலோசனைகளை கூறிவருகிறார். அவரது கருத்துகளுக்கு 9 உற்பத்தி மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

இந்த கவுன்சில் கூட்டம் இதுவரை 3 முறை நடந்துள்ளது. எவ்வளவு வரிவிதிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் தனது திட்டத்தை இந்த கவுன்சிலில் தாக்கல்செய்துள்ளது. இதில், 6 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 26 சதவீதம் என்று 4 பிரிவுகளில் வரிவசூல் செய்யலாம். சாதாரண மக்கள் பயன்படுத்தும் 92 பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம். இந்த பொருட்கள் பெரும்பாலும் உணவுபொருட்களாகவே இருக்கிறது. கடுகு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களும், நெய், தானியவகைகள், கோழிக்கறி, காபிபவுடர், தேயிலை போன்ற பொருட்களுக்கு 6 சதவீதவரி விதிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதேபோல, டாக்சி, ஆட்டோ கட்டணம் போன்றவற்றிற்கு 6 சதவீத வரிக்கு உட்படுத்தப்படும். அதிகபட்சவரியான 26 சதவீத வரிக்குட்படுத்தப்பட்டுள்ள ஆடம்பர பொருட்களுக்கும், பாவ பொருட்கள் என்ற வகையில், குளிர்பானங்கள், புகையிலை, பான்மசாலா போன்ற பொருட்களுக்கும் கூடுதலாக ‘செஸ்’ என்று சொல்லப்படும் மேல்வரியை விதிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு சரக்கு சேவைவரி கவுன்சிலில் உள்ள மாநில அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சரக்குகளுக்கும், சேவைகளுக்கும் ஒரேவரி என்ற இலக்கை நோக்கிப்போகும்போது, இப்படி மேல்வரி என்று சில பொருட்களுக்கு மட்டும் விதிப்பது இந்த கொள்கைக்கே மாறுபட்டதாகிவிடும். மேலும், வரியாக விதித்தால்தான், மாநில அரசாங்கங்களுக்கும் பங்கு கிடைக்கும். ஆனால், இந்த மேல்வரியில் கிடைக்கும் தொகையை அப்படியே மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். இந்த மேல்வரி என்றால் கிடைக்கும் தொகை தான் நாங்கள் மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு தரப் போகிறோம் என்று சொன்னாலும், அதற்கு வேறுவழியை மத்திய அரசாங்கம் பார்த்துக்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, தொடக்கத்திலிருந்தே பாவ வரி மீது விதிக்கப்படும் வரியை 40 சதவீதமாக உயர்த்தலாம் என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்தும், பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தரப்பிலும் கருத்துகள் கூறப்பட்டன. அதை ஏற்றுக்கொண்டு, பாவ வரியை மட்டும் மேலும் உயர்த்தலாம். மொத்தத்தில், இந்த சரக்கு சேவைவரியால் மக்களின் அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது சரக்கு சேவைவரி கவுன்சிலின் தலையாய கடமையாகும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...