News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

வாழ்க்கை ரொம்பவே கடுப்பாக இருக்கிறது. ஹரி பட அடியாட்களைப் போல பிரச்னைகள் எல்லாம் ஒரே சமயத்தில் வந்து அடிவாங்கிக்கொண்டு போகுமென எதிர்பார்த்தால், அவை மிஷ்கின் பட அடியாட்களைப் போல பொறுமையாய் ஒவ்வொன்றாய் வருகின்றன. காதல் வாழ்க்கையெல்லாம் ஷங்கர் படத்தைப் போல கலர் கலரா இருக்குமென எதிர்பார்த்தால், காதலிக்க பெண்ணே கிடைக்காமல் தங்கர் படம் போல ரொம்ப தட்டையாய் இருக்கிறது. 

வரும் மனைவி மணிரத்னம் பட ஹீரோயின் போல எண்ணி எண்ணி பேசுவாளென்று எதிர்பார்த்தால், அவள் விசு பட மாமியார் போல எல்லாவற்றையும் பேசுகிறாள். பிறக்கும் குழந்தைகள் சமுத்திரக்கனி பட கேரக்டர்களாக கண்ணியமாக நடக்கும் என கனவு கண்டால், அவை சசிகுமார் பட கேரக்டர்கள் போல கத்தியெடுத்து கழுத்தை அறுக்கக் கிளம்புகின்றன.

இந்த ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சினிமாவை விமர்சனம் பண்ணுறவங்க அக்கப்போர் தாங்க முடியல. அவங்கவங்க ஆறு மாசம் உழைச்சு, அம்பது - அறுபது கோடி செலவழிச்சு, நடிப்பைப் பற்றியே தெரியாத நடிகர் - நடிகைங்ககிட்டலாம் நடிப்பை வாங்கி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கிட்ட உழைப்பை வாங்கி ஒரு படத்தைக் கொடுத்தா, நம்மாளுங்க மொத்தமா அதை ஒரு பக்கமா பிதுக்கி, நசுக்கி, கசக்கி, கிழிச்சு எடுத்திடுறாங்க. 

பொது விமர்சனங்கள் கூட ஓகே! ஆனா கொஞ்சம்கூட பாவம் பார்க்காம, ஒத்த வார்த்தையிலே பட டைட்டிலுக்கு ரைமிங்கா சொல்றாங்க பாருங்க... ஒரு ஒன் வேர்டு விமர்சனம்! அந்த நக்கலைப் பார்க்கிறப்பதான் படமெடுத்தவங்களுக்கு விக்கல்னு வர்ற சிக்கல் மூணு நாளைக்கு போக மாட்டீங்குது. ‘பெங்களூர் நாட்கள்’னு பேரு வச்சு படம் சுமாரா இருந்தா ‘புள்ளை புடிக்கிற ஆட்கள்’னு  நக்கல் விடுறான். 

‘சவுகார்பேட்டை’யை ‘கண்ணம்மாபேட்டை’ன்னு சொல்றான். எஸ்.ஜே.சூர்யாவோட சேட்டைகளைப் பார்த்துட்டு ‘இசை’ படத்தை ‘பிசை’ன்னு கலாய்க்கிறான். ‘சண்டமாருதம்’ இல்ல, ‘தண்டமாருதம்’னு அசால்ட்டா அடிச்சுட்டுப் போறான். ‘ஒன்பதுல குரு, உட்காருற இடத்துல பரு’ன்னு வாய் மூடி சிரிக்கிறான். ‘மாஸ்’ படத்தை ‘தமாஸ்’னு பொட்டுல போடுறான். ‘மாயா’, ‘ஆயா’ங்கிறான். ‘தொடரி’, ‘குதறி’ன்னு  ரைமிங் தர்றான்.

நான் சொல்றதெல்லாம் ஓரளவுக்கு டீசன்ட்டான வார்த்தைகள். போன வருஷம் வந்த ‘வாலு’ படத்துல இருந்து போன வாரம் வந்த ‘றெக்க’ படம் வரை நம்மாளுங்க சொன்ன ரைமிங் விமர்சனத்தை எல்லாம் சென்சார் செஞ்சிருக்கோம். இப்பல்லாம் படமெடுக்க யோசிக்கிறதை விட, இவனுங்க ரைமிங்கா ஏதாவது சொல்லிடக்கூடாதுன்னு படத்துக்கு டைட்டில் வைக்க யோசிக்க அவங்கவங்க படற பாடு இருக்கே... கஷ்டம்!

நாட்டுல சாயந்திரமானா, பள்ளிக்கூடத்துல இருந்து புள்ளைங்க கிளம்புவாங்க... ஆபீஸ்ல இருந்து வேலை செய்யறவங்க கிளம்புவாங்க... காலைல ஆரம்பிச்சி டியூட்டி பார்த்த சூரியன் ரெஸ்ட் எடுக்கக் கிளம்பும்... அதுவரை ரெஸ்ட் எடுத்த நிலா நைட் டியூட்டி பார்க்க கூர்க்காவா கிளம்பும்... நாலு ஊருக்கு பஸ் கிளம்பும்... நீண்ட தூர ரயில் வண்டி கிளம்பும்... சில குரூப் போன்ல மொக்கை போடக் கிளம்பும்... சில குரூப் தண்ணி போடக் கிளம்பும்... ஆனா இப்பல்லாம் சாயந்திரம் நாலு மணி ஆனா போதும்... விதவிதமா வதந்திதான் கிளம்புது!

குழந்தைகளை வைத்து காசு பிச்சை எடுப்பது மட்டும்தான் குற்றமா? குழந்தைகளை வைத்து கவனப் பிச்சை எடுப்பதும் குற்றம்தான். ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒண்ணு’ன்னு பெரியவங்க சொல்றாங்க, ஆனா இவனுங்க குழந்தைகளை கூட்டியாந்தே தீச்சட்டி எடுக்கிறதும், அலகு குத்தறதுமா பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. இதெல்லாம் ரொம்ப பாவம் மை சன்... தெய்வத்துக்கு நேர்த்திக்கடனா தெய்வமே தீச்சட்டி எடுக்குமா? 

ஸ்கூலுக்கு போற குழந்தைங்க, குடியரசு தினத்துக்கு சட்டையில் கொடிய குத்தலாம்; கழுத்து டையில ஸ்கூல் பேட்ஜை குத்தலாம்; ஏன் ஸ்கூலுக்கு லேட்டுன்னு வாத்தியார் கேட்டா ‘ஃபிளைட் பஞ்சராயிடுச்சு’ன்னு வாத்தியாருக்கு காதுகூட குத்தலாம்; ஆனா உன் கட்சித் தலைவருக்கு நலமாகணும், உனக்குப் பிடிச்ச நடிகனுக்கு குணமாகணும்னு நீ வேண்டுறதுக்கு குழந்தைங்க கன்னத்துல அலகு குத்தலாமாய்யா? நம்ம நாட்டுல, தனக்குப் பல உதவிகள் செய்த, தனக்குப் பதவிகள் தந்த அரசியல் தலைவர்களுக்காக எந்த எம்.எல்.ஏ., எம்.பியாவது அலகு குத்தி பார்த்திருக்கீங்களா? இருக்கவே இருக்காது! தங்கள் தலைவருகளுக்குக் கஷ்ட காலம் வரும்போது முதுகுல குத்துன எம்.எல்.ஏ., எம்.பி.க்களைத்தான் பார்த்திருப்பீங்க! 

தமிழ்நாட்டுல வேண்டுதல்கள் பல வகை... அதுல இப்ப புது வகை, மண் சோறு சாப்பிடுறதுதான். நம்மூருல பல ஹோட்டல்களில் சாப்பாடே மண்ணு மாதிரிதான் இருக்குங்கிறது வேற விஷயம், ஆனா நாட்டுக்குள்ள இப்ப மண் சோறு சாப்பிடுறவங்க எண்ணிக்கை, தட்டுல வெண் சோறு போட்டு சாப்பிடுறவங்களை விட அதிகமாயிடுச்சு என்பதுதான் வரலாற்று சோகம். பொதுவா சாப்பாடு சரியில்லைன்னா தரையில கொட்டுவாங்க, ஆனா இவங்க தரையில கொட்டித்தான் சாப்பிடுறாங்க. 

என் சந்தேகமெல்லாம்... ‘இப்படி கிடைக்கிற இடங்களில் எல்லாம் தரையை இலையாக்கி, சோத்தை மலையாக்கி, எரிமலையின் நுனியைப் போல மேலாக்க குழம்பு விட்டு சாப்பிடுறதை மட்டும் டி.வி. செய்திகளில் காட்டுறாங்களே! அதுக்கப்புறம் ரசம் ஊத்தியோ, மோர் ஊத்தியோ தரையைத் தடவி வழிச்செடுத்து சாப்பிடுறதை ஏன் காட்ட மாட்டேங்கிறாங்க?’ ஃபினிஷிங் டச்சா பால் பாயசமெல்லாம் ஊத்துனா பார்க்க பட்டாசாவே இருக்கும். ஆனா நாட்டுக்கு இவங்களால ஒரு நன்மை என்னன்னா, தரைக்கு கையால முத்தம்மா தர்றாங்க; மொத்தத்தையும் சாப்பிட்டு தரைக்கு சுத்தமும் தர்றாங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.