News
Loading...

ஐந்து குரங்குகளுக்கு உயிர் கொடுத்த ஸ்டெம் செல் சிகிச்சை

ஐந்து குரங்குகளுக்கு உயிர் கொடுத்த ஸ்டெம் செல் சிகிச்சை

இந்தியாவில் 33 நொடிகளுக்கு ஒருவர் மாரடைப்பால் மரணிக்கிறார். மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க பல வழிமுறைகள் இருந்தாலும், வந்த பிறகு மிகச் செலவு செய்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. 

அதுவும் பலருக்கு பலன் தருவதில்லை. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக ஸ்டெம்செல் சிகிச்சை பெரிய நம்பிக்கையாக வளர்ந்து வருகிறது. அதே சமயம் அதில் பக்கவிளைவுகளும் இல்லாமல் இல்லை. நாம் இங்கு வாசிக்கப்போவது அப்படியான ஒரு புதிய கண்டுபிடிப்பு பதிவைத்தான. 

ஐந்து குரங்குகளுக்கு உயிர் கொடுத்த ஸ்டெம் செல் சிகிச்சை

ஜப்பானில் உள்ள மருத்துவர்கள் இதய பாதிப்பில் உயிருக்குப் போராடிய ஐந்து குரங்குகளை மற்றொரு குரங்கிடமிருந்து பெற்ற இதயத்தசை ஸ்டெம் செல்களின் மூலம் சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளனர். எப்படி சாத்தியமானது இது? ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மருத்துவத்துக்குப் புதிதான ஒன்றல்ல. இது மேம்படுத்தப்படும்போது மனிதர்களின் இதய நோய் சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். 

தனி நபர்களிடமிருந்து ஸ்டெம் செல் எடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்துவது என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடிய ஒன்று. மேலும் மனித கருக்களிலிருந்து ஸ்டெம் செல்கள் எடுத்தவுடன் அவை அழிக்கப்படுவது இன்றைய வரைக்கும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. 

இந்த சர்ச்சை சங்கடங்களினால் ஜப்பானின் ஷின்சூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், வருங்கால ஸ்டெம் செல் சிகிச்சை சிக்கலின்றி நடைபெற, ரெடிமேடாக உடனே கிடைக்கும்படி ஸ்டெம் செல்லை தானமாக பெறும் வழிமுறையை ஆலோசிக்கிறார்கள். 

‘‘ஸ்டெம் செல் வங்கியில் ஒருவரின் உடலுக்கு ஏற்றபடி முதலிலேயே பொருத்தமான ஸ்டெம் செல்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் நோயாளியின் செல்களைத் தேடுவதில் தேவையில்லாமல் நேரம் வீணாகாது’’ என தொலைநோக்கோடு பேசுகிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் இதய நோய் ஆராய்ச்சி வல்லுநரான சியன் ஹார்டிங்.

இதற்கான சோதனையில், மனிதர்களுக்கு அதிக வேறுபாடு இல்லாத குரங்கிடமிருந்து பெற்ற ஸ்டெம் செல்களை  சிறிது மாற்றி இதயநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து குரங்குகளின் உடலில் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தினர். இதில் உள்ள ஒரே சிக்கல், வெளியே இருந்து உடலுக்கு வரும் புதிய செல்களை, நோய் எதிர்ப்பு அமைப்பு ‘நோயாக’க் கருதி எதிர்க்கும் என்பதுதான். 

‘‘இதனை மந்தப்படுத்த தனியாக மருந்துகளை தினசரி பயன்படுத்துகிறோம். மேலும் தானம் பெற்ற ஸ்டெம் செல்களின் பொருத்தமும் இதில் மிக முக்கியம்’’ என விளக்கமாகப் பேசுகிறார் மார்டென் ரிகன் பகுதியிலுள்ள ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் யுஜி ஷிபா. 

ஸ்டெம் செல்கள் மாற்றப்பட்டு 3 மாதங்கள் ஆனபின்பு ஐந்து குரங்குகளின் உடலிலும் எந்த விரும்பத்தகாத விளைவுகளும் இல்லை. மேலும் சேதமான இதயத்தசைகளும் மேம்பட்டுள்ளன. ஆனால் செலுத்திய மருந்துகளின் பக்க விளைவாக அர்ஹைத்மியா எனும் அதிவேக இதயத்துடிப்பு ஐந்து குரங்கு
களிடமும் காணப்பட்டது. 

இதயத்துடிப்பு அதிகரித்தல் காலகட்டத்திலும் குரங்குகளிடம் வேறு மோசமான உடல்கோளாறுகள் காணப்படவில்லை. எனவே ‘‘இந்த இதயத்துடிப்பு அதிகரித்தலை எளிதாகத் தீர்த்துவிடலாம். புற்றுநோய், இதயத்துடிப்பு அதிகரிப்பு, அதிக செலவு பிடிக்கும் சோதனை என்பதையெல்லாம் தாண்டி இதயநோய் சிகிச்சைக்கு ஸ்டெம்செல் இன்னும் சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்’’ என உறுதியுடன் பேசுகிறார் ஆராய்ச்சியாளர் யுஜி ஷிபா.

அதிக விலங்குகளிடம் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை தொடர்ச்சியாக செய்யப்படும்போதுதான் சிகிச்சையின் சிக்கல்களை அறியமுடியும் என்பதால், இந்த வெற்றி முக்கியம் என்றாலும் இது இறுதியானதல்ல.

 ‘‘இதயமாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்பவர்களுக்கு இந்த சிகிச்சை ஆறுதல் தரும்’’ என நடைமுறையில் ஸ்டெம் செல் பங்கு குறித்து பேசுகிறார் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழக இதய வல்லுநரான சாம் போட்டெங். அறிவியலுக்கு இது போன்ற தடைகள் புதிதல்ல என்பதால் ஸ்டெம்செல் சிகிச்சை நாளை உலகை ஆளும் என்பதில் சந்தேகமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.