News
Loading...

ஹெட்போன்களின் வரலாறு!

ஹெட்போன்களின் வரலாறு!

அண்மையில் வெளிவந்த ‘ஐபோன் 7’ல் ஹெட்போன் சாக்கெட்டுகளை ஆப்பிள் நிறுவனம் அகற்றி அடுத்த புரட்சியைத் தொடங்கியுள்ளது.  10 ஆயிரத்து 564 எனும் சல்லிசான விலையில் வயர்லஸ் ஏர்பாட் ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இனிமேல் இப்படித்தான்’ என ஆப்பிள் சிக்னல் காட்டிவிட்டது. 

வயர் இல்லாத இந்த ‘ஏர்பாட்’ ஹெட்போனை காதில் மாட்டியதுமே, இதில் இருக்கும் இன்ஃப்ரா ரெட் சென்ஸார் இசையைத் தேடி நம் காதுகளில் கொண்டுவந்து கொடுக்கும். கேட்டு முடித்து காதிலிருந்து இதை அகற்றியதுமே, இசை நின்றுவிடும். பல்வேறு ஆண்டுகளில் மாற்றம் பெற்று வந்த ஹெட்போன்களின் வரலாறு சூப்பரான நாஸ்டால்ஜிக் ரீவைண்டிங்காக நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துமே! லைட்ஸ் ஆன்... பயணிப்போமா?

ஸ்டெதாஸ்கோப்

இதில் பாடல் கேட்கமுடியாதுதான். ஆனால் ஹெட்போன் கருவிகள் உருவாக ஊக்கம் தந்தது ஸ்டெதாஸ்கோப்தான். 1850களில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டெதாஸ்கோப் நோயாளிகளின் இதயத் துடிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாடு பற்றி மருத்துவர் அறிய பயன்படுத்தப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் ஸ்டெதாஸ்கோப்பை தன்னுடைய போனாகிராப் மெஷினுடன் இணைத்துப் பயன்படுத்தினார்.

1880 முதல் ஹெட்போன்

1880களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஹெட்போன், இன்றைய ஹெட்போன்களுக்கு முப்பாட்டன். இந்த ஹெட்போன்களை முதலில் பயன்படுத்தியது டெலிபோன் ஆபரேட்டர்கள்தான். தோள்களில் தாங்கியபடி ஒற்றைக் காதில் பயன்படுத்த வேண்டும். எடைதான் சற்று அதிகம்; ஜஸ்ட் 5 கிலோதான்! 1890ம் ஆண்டு பிரிட்டிஷ் ஓபரா நடன அரங்குகள் மற்றும் தியேட்டர்களில் திரையிடப்படும் நாடகங்களை பார்வையாளர்கள் ரசிக்க வசதியாக இதனை வழங்கினர்.

ஹெட்போன்களின் வரலாறு!

1910 காப்பர் வயர் ஹெட்போன்

1910ம் ஆண்டு நதானியேல் பால்ட்வின் என்ற ஆராய்ச்சியாளர் அமெரிக்க கடற்படையின் உதவியுடன், ஒலியைப் பெறும் இரு ரிசீவர்களுடன் உள்ள முதல் ஹெட்போனைக் கண்டுபிடித்தார். இதுவே  இரண்டாம் உலகப்போரின்போது மின்சாரமில்லா டெலிபோனை கண்டுபிடிக்க ஆதாரமாய் அமைந்தது.

1958 எஸ்பி3 ஸ்டீரியோபோன்ஸ்

1958ம் ஆண்டு ஜாஸ் பாடகர் ஜான் சி கோஸ், மார்ட்டின் லான்ஞ் ஜூனியர் என்ற எஞ்சினியருடன் இணைந்து போர்டபிள் போனோகிராப் எஸ்பி3 ஸ்டீரியோபோன் ப்ளேயரை கண்டுபிடித்தார். பக்கவாட்டில் ஸ்பீக்கர்கள் கொண்ட இந்த ஹெட்போனில் பிரைவசி ஸ்விட்சை அழுத்தினால் புறவெளி இரைச்சலின்றி ஸ்டீரியோ போனிலிருந்து துல்லிய தரத்தில் நமது தனியுலகில் பாட்டை ரசிக்க முடியும்.

1979 - எம்டிஆர்-3L2 ஹெட்போன்

1979ம் ஆண்டு ஜூலை 1 அன்று  சோனி கம்பெனி வாக்மேனைக் (கேசட் ப்ளேயர்) கண்டுபிடித்தது. கூடவே 3.5 எம்.எம். ஹெட்போன்களும் இணைந்தால் என்னாகும்? பாக்ஸ்ஆபீஸ் ஹிட்தானே! 

இதுவரை 38 கோடியே 50 லட்சம் வாக்மேன்கள் பரபரவென விற்றுத் தீர்ந்துள்ளன என்பதிலிருந்தே இதற்கான வரவேற்பை அறியலாம். சோனியை முந்திக்கொண்டு பிலிப்ஸ் கேசட் ப்ளேயரை அறிமுகப்படுத்தி சந்தையில் இருந்தாலும் அதைத் தாண்டி சோனி தன் வாக்மேனை போணி செய்தது எப்படி? 

அதனுடைய தரமான துல்லிய இசை தரும் ஹெட்போன்களின் நிகரற்ற பாடல் அனுபவம்தான் காரணம். வாக்மேனில் பாடல் கேட்பதை இளைஞர்களின் ஃபேஷனாகவே மாற்றியதில் இருக்கிறது சோனியின் வெற்றி.

1989  இரைச்சல் குறைக்கும் ஹெட்போன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எலக்ட்ரிகல் எஞ்சினியரான டாக்டர் அமர் கோபால் போஸ் (1929 - 2013) ஹெட்போனில் இரைச்சலைக் குறைக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார். விமானம் சார்ந்த பயணங்களில் எழும் சப்தத்தை குறைக்க இந்நுட்பம் முதலில் பயன்பட்டது. போஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய ஹெட்போன்கள் மார்க்கெட்டில் உன்னத தரத்துக்கு அடையாளம் ஆகின.

2001 ஆப்பிள் ஐபாட் ஹெட்போன்கள்

2001 அக்டோபர் 23 அன்று ‘ஐ பாட்’ எனும் மீடியா ப்ளேயரை அறிமுகப்படுத்தி, ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன்களின் போட்டியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. 2 - 128 ஜிபிகள் வரை இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இன்று வரை 30 கோடி ஐபாடுகளை ஆப்பிள் நிறுவனம் ஏகபோகமாக விற்றுள்ளதற்கு, அதன் ஹெட்போன்களின் அசத்தல் தரமும், தனித்துவ வடிவமைப்பும் முக்கிய காரணமாகும். 

டேஷ் இயர்போன்

2016ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பிராகி எனும் நிறுவனம் இந்த வயர்லெஸ் ஸ்மார்ட்  இயர்போன்களை அறிமுகப்படுத்தியது. ப்ளூடூத் மூலம் 4 ஜிபி சேமிப்புத்திறன், இரைச்சலை குறைக்கும் திறன் கொண்ட இயர்போன்களை எங்கேயும் எப்போதும் இசையில் விழுந்து புரள பயன்படுத்த முடியும். ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என எதிலும் டக்கென சிம்மும், போனும்போல இணைத்துக்கொள்ளலாம். 

எல்ஜி. வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்செட்

தென்கொரிய நிறுவனமான எல்.ஜி தயாரித்துள்ள ‘டோன் இன்ஃபினிம் வயர்லெஸ் ஹெட் செட்’டில் இரு கருவிகளை ஒரே சமயத்தில் இணைத்துக் கொள்ள முடியும். போன் அழைப்புகள், மெசேஜ்கள் வருவதை உணர்த்த சிறிய அதிர்வுகளைத் தரும். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் இசைக்கடலில் மூழ்கி முத்துக் குளிக்கலாம். 

ரோம் ரோப்ஸ் இயர்போன்கள்

கழுத்தில் நெக்லஸ் போல் அணிந்து, வயர்லெஸ் இயர்போன்களை காதில் பொருத்தி இஷ்டப்படி பாடல்களை ரசிக்கலாம். அத்துடன் இதன் நீளத்தை  சுருக்கிக்கொள்ளவும், பெரிதாக்கிக் கொள்ளவும் முடியும். இதிலுள்ள ரோம் இக்யூ ஆப் மூலம் போனில் உங்களுக்குத் தேவையான இசையை நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். பாட்டு கேட்கவில்லையென்றாலும் டாலர் போல கழுத்தில் அணிந்தால் அழகாக அம்சமாக ஆபரணமாகவே இருக்கும். 

2008 த்ரில்லர் ஹெட்போன்ஸ்

2008 நவம்பர் மாதம், நோக்கியா நிறுவனம் நடத்திய ஹெட்செட் டிசைன் போட்டியில் 7 ஆயிரத்து 500 பேரை பின்தள்ளி முதல் பரிசு வென்ற ஹெட்போன் இது. ஜானிலைட் ஹேண்ட்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, அடோம் க்ரியேடிவ் சொல்யூஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 

கல்லறை, சிலுவை, மஞ்சள்நிற ஓநாய், தலைகீழாக ஸோம்பி மனிதன், இலைகளற்ற மரத்தில் பறவை என மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் இசை ஆல்பத்தில் வரும் பல பொருட்களைக் கொண்டு கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஹெட்செட். 

வைர இயர்போன்

பெல்ஜியம் நாட்டின் காசா ஜி என்ற நகை தயாரிப்பாளர் வடிவமைத்து உருவாக்கிய 18 கேரட்  தங்கம் இழைத்த வைர இயர்போன் இது. இடது, வலது என இரு இயர்போன்களிலும் தலா 59 தரமான வைரங்கள் என மொத்தம் 118 வைரங்கள் இதில் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

 ஒரே ஒரு செட் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த இயர்போன் பிரிட்டனில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 557 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 18 கிராம் எடை கொண்ட இந்த இயர்போன் இசையின் தரத்தில் குறை வைக்காமல் துல்லியமாக ஒலிக்கிறது. 

வைர ஹெட்போன் கடிகாரம்

பாடகர் லில்வேய்ன், சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சில்  நடந்த ஒரு கூடைப்பந்து போட்டியைப் பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் காதில் இருந்த ஹெட்போனில் 1 மில்லியன் டாலர் மதிப்பு மிக்க வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளதைப் பார்த்து பலரும் வியப்பில் திறந்த வாயை மூடவில்லை.

தங்க இறக்கை ஹெட்செட் 

2009ம் ஆண்டு ‘ஐ பிலீவ் ஐ கேன் ஃப்ளை’ என்ற ஆர் கெல்லியின் பாடலில் இம்ப்ரெஸ் ஆன ரோட்சாகர் என்ற கண்டுபிடிப்பாளர் நோக்கியா நிறுவனத்தின் ஹெட்செட் போட்டியில் உருவாக்கிய ஹெட்செட்தான் இது. இங்கு ஒவ்வொரு இடது வலது ஹெட்செட்களிலும்  வெள்ளை மற்றும் தங்க இறக்கைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.