News
Loading...

இதுவும் நல்ல யோசனை!

இதுவும் நல்ல யோசனை!

உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தமிழ்நாடு தட்டியதற்கேற்ப, உச்சநீதிமன்றம், மத்திய அரசு அமைத்த உயர்மட்ட தொழில்நுட்பக்குழுவை, இருமாநிலங்களுக்கும் சென்று அணைகளையும் பார்வையிட்டு, விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தது. கர்நாடக அரசு, ‘எங்களிடம் போதுமான தண்ணீர் இல்லை’ என்று சொல்வதற்கு காரணம், காவிரி உற்பத்தியாகும் குடகுமலையில் நீர்ப்பிடிப்பு வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் மழைவளம் குறைந்துவிட்டது. பெய்யும் மழையும் தக்கவைக்கப்படுவதில்லை என்ற காரணங்களை, கர்நாடக மாநிலத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற பி.கே.சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். குடகுமலை மேற்குதொடர்ச்சி மலையின் மைய பகுதியில் இருக்கிறது. இது அடர்ந்த காடுகளைக்கொண்டதாக இருந்திருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருந்தால்தான் மழை பெய்யும்போது மரங்களின் வேர்கள் நீரை தங்களிடம் தக்கவைத்துக்கொள்ளும். மண் அரிப்பை தடுக்கும். இதனால் எப்போதும் தண்ணீர் தேங்கியிருக்கும் வகையில் கோடைகாலத்திலும் தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும். பழையகாலங்களில் இருந்த அடர்ந்தகாடுகள் இப்போது குடகுமலையில் இல்லை.

ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மலைப்பரப்பு காபி தோட்டங்களாக்கப்பட்டிருக்கிறது. இதுபோல, பசுமை புல்வெளிகளும் மலைப்பகுதிகளில் பராமரிக்கப்படவேண்டும். இருமாநிலங்களிலும் காவிரியிலும், அதன் கிளை ஆறுகளிலும், தொழிற்சாலைகளில் இருந்து திறந்துவிடப்படும் கழிவுநீரால் மாசுபடுவதை தடுத்து, நீர்மேலாண்மையிலும், பயிர் சாகுபடி மேலாண்மையிலும் கவனம் செலுத்தவேண்டும் என்பதுபோன்ற பல ஆலோசனைகளை கூறியிருக்கிறார். அவருடைய யோசனைகள் எல்லாம் மிகவும் வரவேற்கத்தகுந்தது. குடகுமலையில் மலைவளமும் அதனால் மழைவளமும் பெருகினால்தான் எதிர்காலத்திலாவது பிரச்சினை இருக்காது. இதுபோன்ற நிபுணர்களின் ஆலோசனையை ஏற்று, குடகுமலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மலைவளத்தை பெருக்கவும், மழைத்தண்ணீரை சேகரிக்கவும், அடர்ந்த காடுகளை உருவாக்கும் வகையிலும் தீவிரமான திட்டத்தில் மரக்கன்றுகள் நடும்பணியில் கர்நாடக அரசு ஈடுபடவேண்டும். அதை மத்திய அரசு கண்காணிக்கவேண்டும். இதுபோல, தமிழ்நாட்டிலும் அனைத்து ஆறுகள், ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடர்ந்தகாடுகளை உருவாக்க தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.