News
Loading...

ரெயில்களில் வசதிகளைப் பெருக்குங்கள்!


பயணம் என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. சாலை, ரெயில், வான்வழி, கடல்வழி போக்குவரத்து என்று 4 வழிகளில் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், சாலை, ரெயில், வான்வழி போக்குவரத்துக்கு வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. 1,076 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட கடற்கரை இருந்தாலும், கடல்வழி பயண போக்குவரத்து வாய்ப்பு வசதிகளை இன்னும் பயன்படுத்தவில்லையே என்ற குறை மக்களுக்கு இருக்கிறது.

ரெயில் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், இந்தியா முழுவதுமுள்ள 7,172 ரெயில் நிலையங்களைப் பயன்படுத்தி, தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகள், 12 ஆயிரத்து 617 ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். தீபாவளி போன்ற பண்டிகை நேரங்களில் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்வே நிர்வாகம் கூடுதல் ரெயில்பெட்டிகளை இணைப்பதிலும், சிறப்பு ரெயில்களை விடுவதற்கும் தீவிர நடவடிக்கை எடுப்பது வழக்கம். வசதியான பயணத்துக்காக 120 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்புப்படி, இதுபோன்ற பண்டிகைகாலங்களில் எல்லோருமே முதலிலேயே திட்டமிட்டு, தங்கள் பயணத்துக்காக முன்பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியா முழுவதிலும் இவ்வாறு ரெயில் பயணத்துக்கான முன் பதிவுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிடு கையில், 12 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை விட, 16.5 லட்சம் பேர் குறைவு என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நிறைய பேர் சாலைப்போக்குவரத்தை விரும்புவதாலும், ரெயிலில் உயர்வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்பவர்கள், ராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ரெயில் கட்டணத்துக்கும், மலிவு கட்டண விமான சேவைக் கட்டணத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லாத நிலையில், ஏன் ரெயிலில் பலமணி நேரம் பயணம் செய்ய வேண்டும், கொஞ்சம் தானே கூடுதல் செலவு விமானத்தில் சென்று விடலாமே? என்று நினைப்பதாலும், ரெயில் பயணத்தை விட்டுவிட்டு, மலிவு கட்டண விமானத்தில் சென்று விடுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சென்னையிலிருந்து டெல்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 அடுக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்ய ரூ.5,460 கட்டணம். ஆனால், மலிவுகட்டண விமான சேவையில் ரூ.7,762 தான். இந்தியா முழுவதும் தீபாவளி நேரத்தில் ரெயிலில் முன்பதிவு குறைந்திருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், எந்தரெயிலிலும் முன் பதிவு பெட்டியில் இடம் காலியாக இல்லை. பதிவு செய்யப் படாத பெட்டிகளில்கூட டிக்கெட் எடுக்காமல் போகும் பழக்கம் தமிழ்நாட்டில் யாருக்கும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு நன்றாகத்தெரியும். அங்கு ஏராளமானவர்கள் டிக்கெட் எடுப்பதில்லை. பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் யாரும் பயணம் செய்யலாம் என்றநிலைதான். இப்படி இருக்கும் போது, நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் தமிழ்நாட்டில் மட்டும் போதிய அளவு புதிய ரெயில்திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை, புதிய ரெயில்கள் விடுவதில்லை, இங்கு ஓடும் ரெயில்களில் புதிய ரெயில்பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை, ரெயில் பயணிகளுக்கு போதியவசதிகள் செய்து கொடுக்கப் படுவதில்லை என்று பெரிய மனக்குறை தமிழக மக்களுக்கு இருக்கிறது. எனவே, ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து தமிழக ரெயில் பயணிகளின் நலனை புறக்கணித்தால் நல்லதல்ல. தமிழ்நாட்டிலும் இப்போது மலிவுகட்டண விமான சேவையைப் பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டனர். மத்திய அரசாங்கம் ‘உதான்’ திட்டத்தின்கீழ் ஒரு மணி நேர விமான சேவைக்கு ரூ.2,500 கட்டணம் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. சின்னஞ்சிறு ஊர்களுக்கு விமான சேவை தொடங்கினால் பல சலுகைகளை அளிக்கப் போகிறது. எனவே, தமிழக ரெயில் பயணிகளைத் தக்க வைக்க, உரிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...