News
Loading...

இவர்கள் சாவுக்கு... இவர்கள்தான் காரணமா? கரன்சி பசி!

இவர்கள் சாவுக்கு... இவர்கள்தான் காரணமா? கரன்சி பசி!

தீபாவளிக்கு முன்பே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கி, உயிர்கள் உதிர ஆரம்பித்துள்ளன. விழுப்புரம் வானூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த சோகம் தீர்வதற்குள், சிவகாசியில் பட்டாசுக் கடையில் பயங்கர வெடிவிபத்து. பட்டாசுக் கடைக்கு சம்பந்தமே இல்லாத ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணி உட்பட 8 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தது பதைபதைக்க வைத்துள்ளது. கடை உரிமையாளரை கைதுசெய்ததுடன் வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். இந்த அப்பாவிகளின் சாவுக்கு கரன்சி பசியே காரணம். பட்டாசு கடைகளுக்கும் ஆலைகளுக்கும் அனுமதி தரும் அதிகார வர்க்கம் மீது ஆக்‌ஷன்கள் பாய்வதில்லை. ‘‘சிவகாசியில் எட்டுப் பேர் மரணத்துக்கு எட்டு அதிகாரிகள்தான் காரணம்’’ என கொதிக்கிறது சிவகாசி ஏரியா. அவர்கள் யார் யார்?

இவர்கள் சாவுக்கு... இவர்கள்தான் காரணமா? கரன்சி பசி!

சிறப்பு தாசில்தார்:  ஆங்கிலேயர் ஆட்சியில்தான் சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில்கள் தொடங்கப்பட்டன. அவற்றை கண்காணிக்கத் தனியாக சிறப்பு தாசில்தார் என்ற பணியிடம் உருவானது. புதிய பட்டாசு ஆலைகள் தொடங்குவதற்கும் பட்டாசுக்  கடைகள், பட்டாசு மூலப்பொருள் விற்பனைக் கடைகள் ஆரம்பிப்பதற்கும் லைசென்ஸ் வழங்குவது, லைசென்ஸ் புதுப்பித்தல், பட்டாசு ஆலைகளைக் கண்காணிப்பது என ‘ஆல் இன் ஆல்’ வேலையை பார்ப்பது சிறப்பு தாசில்தார்தான். சிவகாசியை சுற்றியுள்ள 800 பட்டாசு ஆலைகள், 200 பட்டாசு விற்பனைக் கடைகள், 100 பட்டாசு மூலப்பொருள்கள் விற்பனைக்கடைகள் ஆகியவற்றைக் கண்காணிப்பது, சோதனை செய்வது என முழு அதிகாரமும், பொறுப்பும், சிறப்பு தாசில்தாரையே சேரும். பட்டாசு ஆலை விதிமுறை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க, புதிதாக லைசென்ஸ் வழங்க, புதுப்பிக்க என எதைத் தொட்டாலும் கரன்சிகள் கொட்டும். அதனால், இந்தச் சிறப்பு தாசில்தார் பணிக்கு வர, தாசில்தார்கள் இடையே கடும் போட்டியே நிலவும். இந்தப் பதவிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு, லட்சக்கணக்கில் ஏலம் போகும். இப்போது இந்தப் பதவியில் இருப்பவர் முத்துலட்சுமி.

சப் கலெக்டர்: சிறப்பு தாசில்தாரின் பரிந்துரையை ஓகே செய்வது சிவகாசி ஆர்.டி.ஓ அல்லது சப் கலெக்டரின் பணி. ஆனால், சிறப்பு தாசில்தார் என்ன பரிந்துரை செய்தாலும், அதைத் தட்டாமல் கையெழுத்துப் போட்டு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு அனுப்பி வைப்பது இவர்களது வழக்கம். இவர்களையும் குளிர வைக்கிறார்கள் பட்டாசு ஆலை அதிபர்கள். இப்போது, சப் கலெக்டராக அமர்சுஷ்வாஹா இருக்கிறார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர்: பட்டாசு ஆலை மற்றும் பட்டாசுக் கடைகளைத் தொடங்குவதற்கு, லைசென்ஸ் புதுப்பிப்பதற்கு, ‘எந்த வில்லங்கமும் இல்லை’ என என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்குவது, ஒவ்வொரு ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டரின் பணி. இவர்களும் கணிசமாக லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் தடையில்லா சான்றிதழ் கொடுக்கிறார்கள். இப்போது, தீ விபத்து நடந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்.

இவர்கள் சாவுக்கு... இவர்கள்தான் காரணமா? கரன்சி பசி!

தீயணைப்புத் துறையினர்: புதிதாகப் பட்டாசு ஆலை தொடங்குவதற்கும்,  லைசென்ஸ் வழங்குவதற்கும் தீயணைப்புத்துறையினரின் சான்றிதழ் அவசியம். ஆலையோ, கடையோ, தீ தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது என தீயணைப்புத் துறைதான் சான்றிதழ் வழங்க வேண்டும். நகராட்சி மற்றும் யூனியன் இன்ஜினீயர்களும் பட்டாசுத் தொழிலுக்கான கட்டடங்களின் உறுதித்தன்மை பற்றி சான்றிதழ் வழங்க வேண்டும். இவர்கள் எல்லோரும் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தங்களது துறை சார்பில் ஓ.கே செய்து சான்றிதழைத் தந்துவிடுகின்றனர். தீயணைப்பு நிலைய அலுவலராக இப்போது இருப்பது முருகன். 

மாவட்ட வருவாய் அலுவலர்:  போலீஸ்,  தீயணைப்புத் துறை, நகராட்சி இன்ஜினீயர்கள், சிறப்பு தாசில்தார் ஆகியோர் பட்டாசு ஆலை மற்றும் கடைகளுக்கு லைசென்ஸ் வழங்குவதற்குப் பரிந்துரை செய்வார்கள். அடுத்தகட்டமாக, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தப் பரிந்துரைகள் சரியாக இருக்கிறதா என நேரில் சென்று ஆய்வுசெய்து ஓ.கே செய்வார். அவர் தரும் லைசென்ஸை அடிப்படையாகக் கொண்டுதான், மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை லைசென்ஸ் வழங்கும். லஞ்சத்துக்கும், முறைகேடுகளுக்கும் மூளையாக இருப்பது மாவட்ட வருவாய் அலுவலகம்தான். முத்துக்குமரன்தான் இப்போது மாவட்ட வருவாய் அலுவலராக இருக்கிறார். சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பொது மேலாளராகப் பணியாற்றிய முத்துக்குமரன், பட்டாசுத் தொழிலை நம்பித்தான் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக மாறிவந்தார் என பேச்சு இருக்கிறது.

இவர்கள் சாவுக்கு... இவர்கள்தான் காரணமா? கரன்சி பசி!

கலெக்டர்: 2002-ம் ஆண்டில், சிவகாசி சப் கலெக்டராக இருந்தவர் சிவஞானம். தலைமைச் செயலகத்தில் தேர்தல் கமிஷனில் இணை கமிஷனராகப் பணியாற்றியவர். சமீபத்தில், ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு பெற்ற இவர், ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் சிபாரிசுகள் பெற்று விருதுநகர் கலெக்டராகி இருக்கிறார். சிவகாசியில் சப் கலெக்டராக இருந்ததால் பட்டாசுத் தொழிலின் நெளிவு சுளிவுகள் அனைத்தும் சிவஞானத்துக்கு அத்துப்படி. பட்டாசு ஆலைகள் ஆய்வு,  முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் சிறப்பு அதிகாரங்கள் கலெக்டருக்கு உண்டு.

போலீஸ் எஸ்.பி: பட்டாசு தொழிலை பொருத்த வரையில், மாவட்ட கலெக்டருக்கு என்ன ரோல் இருக்கிறதோ அதேதான் மாவட்ட எஸ்.பி-க்கும்.  லோக்கல் இன்ஸ்பெக்டர்கள் தடையில்லா சான்றிதழ் வழங்குவதைக் கண்காணிப்பது, பட்டாசுகள் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் குடோன்களைக் கண்காணிப்பது என பல அதிகாரங்கள் உண்டு. விருதுநகருக்கு புதிதாக வந்திருக்கும் எஸ்.பி-யான ராஜராஜன், மதுரை மாநகர போலீஸில் துணை கமிஷனராக இருந்தவர். சமீபத்தில்தான், விருதுநகர் எஸ்.பி-யாக மாறுதல் பெற்று வந்தார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி: சிவகாசி எம்.எல்.ஏ-வான ராஜேந்திரபாலாஜி, பட்டாசு ஆலை அதிபர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டுகள் படிக்கப்படுகின்றன.

இது கோவை சோகம்!

சிவகாசி தீ அணைவதற்குள் கோவையில் தீப்பற்றியது. கோவை காந்தி பார்க் ஐ.ஏ.எஸ் அகாடமியில்   ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழக்க... மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் உட்பட 5 பேர் தீவிரச் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இவர்கள் சாவுக்கு... இவர்கள்தான் காரணமா? கரன்சி பசி!

இந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் 21-ம் தேதி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி நடந்தது. 150 மாணவிகள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது, தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ, கட்டடம் முழுக்கப் பரவியது.  கட்டடத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் பொருட்கள் வெடித்துச் சிதறின. புகை மண்டலத்தில் சிக்கித் தவித்த மாணவர்கள் பெரும்பாடுபட்டே வெளியேறினர். கொளுந்துவிட்டு எரிந்த கட்டடத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்த 6 பேரை இரண்டாவது தளத்தில் இருந்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் சக்திவேல் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். ‘தீபாவளிக்காக ஊழியர்களுக்கு தருவதற்காகப் பட்டாசுகள் பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம்’ என சொல்லப்பட்டது. ஆனாலும், விபத்துக்குப் பட்டாசு காரணமல்ல என மறுத்துள்ளது காவல்துறை. தீ விபத்தின் போது, பட்டாசுகள் வெடித்தச் சத்தத்தைக் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் சொல்லி​யுள்ளனர். ‘கட்டடத்தில் பட்டாசு இருந்தது’ என முதலில் தகவல் சொன்ன ஊழியர்கள், பின்னர் அதை மறுத்தனர்.

இது விழுப்புரம் சோகம்!

விழுப்புரம் வானூருக்கு அருகே துருவை கிராமத்தில் ராவுத்தன்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ், பட்டாசு ஆலை நடத்தி வந்தார். அக்டோபர் 9-ம் தேதி தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பயங்கரச் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 5 தொழிலாளர்கள் உடல் சிதறித் தூக்கியெறியப்பட்டு பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர். தரைமட்டமாகின. சிமென்ட் கற்கள் சுமார் 700 மீட்டர்  உயரத்துக்குப் பறந்து விழுந்தன. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, பட்டாசுகளை அளவுக்கு அதிகமாகக் குவித்ததுமே அதிக உயிரிழப்புக்குக் காரணம். ஆலையின் உரிமையாளர் ரமேஷ் சரணடைந்த நிலையில், முக்கியக் குற்றவாளியான மேலாளர் சேகர் இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். ஏற்கெனவே, சேகருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அடுத்தடுத்து விபத்துகள் நடந்தும், அதே நபர்கள் பட்டாசு ஆலைகளை நடத்துவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்களுக்கு மட்டும் தெரிவதே இல்லை. மாமூலும் இலவசப் பட்டாசுகளும் கண்களை மறைக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...