News
Loading...

மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படாத கேமராக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படாத கேமராக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதில் பொறியாளர்கள் மெத்தனம் காட்டுவதால், மருத்துவமனை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இங்கு, சிகிச்சை பெறுபவர்கள், பணிபுரிபவர்கள், கட்டட வேலை செய்பவர்கள் என நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

குழந்தை திருட்டு, அலைபேசி திருட்டு, புரோக்கர்கள் நடமாட்டம், 'ஸ்டிரெச்சர்' தள்ளுதல், அறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவமனை பொறியாளர்களின் மெத்தனம் காரணமாக முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பல கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதில்லை.

பொறியாளர்களிடம், மருத்துவமனை நிர்வாகிகள் முறையிட்டால் அவர்களிடம் பொறியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது குறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: கண்காணிப்பு கேமராக்களின் பழுதை சரி செய்யுமாறு பொறியாளர் ஒருவரிடம் முறையிட்டால், அவர், ''எனது உயர் அதிகாரி அவருக்கு வேண்டிய கான்ட்ராக்டரை வைத்து கேமராக்களை பொருத்தினார். எனவே அவரிடம் கேளுங்கள்'' என்கிறார்.
கேமராக்களை அமைத்த நிறுவனம் அந்த குறிப்பிட்ட பொறியாளரை 'கவனிக்க' தவறியதே அவருடைய தற்போதைய நிலைப்பாட்டுக்கு காரணம்.

மருத்துவமனை பொறியாளர்களால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. அரசு, 'குழு' ஒன்றை ஏற்படுத்தி அவற்றை விசாரிக்க வேண்டும், என்றார். இது குறித்து தமிழ்நாடு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறுகையில், ''பொறியாளர்கள் உடனடியாக பழுதான கேமராக்களை சரி செய்து, மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால், சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்'', என்றார்.

பொறியாளர்கள் மெத்தனம் வாடிப்பட்டி மீனாட்சி என்பவரது குழந்தை காணாமல் போன வழக்கும், 300 ரூபாய் லஞ்சம் கேட்டு 'ஸ்டிரெச்சர்' தள்ள மறுத்ததன் காரணமாக உயிரிழந்த ராஜேந்திர பிரசாத் குறித்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு அடுத்து, மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பொறியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால், மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...