News
Loading...

'ஸ்மார்ட் கார்டு' பெற ஆதார் எண் பதிவு...கட்டாயம்! முன்னுரிமை அடிப்படையில் வழங்க திட்டம்

'ஸ்மார்ட் கார்டு' பெற ஆதார் எண் பதிவு...கட்டாயம்! முன்னுரிமை அடிப்படையில் வழங்க திட்டம்

கடலுார் மாவட்டத்தில் ஆதார் எண் விவரங்கள் பதிவு செய்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும், போலி ரேஷன் கார்டுகளை நீக்கவும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. கடலுார் மாவட்டத்தில் 7 லட்சத்து 5 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. 

இதில், முதல் கட்டமாக 6 லட்சத்து 84 ஆயிரம் கார்டுகளை 'ஸ்மார்ட்' கார்டுகளாக வழங்க கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட்' கார்டுகள் வழங்க ரேஷன் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவிகள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது. 

நேற்று முன்தினம் வரை, மாவட்டத்தில் 60 சதவீதம் ரேஷன் கார்டுகளின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளின் பயன்பாடு காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

வரும் ஜனவரி மாதம் முதல் 'ஸ்மார்ட்' கார்டு மூலமாக பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, வரும் நவம்பர் முதல் 'ஸ்மார்ட்' கார்டுகள் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இதனால், ஆதார் எண் விவரங்கள் பதிவு செய்யும் பணியை விரைந்து முடிக்க நுகர்வோர் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் ஆதார் எண் விவரங்கள் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படும். தாமதமாக பதிவு செய்பவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு தாமதமாக வழங்கப்படும். இதனால் ஆதார் எண் அளிக்காதவர்கள் உடனடியாக அதன் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

ஆதார் எண் பதிவு செய்வதில் ஏற்படும் குளறுபடிகள் அந்தந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் மூலமாக சரி செய்யப்படுகிறது' என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...