News
Loading...

பேரழிவில் காக்கும் ஸ்மார்ட் கட்டிடம்!

பேரழிவில் காக்கும் ஸ்மார்ட் கட்டிடம்!

நிலநடுக்கம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள், விபத்துகள், தேய்மானம் உள்ளிட்டவற்றால் கட்டிடங்கள் தொடர்ந்து சேதமாகின்றன. ஆனால் கட்டிடத்தின் சேதாரம்  வெளியே தெரிய சிறிது காலம் பிடிக்கும். 

நாளடைவில் கட்டிடமே வலுவிழந்து அங்கு வாழ்பவர்களின் தலையில் விழுந்து செய்தியாகும்போதுதான் கட்டிட பலவீனம் ஊருக்கே வெளிச்சமாகும். ஆனால் இனி அப்படி தேமே என்று உட்கார்ந்திருக்க தேவையில்லை. அறிவியல் இருக்க ஏன் அஞ்சவேண்டும் என அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(எம்.ஐ.டி)யைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பின் மூலம் தோளை உயர்த்தி நம்பிக்கை தருகிறார்கள்.

நிலநடுக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் கட்டிடங்களின் தன்மையை எளிதில் அறியும் புது டெக்னிக்கை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டிடத்தின் வலிமையை  இதன் மூலம் எளிதாகக் கணக்கிடலாம். 

‘‘வயதாகும்போது அதற்கேற்ப உடலின் ரத்த அழுத்தம் மாறுபடுவது போல கட்டிடத்தின் தன்மையை இதன் மூலம் பதிவு செய்யலாம்’’ என நம்பிக்கை பொங்க பேசுகிறார் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சிவில் மற்றும் சூழல் பொறியியல் கட்டிடத்துறையின் (CEE) பேராசிரியரான ஓரல் ப்யூகோஸ்டர்ட்.

புத்தம் புதிய இந்த டெக்னிக்கை சோதித்துப் பார்க்க, 1960ம் ஆண்டு இரும்புக் கம்பிகள் பதித்த கான்க்ரீட்டால் கட்டப்பட்ட 21 மாடி க்ரீன் பில்டிங் எனும் கட்டிடத்தின் மேல்தளங்களைப் பயன்படுத்தினர். 36 ஆக்சிலரோமீட்டர்களைப் பொருத்தி, கட்டிடத்தின் அதிர்வுகளை துல்லியமாகக் கண்டறிய முயற்சித்தனர். ஏறத்தாழ இந்த சென்சார்கள் மனிதனின் நரம்பு மண்டலம் போல செயல்பட்டு அதிர்வுகளைப் பதிவு செய்கின்றன. 

கட்டிடங்களின் சுவர், விட்டங்களின், படிக்கட்டுகளின் அடர்த்தி ஆகியவற்றை முதலில் நன்கு திட்டமிட்டபின்னர்,  ஒரு வாகனம் கட்டிடத்தில் மோதினால் ஏற்படும் அதிர்வுகளைக் கணித்து கட்டிட மேல்தளங்களில் சோதனை செய்தனர்.  

இந்த சோதனை கட்டிடத்தின் பல்வேறு அளவுகளைத் தோராயமாகக் கணக்கிட்டு உருவாக்கப்பட்டது. துல்லியமான அளவுகளைக் கொண்டு இச்சோதனை செய்யப்படும்போது பெறப்படும் தகவல்களே ஆராய்ச்சிக்கு உதவக்கூடியது என தீர்மானகரமாகப் பேசுகிறார் பேராசிரியர் ப்யூகோஸ்டர்ட். 

கட்டிடங்களின் சேதத்தை இக்கருவிகளின் மூலம் அறிவது கட்டிடங்களை குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு ஏற்ப கட்டவும், விபத்தில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகும் அவலத்தைஅறிந்து மக்களைக் காப்பாற்றவும் உதவும். 

‘‘கட்டிடத்தில் ஒரு வாகனம் மோதும்போது அந்த அதிர்வு கீழேயிருந்து மேல் கூரைக்கு எப்படி, எந்த திசையில் பயணிக்கிறது என்பதை கணக்கிட்டு வருகிறோம். சென்சார்களோடு இணைக்கப்பட்ட அல்காரிதம் மூலம் இதனை முழுமையாக கண்டறியும்போது கட்டிடங்கள் அறிவார்ந்தவையாக மாற, விபத்துகளும் குறையும்’’ என தொலைநோக்கு திட்டத்தினை கண்களில் தேக்கியபடி பேசுகிறார் இந்தத் திட்டத்தின் துணை ஆராய்ச்சியாளரான ஹாவோ ஷன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.