News
Loading...

‘‘கண்ணீரில் உப்பு எடுக்கிற பாவிகள்!’’ - நாஞ்சில் சம்பத் ‘நச்’

‘‘கண்ணீரில் உப்பு எடுக்கிற பாவிகள்!’’ - நாஞ்சில் சம்பத் ‘நச்’

எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் மோடி அரசு உளவு பார்க்கிறதா?’ என்கிற சர்ச்சைக்கு அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் என்ன சொல்கிறார்?

“நீண்ட நாட்கள் அரசு நிர்வாகம் செயல்படாமல் இருக்கக் கூடாது என்ற அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்​துள்ளனவே?”

“அதைக் கண்காணிப்பதற்கும், கவனிப்பதற்கும் ஆளுநர் இருக்கிறார். ஆளுநரே அதனைத் தீர்மானிப்பார். எனவே, இதுகுறித்து கருத்துச் சொல்லத் தேவையில்லை. அந்தத் தேவை இப்போது எழவும் இல்லை.”

“நீண்ட நாட்கள் அரசு நிர்வாகம் முடங்கி இருப்பது தமிழகத்தின் நலனைப் பாதிக்காதா?”

“தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் எப்படிப் போக வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவாக அறிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில், பொதுப்பணித் துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் ஆளுநர் கருத்துக் கேட்டுள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  ஆகவே, அரசு முடங்கிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றப் பேச்சு.”

“முதல்வரின் கையொப்பத்துக்காக நிறையக் கோப்புகள் காத்திருப்பதாகக் கூறுகிறார்களே?”

“அது ஒரு தகவல்தான். தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.” 

“முதல்வர் எப்போது வீடு திரும்புவார்?”

“முதல்வர் ஒவ்வொரு நாளும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.”

“ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் பொறுப்பு முதல்வராகப் பதவி ஏற்கக்கூடும் என்று செய்திகள் வருகின்றனவே?”

“ ‘அதைப்பற்றி பேசவில்லை’ என்று ஆளுநரே அறிக்கை தந்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் ஆளுநர் கேட்டுள்ளார். அதனால், பொறுப்பு முதல்வரை நியமிப்பதற்கான நேரம் வந்ததாகத் தெரிய​வில்லை.”

“எய்ம்ஸ் மருத்துவர்களை வைத்து மோடி அரசு உளவு பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்களே?”

“இது காங்கிரஸ் - பி.ஜே.பி. கட்சிகளுக்கு இடையிலான பனிப்போரின் வெளிப்பாடு. ராகுல் காந்தி வந்து முதல்வரை நலம் விசாரித்துச் சென்றதை அ.தி.மு.க. வரவேற்கிறது. ஆனால், இதிலும் அரசியல் செய்கிறவர்கள் ‘கண்ணீரில் உப்பெடுக்கிற பாவிகள்’ என்றே சொல்வேன்!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.