News
Loading...

கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் !

கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் !

ரொம்ப காலமாய் நம் பாக்கெட்டுக்கு பழுதில்லாமல் பலசரக்கு விற்ற அண்ணாச்சி தான்... இப்போது முன்னேறி சூப்பர் மார்க்கெட் வைத்துவிட்டார். ‘உள்ளே போகலாமா? வேண்டாமா?’ - இதுதான் கூகுள் விசிறிகளின் இன்றைய இன்றியமையா கேள்வி. ‘ஹார்டுவேரும் நானே சாஃப்ட்வேரும் நானே’ என ஆரம்பம் முதலே அடம் பிடிக்கும் ஆப்பிளுக்கு போட்டியாக, பல்வேறு ஹார்டுவேர் நிறுவனங்களுடன் கைகோர்த்து தனது ஆண்ட்ராய்டை முன்னேற்றியது கூகுள். 

இப்போது அதே கூகுள் ஆப்பிள் வழிக்கே திரும்பி முழுக்க முழுக்க தனது தயாரிப்பாக வெளியிட்டிருக்கும் போன், ‘பிக்சல்’. இந்த போனின் விலை, நம்மூர் மதிப்பில் சுமார் 60 ஆயிரம் ரூபாய். சமீபத்திய ஆப்பிள் 7 மற்றும் 7 ப்ளஸ்களுக்கு கொஞ்சமும் குறைவில்லா ரேட்!

‘அட, ஆண்ட்ராய்டின் சிறப்பம்சமே விலைதானே. ஆப்பிள் சீன் பார்ட்டிகளுக்கு மத்தியில் ஏழைக்கு ஏற்ற இலந்தைப் பழமாக இருந்தது அதுதானே’ என டென்ஷன் ஆகாதீர்கள். விலைக்கு ஏற்ற விஷயத்தை இதில் வைத்திருக்கிறது கூகுள். பல நாட்களாக பரிசோதித்து உருவாக்கப்பட்ட கூகுளின் செயற்கை நுண்ணறிவு முதன்முதலாக இந்த போனில்தான் ஊட்டப்பட்டிருக்கிறது. ‘ஓகே கூகுள்’ என்ற ஒற்றை மந்திரம்தான்... அதைச் சொல்லி இந்த போனை வைத்து நீங்கள் எதையும் செய்யலாம். 

வெறும் இணையத் தேடல் மட்டுமில்லாமல், இந்த கூகுள் அசிஸ்டன்ஸ் நமது அன்றாடப் பணிகளை ஒரு மேனேஜர் போல நினைவுறுத்தும், குரல் கட்டளையை வைத்தே புகைப்படங்களைத் தேடும், நம் பயணத் தடங்களை பதிவு செய்து வைக்கும், மொழிபெயர்ப்பைக் கூட மில்லி செகண்டில் தரும். சரி, வேறென்ன பிக்சலில் ஸ்பெஷல்? சந்தேகமில்லாமல் கேமரா. ‘உலகில் இதுவரை வந்த செல்போன் கேமராக்களிலேயே இதுதான் பெஸ்ட்’ என சத்தியம் செய்கிறது கூகுள். இதுவரை நாம் மெகா பிக்சல்களை வைத்துதானே கேமராவை தரம் பிரித்தோம். 

அதை மாற்றிவிட்டது கூகுள். ‘எங்கள் கேமரா 12.3 மெகா பிக்சல்தான். ஆனால், ஒவ்வொரு பிக்சலும் 1.55 மைக்ரோமீட்டர் அளவு கொண்டது. அதனால் எந்த வெளிச்சத்திலும் இது சிறந்த போட்டோவைத் தரும்’ என்கிறது கூகுள். இனி போன் வாங்கும் போது பிக்சல்களின் அளவையும் பரிசோதிக்கத் தொடங்கிவிடும் யூத் வர்க்கம். பிக்சல், பிக்சல் எக்ஸ்.எல் என இரண்டு அளவுகளில் இந்த போன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போன்களுடன் தனது கிளவுட் நினைவகத்தையும் இணைத்து, வரம்பில்லாமல் தகவல் சேமித்துக்கொள்ள வழி செய்திருக்கிறது கூகுள். 

ஏற்கனவே எல்.ஜி., சாம்சங் என ஏதாவது ஒரு கம்பெனியுடன் இணைந்து தனது நெக்சஸ் போன்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தது கூகுள். அதையே மேம்படுத்தி இந்த வசதிகளைக் கொடுத்திருக்கலாம். எதற்காக முழு முதலாய் இப்படி ஒரு புதிய போன்? எல்லாம் ஆப்பிளாக மாறிவிடும் ஆசைதான். கூகுள் எப்போதும் பி, சி ஆடியன்ஸை திருப்திப்படுத்தி வசூலை அள்ளிக் கொண்டிருந்தாலும், ஆப்பிள் தன் இடத்தில் இருந்து இறங்கி வரவே இல்லை. அது தன் வாடிக்கையாளர்களையும் இழக்கவில்லை. மாறாக, ஆண்ட்ராய்டு பயன்படுத்திப் பழகியவர்கள் அடுத்த கட்ட கெத்து தேடி ஆப்பிளிடமே சரணடைகிறார்கள். 

‘என்ன பெரிய ஆண்ட்ராய்டு... 3 ஆயிரம் போன்ல கூடத்தான் அது இருக்கு’ என்ற இமேஜ், கூகுளுக்கு பெரும்தடை. கடைசி வரை மேல்தட்டு பீட்டர்களை தான் கவராமலே போய்விடுவோமோ என்ற கூகுளின் கவலைக்கு விடைதான் பிக்சல். ஆப்பிள் 7 வெளியாகட்டும் என பதுங்கிப் பாய்ந்திருப்பதிலேயே இந்த நோக்கம் வெட்ட வெளிச்சம். இனி அடுத்த ஏழெட்டு மாதத்துக்கு ஆப்பிளிடம் அப்டேட் இருக்காது. அதுவரை மார்க்கெட்டின் சிறந்த போன் பிக்சல்தான். இதுதான் கூகுள் வைத்த குறி.

இதுநாள் வரை கூகுள் சம்பாதித்து வைத்திருந்த ரசிகர்கள், இப்போது செம கடுப்பில் இருக்கிறார்கள். காரணம், காலம் காலமாய் ஆண்ட்ராய்டின் புதிய பதிப்புகளை அள்ளி வந்த நெக்ஸஸ் போன்கள் இனி அவ்வளவு தான் என்ற நிஜம். ஓரளவு நடுத்தர பட்ஜெட் போனான நெக்ஸஸை கைவிட்டுத்தான் பிக்சலைக் கையில் எடுத்திருக்கிறது கூகுள் என்கிறார்கள். ‘இனி நெக்ஸஸ் போன்கள் இரண்டாம் பட்சமாகிவிடுமே... வழக்கமான அப்டேட்கள் கிடைக்காதே... மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தானே கூகுள் அதைப் பார்க்கும்...’ இப்படிப்பட்ட கடுப்புகள் அவர்களிடம். 

ஆனால், கூகுள் இது பற்றி அலட்டிக்கொண்டதாய் தெரியவில்லை. தனது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அளவுக்கு தரம் உயர்ந்துவிட்டதாகவே அது உறுதியாக நம்புகிறது. குறிப்பாக, இந்தியர்கள். ஆப்பிள் ஐபோன் 7க்கு இந்தியாவில் குவிந்த ஆர்டர்களைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறது கூகுள். அதனாலேயே பிக்சல் முதல் கட்டமாக வெளியிடப்படும் முக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

அவ்வளவு ஏன், உலகத்துக்கே ‘இதுதான் பிக்சல்’ எனக் காட்டும் விளக்கப்படத்தில் கூட, ‘மும்பையில் இன்று வானிலை எப்படி?’ என கூகுள் அசிஸ்டன்ஸிடம் கேள்வி கேட்பது போலத்தான் டெமோ காட்டப்படுகிறது. ஆக, ‘இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது. அதற்கு ஏற்ப நாமும் உயர வேண்டும்’ என நினைத்து இறங்குகிறது கூகுள். இது நிஜமான கணிப்பா இல்லை மத்திய, மாநில அரசுகளின் தம்பட்டத்தை கூகுள் நம்பி மோசம் போகிறதா என்பது பிக்சலின் வெற்றி, தோல்வியில் தெரிந்துவிடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.