News
Loading...

சீனப்பட்டாசுகளுக்கு தடை!

சீனப்பட்டாசுகளுக்கு தடை!

அடுத்த சில நாட்களில், ‘இல்லந்தோறும் கொண்டாட்டம், உள்ளங்களில் மகிழ்ச்சி’ என்றவகையில், தீப ஒளி திருநாளாம் தீபாவளி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள், விதவிதமான பலகாரங்கள் என்று எத்தனையோ இருந்தாலும், தீபாவளிக்கு முத்திரை என்றால் அது பட்டாசுதான். பட்டாசு உற்பத்தி என்றாலே, அது விருதுநகர் மாவட்டம், சிவகாசி தான். 1923–ம் ஆண்டு ஒரு பட்டாசு தொழிற்சாலை உருவாகி இன்று 911 பட்டாசு ஆலைகள் சிவகாசி பகுதியில் இயங்கிவருகின்றன. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுவருகிறார்கள். இந்தப்பகுதி மக்கள் அனைவருமே இங்குள்ள வறட்சிநிலையை கருத்தில்கொண்டு பிழைப்புக்காக பட்டாசு தொழிலையே நம்பியிருக்கின்றனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சீனப்பட்டாசுகள் நாட்டில் நுழைவதால், சிவகாசி பட்டாசு தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கோ, கையிருப்பில் வைத்திருப்பதற்கோ, விற்பதற்கோ, மத்திய–மாநில அரசுகள் யாருக்கும் ‘லைசென்ஸ்’ கொடுக்கவில்லை. ஆனால், சட்டவிரோதமாக சீனப்பட்டாசுகள் பொம்மைகள் என்ற பெயரிலும், இரும்பு கழிவுகள் என்ற பெயரிலும் கண்டெய்னரில் வைத்து அடைக்கப்பட்டு, கொல்கத்தா, தூத்துக்குடி உள்பட பல துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைந்துவிடுகிறது. ஆங்காங்கே பதுக்கிவைக்கப்பட்டுவிட்டு, தீபாவளி நேரத்தில் குறைந்தவிலைக்கு மார்க்கெட்டுக்கு வந்துவிடுகிறது. இந்த பட்டாசுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. சமீபத்தில் மத்திய அரசாங்கம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பட்டாசுகள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்று தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறது. இந்தியாவில் பட்டாசு உற்பத்திக்கு தடைச்செய்யப்பட்ட ‘குளோரேட்’ என்னும் ரசாயனப்பொருளுடன், ‘சல்பரேட்’ அல்லது ‘சல்பர்’ கலந்த இந்த சீனப்பட்டாசுகள் தானாகவே தீப்பற்றி எரியக்கூடியது. உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும், சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்கும். நமது வெடி வகைகளில் ஏற்படும் சத்தத்தைவிட, சீனப்பட்டாசுகள் செவித்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகசத்தத்தை ஏற்படுத்துபவையாகும். இப்போது புதிதாக சீனப்பட்டாசுகளை, இந்திய பட்டாசு கம்பெனி லேபிள்களோடு விற்பனை செய்யும் முயற்சியும் நடப்பதாக கூறுகிறார்கள்.

சீனப்பட்டாசு ஏதோ ஒரு பெயரில் நாட்டுக்குள் நுழைவதை சுங்க இலாகா தடுக்காமல் விட்டதே தவறு. நிச்சயமாக விழிப்புடன் இருந்திருக்கவேண்டும். கண்டெய்னர்களில் என்ன கொண்டுவந்தாலும் தடுக்கமுடியாது என்றநிலை இருக்கவே கூடாது. நவீன ஸ்கேனர்களை பயன்படுத்தவேண்டும். எதிர்காலத்திலாவது இவ்வாறு வேறு பெயர்களில் சீனப்பட்டாசு உள்ளே நுழைவதை தடுக்கும் பெரும் பொறுப்பை துறைமுக பொறுப்பு கழகங்களும், சுங்க இலாகாவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த ஆண்டு சீனப்பட்டாசு விற்பனையை, பதுக்கலை தடுக்க அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு குழுக்கள் அமைத்து, இப்போதே ஆங்காங்கு சோதனையிடவேண்டும். சீனப்பட்டாசு லேபிள்களில் முன்பெல்லாம் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகம் மட்டும் இருந்தது. இப்போது பி.ஆர்.சி. அதாவது, ‘பீப்பிள் ரிபப்ளிக் சைனா’ என்ற பெயரிலும் அச்சடித்து அனுப்பப்படுகிறது. ‘பார் கோடு’ மூலமும் சீனப்பட்டாசுகளை கண்டுபிடித்துவிடலாம். 690 என்ற ‘பார் கோடு’ இருந்தால் நிச்சயமாக அது சீனப்பட்டாசுதான். இதையெல்லாம்விட, எந்தவொரு மத்தாப்பையும் தீயினால் கொளுத்தினால் ஒரு வினாடியில் அது பற்றிக்கொண்டால் நிச்சயமாக அது சீன தயாரிப்புதான். ஒருசில வினாடிகள் எடுத்துக்கொண்டால் அது நம்மூர் தயாரிப்பு. இப்படி எந்தெந்தவகையில் சீனப்பட்டாசுகளை கண்டுபிடிக்கமுடியும் என்பதை அதிகாரிகள் திட்டமிட்டு இப்போதே சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.