News
Loading...

நீரில் மிதக்கும் சொர்க்கம்

நீரில் மிதக்கும் சொர்க்கம்

நிலத்தில் விண்முட்டும் கட்டிடங்கள் கட்டிய பிறகு, அடுத்து என்ன என்ற கேள்வி மனதில் வந்த பில்லியனர்களின் பார்வை படுவது கடலில் மிதக்கும் பல்வேறு வசதிகள் கொண்ட கப்பல்கள் (அ) படகுகள் மீதுதான். குட்டி படகுகளை முதலில் தம் தேவைக்கு வாடகைக்கு எடுப்பவர்கள், பின்னர் அதன் வசதிகளில் மெய்மறந்து கப்பலையே சொந்தமாக்கி தமது குடும்பத்தினரோடு விடுமுறையைக் கழிக்கவும், ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். இவ்வகையில், வாடகைக்குத்  தயாராக உள்ள மிதக்கும் சொர்க்க மாளிகைகளான படகுகளை டாப் டூ பாட்டம் அலசுவோமா? 

நீரில் மிதக்கும் சொர்க்கம்

11-11 

நம்புங்கள்! இது சொகுசு படகின் பெயர்தான். மது அருந்த பார்,  சர விளக்கு அலங்காரங்கள், வண்ண ஓவியங்களால் இன்டீரியர் என  வடிவமைக்கப்பட்ட இதன் உள்ளேயே சொகுசு நீராவிக் குளியலோடு மசாஜையும் கதகதப்பாக கம்பீர சுகத்தோடு அனுபவிக்கலாம்! 63 மீட்டர் நீளம் கொண்ட இப்படகில் பயணிக்க வாரக் கட்டணம் 4 கோடியே 87 லட்சம் ரூபாய். 12 பேர் இப்படகில் தங்கி குதூகலமாக ரிலாக்ஸ் செய்யலாம். உங்களுக்கு சேவை செய்ய பிரத்யேகமாக 16பணியாளர்களும் உண்டு. 

அகிஜோ 

இதன் அட்டகாசமான உள் பகுதி ஓவியங்கள் உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் வசீகர அழகு கொண்டவை. மரச் சுவர்கள் போன்ற இன்டீரியர், மொசைக் பதிக்கப்பட்ட உடற்பயிற்சி மற்றும் மசாஜ் அறைகள், பாத்ரூம் என என்ன வேண்டும் உங்களுக்கு? அனைத்துமே இங்கு உண்டு. ஒவ்வொரு அறைக்கும் தனியாக டி.வியும், நீர் விளையாட்டுக் கருவிகளும் கிடையாது என்பது மட்டும்தான் குறை. 85 மீட்டர் நீளமுள்ள, 12 பேர் 
பயணிக்கவும், பணிவிடைகளுக்கு யெஸ் சார் சொல்லும்  17 ஊழியர்களையும் கொண்ட இக்கப்பலின் வார வாடகை 2 கோடியே 99 லட்சம் ரூபாய்தான் மகாஜனங்களே! 

டைமண்ட் ஏ 

மார்பிள்கள் பதிக்கப்பட்ட பாத்ரூம், இளம் சிவப்பு நிறத்தில் அசரடிக்கும் குழந்தைகள் அறை, மற்றுமுள்ள 5 அறைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். வெளியே உள்ள மது அரங்கிற்கு  எதிரில், ரசிக்க ஏதுவாய் மெகாசைஸ் திரைப்பட ஸ்கிரீன் கூட உண்டு. ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வமா? அதற்கான பிரத்யேக வசதிகளும் உண்டு. 57 மீட்டர் நீளம் கொண்ட டைமண்ட் ஏ கப்பலின் வார வாடகை 2 கோடியே 24 லட்ச ரூபாய் என்றால் நம்பத்தானே வேண்டும்! 12 பேர் பயணிக்க முடியும் இக்கப்பலில் உங்களுக்கு சல்யூட் செய்து ராயல் சேவைகளைச் செய்ய  15 ஊழியர்கள் ரெடி!
 
குளோபல் 

இந்தக் கப்பலின் மேல்தளத்தில்  ஹெலிபேட் வசதி உள்ளதால், இக்கப்பலுக்கு நேரடியாக ஹெலிகாப்டரிலேயே வந்து கெத்தாக இறங்கலாம். பெரிய அளவு வட்ட வடிவ ஜன்னல், அகலமான வராண்டாக்களில் விருப்பமான ஷாம்பைன் சுவைத்தபடி   நடந்து மனதை ரிலாக்ஸ் செய்யலாம். இக்கப்பலில் பயணம் செய்ய குறைந்தது 3 வாரங்களுக்கு புக் செய்ய வேண்டியது அவசியம். 13 ஊழியர்களின் கண்ணும் கருத்துமான பராமரிப்பில் 12 பேர் சுகமாகத் தங்க முடியும் இந்த 67 மீட்டர் நீளக் கப்பலில் ஒரு வாரம் தங்க 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டுமேதான் செலவு. 
 
லேடி லக்

இந்த 6 கேபின்கள் கொண்ட லேடி லக் சொகுசு கப்பலில் லினன் படுக்கைகள், அற்புதமான தரத்தில் விளக்குகள் என ஃபென்டி எனும் இத்தாலி நிறுவனம் பொறுப்பேற்று அசத்தலாக அமைத்துள்ளதால் லேடி லக் பயணிகளின் ரேட்டிங்கில் ஹிட் அடிக்கிறது. 24 காரட் தங்கத்தில் மெருகூட்டப்பட்ட லிப்ட், ஜில் ஏ.சி. வசதி கொண்ட ‘ஜிம்’ மற்றும் உடல் அசதி போக்கும் நீராவிக்குளியல் வசதிகளும் உண்டு. 15 பணியாளர்களின் நல்ல கவனிப்பில் 12 பேர் தங்கும் இந்த 59 மீட்டர் கப்பலில் ஒரு வாரம் தங்க வாடகை 2 கோடியே 36 லட்சம் ரூபாய் என்றால் பரவசம்தானே!
 
ஷெராகான்

இதை சொகுசு படகு என்பதை விட சிறிய கப்பல் எனலாம். இதில்  ஹெல்த் கிளப் உள்ளது. முழு நேர அழகு சிகிச்சை நிபுணரும் உங்களை அழகுபடுத்த காத்திருக்கிறார். உள்ளே போய் திரும்பும்போது நானா இது என ஆச்சர்ய அழகுடன் மிடுக்காக வீடு திரும்பலாம். 19 ஊழியர்களின் உபசரிப்பில் 26 பேர் பயணிக்க முடியும் 70 மீட்டர் நீளம் கொண்ட ஷெராகான் கப்பலின் வார வாடகை 2 கோடியே 88 லட்சம் ரூபாய் என்றால் மலைக்க மாட்டீர்களே! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.