News
Loading...

அரிசியின் விலையை மத்திய அரசாங்கம் உயர்த்துவதா?

அரிசியின் விலையை மத்திய அரசாங்கம் உயர்த்துவதா?

2004–ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தை கொண்டுவந்தது. அந்த திட்டம் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மீண்டும் வெற்றிபெற செய்தது. இந்த நிலையில், 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கியநோக்கம், அப்போதுள்ள இந்திய மக்கள் தொகையில் 67 சதவீத மக்கள் அதாவது, 80 கோடி மக்கள் தங்களுக்கு உணவு வழங்கப்படுவதை ஒரு சட்டப்பூர்வ உரிமையாக பெறும் வகையில், அரிசி கிலோ ரூ.3–க்கும், கோதுமை ரூ.2–க்கும் மற்ற தானியங்கள் ரூ.1–க்கும் மாதந்தோறும் வழங்குவதை உறுதிப்படுத்துவதாகும். அடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. பா.ஜ.க.வும் இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. 

அனைத்து மாநிலங்களும் இந்த சட்டத்தை நிறை வேற்றிக்கொண்டிருந்த சூழ்நிலையில், தமிழ்நாடும், கேரளாவும் இந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஏனெனில், இந்த சட்டம் வருவதற்கு முன்பே, இந்த இருமாநிலங்களிலும் பொதுவினியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்கள் தாராளமாகவே அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது. இப்போது கேரளா இந்த சட்டத்தை நிறைவேற்றப்போவதாக தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு இந்த சட்டத்தை நிறைவேற்றவே முடியாது. ஏனெனில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மலிவு விலைக்கு அரிசியும், கோதுமையும் வழங்கவேண்டும். ஆனால், தமிழ்நாடு தற்போது வறுமையில் உள்ள அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதம் 20 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்குகிறது. தற்போது தமிழ்நாட்டில் 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 ரேஷன்கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர, 66 ஆயிரத்து 478 காவல்துறையினருக்கான ரேஷன்கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், தமிழ்நாட்டிலுள்ள ஜனத் தொகையில் 50.55 சதவீதம் மட்டுமே பொதுவினியோகத் திட்டத்தின்கீழ் பயன்பெறமுடியும். தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசாங்கத்தின் அரிசி தொகுப்பிலிருந்து மாதந்தோறும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்காக குறைந்த விலையில் மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதைப் போல அரிசி விற்கப்படுகிறது. மத்திய தொகுப்பிலிருந்து மாதம் 1 லட்சத்து 26 ஆயிரம் டன் அரிசியை, ஒரு கிலோ அரிசி ரூ.8.30–க்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. திடீரென்று இந்த அரிசியின் விலையை மும்மடங்கு உயர்த்தி, கிலோ ரூ.8.30–க்குப் பதிலாக, கிலோ ரூ.22.53–க்குத்தான் வழங்குவோம் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

தமிழக அரசை பொறுத்தமட்டில், உணவு மானியத் துக்காக ஆண்டுக்கு ரூ.5,300 கோடி செலவழித்து வருகிறது. இதில், அரிசிக்காக மட்டும் ரூ.3,458 கோடியே 50 லட்சம் செலவிடுகிறது. மத்திய அரசாங்கம் இப்படி திடீரென தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசியின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதால், அரசுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். அனைத்து மக்களுக்கும் இலவச அரிசி வழங்கும் தமிழக அரசை பாராட்டி, இன்னும் குறைந்தவிலையில் அரிசி வழங்கவேண்டிய பொறுப் பிலுள்ள மத்திய அரசாங்கம், இவ்வாறு திடீரென அரிசியின் விலையை உயர்த்துவது, தமிழகத்தின் பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையால் வாடும் தமிழக அரசால், இந்த கூடுதல் செலவை ஏற்றுக் கொள்வது முடியாத காரியமாகும். வரும் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து தமிழக எம்.பி.க் களும் ஒரேகுரலில் நீண்டகாலத்துக்கு முடியாவிட்டாலும், நிதிநிலை சீராகும் வரையாவது தமிழகத்திற்கு அரிசி விலை உயர்வுக்கு விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்க வேண்டும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.