News
Loading...

ஆல்ப்ஸ் மலையில் ஆடாக மாறிய மனிதன்

ஆல்ப்ஸ் மலையில் ஆடாக மாறிய மனிதன்

சுவிட்சர்லாந்தின் அழகை பிரதிபலிக்கும் ஆல்ப்ஸ் பனிமலை. மனிதன் நடமாட முடியாத அளவுக்கு பனிப்பொழிவுடன் கூடிய கடும் குளிர். பனிமலையிலிருந்து தன்னை பிய்த்துக்கொண்டு  உருண்டோடுகின்ற ராட்சத பனிப் பாறைகள். அடிவாரத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் புல்வெளிகள். ஆங்காங்கே தென்படுகின்ற சரிவான மண்பாதை. அந்த சரிவில் திடகாத்திரமாக புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அழகான செம்மறி ஆடுகள். ஆட்டு மந்தையில் ஒரு ஆடாக இணைந்து புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறார் தாமஸ் த்வைட்ஸ் என்பவர்.

கொஞ்ச நாட்களாகவே வேலை எதுவும் இல்லை. ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இயந்திரத்தனமான  வாழ்க்கை. மனிதனாக இருப்பதால் உண்டான சலிப்பு, துயரம், மன உளைச்சல். எங்கு தேடிப் பார்த்தாலும் அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாத நிலை... இவையெல்லாம் லண்டன்வாசியான தாமஸை மனித வாழ்க்கையிலிருந்து விடுவித்து சுவிட்சர்லாந்தில் ஒரு ஆடு போன்ற  வாழ்க்கையை  வாழ வைத்திருக்கிறது. 

ஒரு வருடத்துக்கு மேல் ஆராய்ச்சி செய்து, நண்பர்களின் உதவியுடன் ஆடுகளுக்கு இருக்கின்ற மாதிரியே கால்களையும் வயிற்றையும் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார். நான்கு கால்களுடன் ஆடு போன்ற தோற்றத்துடன்தான் ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்திலே இறங்கியிருக்கிறார். தண்ணீர் குடிப்பது, புற்களை மேய்வது, முகர்ந்து பார்ப்பது, ‘மே’ என்று சத்தமிடுவது, உறங்குவது, நடப்பது என அனைத்து செயல்களையும் ஒரு ஆடு எப்படிச் செய்யுமோ அதே மாதிரி செய்திருக்கிறார். 

ஒரு ‘ஆடு மனிதனா’கவே மாறியிருக்கிறார். ‘‘மலைச் சரிவில் நான்கு கால்களுடன் நடக்கும்போது மட்டும்தான் சற்று சிரமப்பட்டேன். மற்றபடி மனித வாழ்க்கையை விட ஆட்டு வாழ்க்கை எவ்வளவோ சிறப்பானது, அமைதியானது’’ என்கிறார் இவர். ஒரு கட்டத்தில் மந்தையில் இருந்த ஆடுகள் இவரை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டு முத்தமிட்டதை, தான் செல்கின்ற வழிகளில் பின்தொடர்ந்து வந்ததை  நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் தாமஸ். 

மூன்று நாட்கள் ஆடு மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கும் 35 வயது நிரம்பிய தாமஸின் சாதனையைப் பாராட்டி ‘இக் நோபல்’ பரிசு கிடைத்திருக்கிறது. இந்தப் பரிசு, மனிதர்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கிறவர்களுக்கு, விநோதமான சாதனைகளைச் செய்கிறவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ‘நோபல் பரிசு’க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோபல் பரிசு கூட ஏதாவது சிபாரிசு இருந்தால் கிடைத்துவிடும். ஆனால் இக் நோபல் பரிசு வேண்டுமானால் தாமஸைப் போல ஏதாவது செய்து காட்டணும்! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.