News
Loading...

கீழடி... குழப்படி! - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்?

கீழடி... குழப்படி! - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்?

சிவகங்கை மாவட்டம் கீழடியில், சங்க காலப் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படும் நகரம் ஒன்று அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘அங்கு தோண்டப்பட்ட குழிகளை மூடுகிறார்கள்’ என சமீபத்தில் செய்தி பரவ... மதுரை, சிவகங்கை வட்டாரங்கள் பரபரத்தன.  

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்வது என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், “கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது. ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்ட பல அரிய பொருட்கள் தமிழகத்துக்குத் திரும்ப வரவில்லை. எனவே, கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து, மாணவர்களும், பொதுமக்களும் நம் முன்னோர்களின் நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். கீழடியில் ஆய்வுகள் தொடர தமிழக அரசு தேவைப்படும் நிலங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று வைகோ, கி.வீரமணி, ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர். ஜி.ராமகிருஷ்ணன், சீமான் ஆகியோர் கீழடிக்கு நேரடியாக  வருகை தந்து பரபரப்பைக் கிளப்பினார்கள்.

இந்த நிலையில்தான், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியம், “கீழடியில் கிடைக்கும் தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், அவற்றை எதிர்காலத் தமிழ் சமூகத்தினர் அறிவதற்கும் ஓர் ஆய்வகத்தை அமைக்க வேண்டும்; அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுக்கவேண்டும்” என்று தமிழக அரசுக்குக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் இல்லை. பிறகு அவர், 16.09.2016-ல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். உடனே, இவரது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் பின்னர்தான், ஆய்வகம் அமைக்கத் தேவையான நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேட ஆரம்பித்தது.

அதே நேரம், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், “கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து தொல்பொருட்களைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ஆய்வுசெய்த குழிகளை மூடக்கூடாது என்றதுடன், தொல்பொருட்களை மைசூர் கொண்டு செல்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்ற தடையால், தோண்டிய குழிகளை மூட முடியாமலும், மேலே எடுத்து வைத்திருக்கிற பொருட்களை ஆய்வுக்குக் கொண்டுசெல்ல முடியாமலும் தொல்லியல் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.

கீழடி... குழப்படி! - மீண்டும் புதைக்கப்படும் தமிழர் நாகரிகம்?

கீழடி அகழ்வாய்வுத் திட்டத்தின் தலைமைத் தொல்லியலாளர் அமர்நாத்தை சந்தித்தோம். ‘‘இந்த ஊர் மக்களின் உதவி இல்லாமல் ஆய்வுப்பணிகளை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது. கடந்த ஆண்டு 43 குழிகள் அமைத்தும், இந்த ஆண்டு 59 குழிகள் அமைத்தும் ஆய்வு மேற்கொண்டோம். இரண்டு வருடங்களில் 110 குழிகள் அமைத்து ஆய்வு செய்து, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழரின் நாகரிகத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இதன் அருகில் உள்ள சொக்கட்டான் ஊருணி நிலத்திலும், இந்த நாகரிகத்தின் நீட்சி இருக்கும் என நம்புகிறோம். நில மட்டத்தில் இருந்து 10 அடிக்குக் கீழே சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தண்ணீர்த் தொட்டிகள், பெரிய அடுப்புகள், பெரிய மண்பானைகள், அடுப்புக்குப் பக்கத்தில் இருந்து சுடுநீர் வெளியேறுவதற்கான சுடுமண் குழாய்கள், உறைகிணறு,  தண்ணீரை நிரப்பி வைக்கத் தொட்டிகள் என ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். இது எந்தக் காலத்துடன் தொடர்புடையது என்பதை அறிவியல் சோதனைகளுக்குப் பின்புதான் சொல்ல முடியும். எங்களுக்கு தென்மண்டல தலைமையகம் கர்நாடகாவில் உள்ளது. அங்குதான் பெரிய அளவிலான லேப் வசதி உள்ளது.  அரசு நினைத்தால் கீழடியிலேயே ஆய்வக வசதியும், அருங்காட்சியகமும் அமைக்க முடியும். இந்த ஊர் மக்கள் நிலம் கொடுத்ததால்தான் ஆய்வை மேற்கொண்டோம். அரசியல்வாதிகள் சிலர் அது புரியாமல் இங்குள்ள 100 ஏக்கரையும் ஆய்வுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பேட்டி கொடுப்பதால், கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். எடுத்த பொருட்கள் எல்லாம் வெளிப்புறத்தில் கிடக்கின்றன” என்று கவலையோடு சொன்ன அமர்நாத், “மழைக்காலம் தொடங்குவதால், குழிகளை மூடவேண்டும். கீழடி ஆய்வுகள் அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துவிட முடியாது. அது இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

திருப்புவனம் துணைதாசில்தார் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘கீழடியிலேயே 72 சென்ட் நிலத்தை ஒதுக்கியுள்ளோம். சொக்கட்டான் ஊருணியை வழங்குவதில் சட்டச் சிக்கல் உள்ளது. அது வறண்ட ஊருணியாக இருந்தாலும் நீர்நிலை புறம்போக்கில் எந்தக் கட்டடமும் கட்டக்கூடாது என்பது அரசு விதி’’ என்றார்.

பல குழப்படிகள் நீடிப்பதால் இதில் தெளிவான, உறுதியான சில நிலைப்பாடுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.