News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

விராட் கோலி அடிக்கும் அடியைப் பார்த்தால், இந்தியா அகிம்சையைப் பின்பற்றும் நாடென்று  யாரும் நம்பவே மாட்டார்கள். பார்டர்ல பாகிஸ்தான் தீவிரவாதிகளை போட்டு பிளக்கும் இந்திய ராணுவ வீரர்கள் கூட இவ்வளவு ஆவேசமா இருப்பாங்களான்னு தெரியல, ஆனா கோலிக்கு பந்து வீசும் பவுலர்கள் எல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட அதிகமாகவே அடி வாங்குறாங்க. ஒவ்வொரு தடவ பேட்டிங் பண்ண போகும்போதும், என்னவோ உலக அழகியோட டேட்டிங் போற மாதிரி சந்தோஷமா கிளம்புகிறார் கோலி. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்னா, கிரிக்கெட்டின் கருணையற்ற கடவுள் விராட் கோலிதான். 

ரன் மெஷின் சச்சின்னா, செஞ்சுரி மெஷின் விராட் கோலி. கோலியின் சமீபகால ஒவ்வொரு இன்னிங்ஸும் தேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் போல சுவாரஸ்யமானவை. கடவுளுக்கு தான் செய்யும் வேலையில் போரடித்தால் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்ப்பாரென சொல்வார்கள். ஆனால் கோலி விளையாட ஆரம்பித்தால், அதைப் பார்த்துவிட்டுத்தான் கடவுள் தன் வேலையவே பார்க்க ஆரம்பிப்பார் என்று தைரியமாக சொல்லலாம். 

நம்ம நாட்டுல சின்னப் பசங்க அரசியல் பேசினா தப்பு. ஆனா, அரசியல்ல இருக்கிற பெரியவங்க எல்லாம் சின்னப் பசங்களாட்டம் அடிச்சுக்குவாங்கன்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். இதான் நிலவரம். மக்கள் நலனும் அரசியலும் விளையாட்டா போச்சான்னு தெரியல! விளையாடுற பசங்க பேசுற அரசியல் இருக்கே... அது நம்ம அரசியல்வாதிகளை விட முதிர்ச்சியாவே இருக்கு. இப்படித்தான் ‘கொடி’ படத்துக்குப் போலாமானு யோசிச்சபடி போய்க்கிட்டு இருந்தேன்.பின்னால டமாருன்னு வெடிச் சத்தம் கேட்டுச்சு. 

‘‘ஏன்டா, வெடி வச்சிருக்கோம்னு சொல்ல மாட்டீங்களா’’ன்னு தெரு பசங்ககிட்ட கேட்டா, ‘‘இது சர்ஜிகல் அட்டாக்ணா’’ங்கிறானுங்க.  எங்க தெருவுக்குள்ள மூணு சின்னப் பசங்க குரூப்பு இருக்கு. அதுல மூணாவது குரூப்பு மக்கள் நலக் கூட்டணி மாதிரி, அம்மா கூப்பிட்டா போயிடுவாங்க, அம்மா சொல்ற வேலையைத்தான் செய்வாங்க (நான் சொல்றது அவங்கள பெத்த அம்மா). 

ஒரு குரூப்பு நைட்டு பத்து மணி வரைக்கும் வெடி வச்சுக்கிட்டு இருந்தது. நான் அவங்களைப் பார்த்து,  ‘‘தீபாவளி கொண்டாடுங்க... வேணாங்கல! பண்டிகை முடிஞ்சப்புறம் பட்டாசு குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டில போட்டுடுங்க’’ன்னு சொன்னேன், அதுக்கு ஒரு ரெண்டாங் கிளாஸ், ‘‘இதுபற்றி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுப்போம்’’னு சொல்லுது. பெரிய குரூப்பு தலைவனை நாலு நாளா ஆளைக் காணோம். 

‘‘என்னடா... ஏரியாவே ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி அமைதியா இருக்கு? எங்கடா உங்காளு’’ன்னு கேட்டா, ‘‘எங்கள் பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் போயிருக்கார்’’னு சொன்னானுங்க. என்னான்னு விசாரிச்சா, அவங்க ஆயா வீட்டுல தீபாவளி கொண்டாட போயிருக்கானாம் அந்த அரை டவுசர். ரெண்டு பேரு புஸ்வாணத்தை கைல வச்சு கொளுத்திக்கிட்டு இருந்தானுங்க. 

நம்ம வாய்தான் சும்மா இருக்காதே, ‘‘ஏன்டா! கட்டாந்தரையில் வைக்கிறத எடுத்து கைல வைக்கறீங்களே, புஸ்வாணம் வெடிச்சா என்னாகும்?’’னு கேட்டா, ‘‘தமிழக முதல்வர் நலம்பெற எல்லோரும் தீச்சட்டி ஏந்துறாங்க, நாங்க வித்தியாசமா பூச்சட்டி ஏந்துறோம்’’னு சொல்றானுங்க. இதெல்லாம் பரவாயில்ல, ஞாயிற்றுக்கிழமை பொழுது போக மாட்டேங்குது, தெரு கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கோங்கடான்னு கேட்டா, ‘‘பேச நேரமில்லேண்ணா, உறுப்பினராக மிஸ்ட் கால் கொடுங்க’’ன்னு சொன்னானுங்க, அதை நினைக்கிறப்பதான்...

இருபது வருஷத்துக்கு முன்னால ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு டாக்டர் இருப்பது ரொம்ப பெரிய விஷயம். இப்பல்லாம் தெருவுக்கு ஒரு காது-மூக்கு-தொண்டை டாக்டர், கதவைத் தட்டினா வீட்டுக்கு ரெண்டு  கண் டாக்டர், தடுக்கி விழுந்து எந்திரிச்சு பார்த்தால் ‘24 மணி நேரம் பிரசவம் பார்க்கப்படும்’னு ஒரு ஆஸ்பத்திரி இருக்கு. அப்பல்லாம் மொத்த தெருவுக்கும் ஒரே ஒரு எஞ்சினியரிங் படிச்சவர் இருப்பார், அவரும் சிவில் படிச்சிருப்பார். நம்மாளுங்க பல்ப் ஃபியூஸானதுக்கு போயி அவர்கிட்ட ஐடியா கேட்டுட்டு வருவாங்க. 

நம்மாளுங்களுக்கு பரோட்டா, பிஸ்கெட், வர்க்கின்னு எதுவா இருந்தாலும் அது ‘ரொட்டி’ங்கிற மாதிரி, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்னு எது படிச்சிருந்தாலும் ஒரே வகை எஞ்சினியர்தான். இப்ப தெருவுக்கு  இருபது வீடுகள் இருந்தா, அங்க அறுபது எஞ்சினியர்கள் இருக்காங்க. அதுல இருபது பேரு படிச்ச வேலையிலயும், இருபது பேரு கிடைச்ச வேலையிலயும், மிச்ச இருபது பேரு வேலையில்லாமயும் இருக்காங்க.  

அந்தக் காலத்துல எம்.ஏ., பி.ஏன்னு டிகிரி படிச்சவங்க ஆறேழு பேர் இருப்பாங்க. அதுல ரெண்டு பேரு அஞ்சாப்பு குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டு இருப்பாங்க. இப்ப எம்.ஏ., பி.ஏ. போயி வீட்டுக்கு ரெண்டு  எம்.பி.ஏவெல்லாம் வந்தாச்சு. ஆனா அஞ்சாப்பு குழந்தை இவங்களுக்கு டியூஷன் எடுக்கும். இலக்கியம் வாசிக்கும் பழக்கம் ஒருத்தருக்கு இருக்கும், அவரிடம் விவாதம் பண்ணவே எல்லோருக்கும் பயமா இருக்கும். இப்ப வாதம், விவாதம், விதண்டாவாதம் பண்ண பல பேரு இருக்காங்க; ஆனா இலக்கியம் வாசிக்கும் பழக்கம்தான் ஒருத்தர்கிட்ட கூட இல்ல. 

அப்பவெல்லாம் பத்திரிகைல வந்த செய்தியைப் படிச்சுட்டு நாலு பேரு கருத்தா பேசிக்குவாங்க, இப்ப டிவி சேனல்களுக்கு நாலு பேரு வந்துட்டு கருத்து சொல்றோம்னு அடிச்சுக்கிறாங்க. எல்லாமே எண்ணிக்கையில அதிகரிச்சு இருக்கு... ஆனா அப்ப தெருவுல ஓட்டு இருக்கிறவங்க எல்லோருமே வாக்களிச்சாங்க! இப்ப படிக்காதவங்க கூட வாக்களிக்கிறாங்க, படிச்சவங்கதான் ஓட்டு போடாம தங்கள் வாக்கை அழிக்கிறாங்க 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.