News
Loading...

வதந்திக்காக கைதா? கைதுக்காக வதந்தியா?

வதந்திக்காக கைதா? கைதுக்காக வதந்தியா?

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து டீக்கடை பெஞ்சுகளில் ஆரம்பித்து சமூக வலைதளம் வரை பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக ஏழு பேரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. 

அ.தி.மு.க-வின் ஐ.டி. பிரிவைச் சேர்ந்த ராமச்சந்திரன், ராஜ்கமல், சந்துரு மற்றும் சென்னை திரு.வி.க நகர் பகுதி அ.தி.மு.க பிரமுகர் எபிநேசன் ஆகியோர் போலீஸில் கொடுத்தப் புகார்கள்தான், இத்தனைக் களேபரங்களுக்கும் அடிப்படை. மேலும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் இது சம்பந்தமாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட நபர்களைக் கைது செய் நடவடிக்கையிலும் போலீஸார் இறங்கியுள்ளனர்.

கோவையில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ரமேஷ், சுரேஷ் ஆகிய இருவரும், வங்கியில் இருந்தபோது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தங்களுக்குள் சகஜமாக பேசியுள்ளனர். அந்த உரையாடல் குறித்து, தொண்டாமுத்தூர் பேரூராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புனிதாதேவி என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். உடனே, ‘முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பினர்’ என்று ரமேஷ், சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து ‘கடமை’யை நிறைவேற்றியுள்ளனர். நம்மிடம் பேசிய வங்கி ஊழியர்கள், ‘‘வங்கியில் இருந்தபோது, முதல்வர் உடல்நிலை குறித்த மெசேஜ் வந்தது. அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். யாரும் வதந்தியை பரப்பவில்லை. கைது நடவடிக்கையில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன’’ என்றனர் பதற்றத்துடன்.

வதந்திக்காக கைதா? கைதுக்காக வதந்தியா?

அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மற்றும் அந்தக் கட்சி நிர்வாகிகள் கொடுத்தப் புகார்களின் அடிப்படையில், போலீஸார் கைது நடவடிக்கை யில் ஈடுபடுவது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க-வினரின் புகார்களை ஏற்று தி.மு.க-வைச் சேர்ந்த ஃபேஸ்புக் பதிவாளர்களில் 100 பேரின் கணக்குகளை சைபர் க்ரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். மேலும், பிரபல வலைப்பதி வாளர்கள் மற்றும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியவர்கள் என நூற்றுக் கணக்கானவர்களின் கணக்குகள் தொடந்து முடக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் பழிவாங்கும் நடவடிக்கைகள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

தி.மு.க-வினரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப் பட்டது குறித்து அந்தக் கட்சியின் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானிடம் பேசினோம். ‘‘ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன், அவர் விரைவில் குணமடையவேண்டும் என முதன் முதலில் கலைஞர்தான் வாழ்த் தினார். கலைஞரின் அறிக்கை வந்ததை அடுத்து, ‘ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து யாரும் கருத்துச் சொல்லவோ, விமர்சனம் செய்யவோக் கூடாது’ என அனைத்து நிர்வாகிகளுக்கும் ஸ்டாலின் ரகசிய உத்தரவு போட்டார். இதனால், சமூகவலைதளத்தில் செயல்படும்தி.மு.க-வினர் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

முதல்வர் குறித்து யாரோ வெளியிட்ட பதிவுகளை தி.மு.க-வினர் தங்களது கணக்கில் இருந்து படித்தாலோ, லைக் போட்டாலோ, ‘இது குற்றம்’ எனக் கூறி கணக்குகளை முடக்கி உள்ளனர். எந்தத் தவறும் செய்யாத தி.மு.க-வின ரின் கணக்குகளை முடக்கியது தவறு என சென்னை மாநகர போலீஸாரிடம் புகார் அளித்தோம். நாங்கள் அளித்த புகார் குறித்து விசாரணைகூட நடத்தாமல், இன்னும் வேகமாக கோவையைச் சேர்ந்த மேலும் 50 தி.மு.க-வினரின் கணக்குகளை முடக்கி உள்ளனர். தற்போது தமிழக அரசு முடங்கியுள்ளது. அமைச்சர்கள் கோயில், கோயிலாகச் சுற்றி வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவும், அரசின் செயலின்மையைத் திசைதிருப்பவும் கைது நடவடிக்கைகளில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

வதந்திக்காக கைதா? கைதுக்காக வதந்தியா?

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை வைத்து நடவடிக்கை எடுக்கத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் வழிவகுத்தது. அந்தச் சட்டத்தைக் காவல்துறை தவறுதலாகப் பயன்படுத் தியதால் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(A)-ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில், சட்டப்பிரிவு 66(A)-ன் படி கைது செய்ய முடியாது என்பதால், காவல் துறையினர் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 505-ஐ தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கைது செய்தும், மிரட்டியும் வருகின்றனர். முதல்வர் உடல்நிலை குறித்து வெறும் உரையாடல் நடத்தியவர்களையும், மற்றவர்களின் பதிவுகளைப் படித்தவர்களையும் போலீஸார் கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை, உடனே போலீஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். 

‘வலைதளங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணினம்’ என்ற தலைப்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்  சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. அந்த நிகழ்ச்சியிலும், கைது நடவடிக்கை பற்றிய விவகாரம் எதிரொலித்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாதர் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகிகளில் ஒருவரான உ.வாசுகி, ‘‘சென்னை சைபர் க்ரைம் போலீஸில் டெக்னிக்கலாக விவரம் தெரிந்த ஆட்கள் இல்லை என்பதை வெகுவிரைவில் புரிந்துகொண்டுவிட்டோம். அதன் பின்னர், டெக்னிக்கலான விஷயங்களை அறிந்த ஒரு இளைஞரை கையோடு கூட்டிக்கொண்டுபோய் பல விஷயங்களை அவர்களுக்கு விளக்கினோம். இந்த நிலைமையில்தான் சைபர் க்ரைம் இருக்கிறது..

இன்றைக்கு, நாட்டில் விமர்சனங்கள் என்பதே பெரிய பிரச்னையாகி இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் விமர்சனங்களே, அவதூறு வழக்குகளாகப் நீதிமன்றத்தில் வரிசைகட்டி நின்றன. ஒருகட்டத்தில், ‘உங்களுக்கு வேறு வேலையே இல்லையா, எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குதானா?’ என்று நீதிமன்றமே கோபத்துடன் கேட்ட சம்பவமும் நடந்தது.

கோவையில் இரண்டு வங்கி ஊழியர்கள், தங்களுக்குள் பெர்சனலாகப் பேசிக் கொண்டிருந்ததை இன்று அவதூறு வழக்காக மாற்றி இருக்கின்றனர். நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் முதலமைச்சர் மட்டுமே பெண் அல்ல... நாங்களும் பெண்கள்தான். நாங்கள் அளிக்கும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்’’ என்றார் ஆவேசத்துடன்.

வதந்திக்காக கைதா? கைதுக்காக வதந்தியா?

தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திவரும் இந்த விவகாரம் குறித்து, சென்னை சைபர் க்ரைம் காவல் துணை ஆணையர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, ‘‘கைது பற்றியோ, சமூக வலைதளங்களை முடக்குவது பற்றியோ என்னால் எதையும் சொல்லமுடியாது. ப்ளீஸ் என்னிடம் எதையும் கேட்காதீர்கள்’’ என ஒதுங்கிக்கொண்டார்.

தமிழகக் காவல்துறையின் கைதுக்காக இன்னும் எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.