News
Loading...

நிம்மதியான தூக்கம் தரும் ம்யூஸோ!

நிம்மதியான தூக்கம் தரும் ம்யூஸோ!

நகரத்தில் வாகனத்தின் எந்த பாகத்தையும் விட அதிவேகமாக அழுத்தித் தேய்ந்துபோவது ஹாரன் பட்டனும், ஹாரனும்தான். இதிலிருந்தே சத்தம் என்பது நம் ஆட்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என அறியலாம். 

டிராஃபிக்கில் இது ஓகே. ஆனால், வீடு, தெரு என அனைத்து இடங்களிலும் டமால் டுமீல் என சத்தம் கிளம்பினால் நம் கழுத்துக்கு மேலிருப்பது தலையா, மத்தளமா என டவுட் வருமே? எப்போதுதான் அமைதியை  உணர்வது? இதற்கான சூப்பர் தீர்வுதான் இரைச்சலை நீக்கி இனிமையான தூக்கம் தரும் ‘ம்யூஸோ’ கருவி. 

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘செலெஸ்டியல் ட்ரைப் லிமிடெட்’ எனும் நிறுவனம், இரைச்சலைக் குறைத்து அறையில் அமைதி நிலவச் செய்யும் கருவியான ம்யூஸோவை வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கியுள்ளது. 

எதிர் அதிர்வு தொழில்நுட்பத்தின் மூலம் வெளியிலிருந்து வரும் பல்வேறு இரைச்சல்களையும் குறைத்து அறையை ரம்மியமான சூழலாக மாற்ற 100 சதவிகித கேரண்டி தருகிறது இது.  இதில் அலார வசதி இருப்பதால் எழ வேண்டிய நேரத்தில் ஒலி அலைகள் உசுப்ப உற்சாகமாக எழமுடியும். சூழலுக்கு ஏற்றபடி அமைதி, தூக்கம், ரகசியம் என மூன்று ஆப்ஷன்களைப் பயன்படுத்தி ரிலாக்ஸாக தூங்கமுடியும் என்பதுதான் இதில் புதுசு. 

அமைதி எனும் ஆப்ஷனில் ம்யூஸோ, அதிர்வு அலைகளை வெளியிட்டு, வெளிப்புற இரைச்சல்களை அறைக்குள் நோ அட்மிஷன் சொல்லி குறைக்கிறது. தூக்கம் எனும் ஆப்ஷனில், இயற்கை ஒலிகளான நதி, பறவைகளின் கிரீச்சொலி உள்ளிட்டவற்றை மென்மையான முறையில் ஒலிக்க விட்டு  அறைச்சூழலையே இயற்கையின் மடியாக மாற்றி உங்களைத் தாலாட்டித் தூங்க வைக்கிறது.  

ரகசியம் ஆப்ஷனை உங்களது அந்தரங்கமான படுக்கையறை, ரெஸ்டாரன்ட் சந்திப்பு உள்ளிட்ட தருணங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை ம்யூஸோ ஆப் மூலம் ஸ்மார்ட்டாக இணைத்து பயன்படுத்தினால் உறக்கம் உங்கள் கண்களைத் தென்றலாய் தழுவும். நிம்மதியான தூக்கத்திற்கு விலைமதிப்பு கிடையாதுதான். 

ஆனால் உருவாக்கிய கருவியை போணி பண்ணணுமே! எனவே ம்யூஸோவை 16 ஆயிரத்து 625 ரூபாய்க்கு ஆன்லைனிலேயே அசால்ட்டாக புக் செய்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெற்றுக்கொள்ளலாம். சும்மா ஜம்முன்னு தூங்கலாம் இனி!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.