News
Loading...

ஜெ. டிக்‌ஷனரி!

ஜெ. டிக்‌ஷனரி!

செப்டம்பர் 22ம் தேதி நள்ளிரவுக்கு சற்று முன்பாக ஒரு ஆம்புலன்ஸில் விரைந்து எடுத்து வரப்பட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த நிமிடத்திலிருந்து அப்பல்லோ மருத்துவமனையே தலைமைச் செயலகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ‘உள்ளே ஜெயலலிதா எப்படி இருக்கிறார்’ என்பது ரகசியமாகக் காக்கப்படும் சூழலில், தினம் தினம் மருத்துவமனை வெளியிடும் அறிக்கைகளும், நிபுணர்கள் சொல்லும் கருத்துகளும் பல புதிய வார்த்தைகளை நமக்கு அறிமுகம் செய்துள்ளன. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் அறியலாம், வாருங்கள்!

* Sepsis: நோய்த்தொற்றில் இது உயிருக்கு ஆபத்தான நிலை. கால்பந்து ஆட்டங்களில் சிலர் சேம் சைடு கோல் போட்டு தங்கள் அணியை சங்கடப்படுத்தி பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். அப்படி உடல் செய்யும் ‘சேம் சைடு கோல்’ இது! பொதுவாக ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதை எதிர்த்துப் போராடும். 

ஆனால், சர்க்கரை நோய், நீண்ட நாள் சுவாசப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் இருக்கும்போது சிலருக்கு ஏதாவது நோய்த்தொற்று ஏற்படும். அப்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குழப்பமாகி, உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளையே காயப்படுத்தத் துவங்கிவிடும். இதற்கு உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து ஆன்ட்டி பயாடிக்குடன் சிகிச்சை தொடங்க வேண்டும்.    

* Respiratory support: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும். முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பது, ‘கிரிட்டிகல் கேர் யூனிட்’ எனப்படும் ‘அதிக கவனம் தேவைப்படும்’ சிகிச்சைப் பிரிவில் என்பதால், அவருக்கு இயல்பாகவே இது தேவைப்படுகிறது. 

மூச்சுத்திணறல் மற்றும் இயல்பாக சுவாசிப்பதில் பிரச்னை உள்ளவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். இயல்பான சுவாசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து செயற்கை சுவாசத்தின் அளவு அதிகரிக்கப்படும். நுரையீரலில் கடுமையான தொற்று இருந்தால், தொடர்ச்சியாக செயற்கை சுவாசம் தேவைப்படும்.

* Nebulisation: முதல்வருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் ஒன்று! மாத்திரை, ஊசி போல இது சுவாசம் வழியாக மருந்தை நேரடியாக நுரையீரலுக்கு அனுப்பும் சிகிச்சை. நோயாளியின் நிலை மற்றும் தேவையைப் பொறுத்து 5 முதல் 10 நிமிடங்கள் மருந்தைச் செலுத்துவார்கள். நுரையீரலில் இருக்கும் நோய்த்தொற்றை இது உடனடியாக சரி செய்யும். அதோடு நுரையீரல் அடைப்பையும் இளகச் செய்யும்.

* Passive physiotherapy: ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகளோடு சேர்த்து இந்த பிசியோதெரபி வழங்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. பொதுவாக பிசியோதெரபி என்பது, நோயாளி நேரடியாகவோ, ஒரு தெரபிஸ்ட்டின் உதவியுடனோ செய்யும் பயிற்சிகளே! நோயாளி இப்படி எதையுமே செய்ய முடியாத நிலைமையில் இருக்கும்போது, அவரது வலிகளைக் குறைக்க செய்யப்படுவதே ‘பேஸிவ் பிசியோதெரபி’. இதில் மூட்டுக்களையோ, தசைகளையோ அசைக்கத் தேவையில்லை. அல்ட்ரா சவுண்ட், எலெக்ட்ரிக் கரன்ட், சூடேற்றல் என வேறுமுறைகளில் தெரபி கொடுப்பார்கள்.

* Intensivist: முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல், ‘இன்டென்சிவிஸ்ட்’ என்றுதான் அறிமுகம் செய்யப்பட்டார். இன்டென்சிவ் கேர் தெரியும்! அது என்ன இன்டென்சிவிஸ்ட்? தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தரும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இவர்கள். முதல்வருக்கு சிகிச்சை தரும் குழுவில் இதய நிபுணர்களும் நுரையீரல் சிகிச்சை சார்ந்த நிபுணர்களும் அதிகம் உள்ளனர். இன்டென்ஸிவிஸ்ட் என்பவர், ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் மட்டுமல்லாது, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பவர்களுக்குத் தர வேண்டிய உயிர் காக்கும் சிகிச்சைகள் குறித்தும், அங்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகள் குறித்தும் அதிகம் அறிந்து வைத்திருப்பார்கள். 

* ECMO (Extracorporeal Membrane Oxygenation): இதனை எக்ஸ்ட்ரா நுரையீரல் என சொல்லலாம். உடலில் நுரையீரலும், சமயங்களில் இதயமும் செயல்பட சிரமம் ஏற்படும்போது இதனைப் பொருத்துவார்கள். இது ரத்தத்தை சுத்திகரித்து, அதில் இருக்கும் கார்பன் -டை ஆக்ஸைடை வெளியேற்றி ஆக்சிஜனை அதில் கலக்கும். நுரையீரல் மற்றும் இதயத்தின் வேலையை இப்படி இது செய்துவிடுவதால், உடல் சீக்கிரமே குணமடையும். 

* தற்காலிக முதல்வர், துணை முதல்வர், பொறுப்பு முதல்வர்: மருத்துவர் வட்டாரங்களைத் தாண்டி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட வார்த்தைகள் இவை. ‘தற்காலிக முதல்வர்’, ‘துணை முதல்வர்’ போன்றவை அரசியல் சட்டம் அங்கீகரித்த பொறுப்புகள் இல்லை. ஒருவர் ‘முதல்வராக’ தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ‘முதல்வர்’தான். ஓ.பன்னீர்செல்வத்தை ‘தற்காலிக முதல்வர்’ என ஜெயலலிதா சொல்லியிருந்தாலும், அரசியல் சட்டப்படி, ஓ.பி.எஸ் இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தார் என்பதே வரலாறு. ‘துணை முதல்வர்’ என்பவருக்கு ஒரு கேபினட் அமைச்சருக்குரிய அந்தஸ்துகள் தாண்டி வேறு எதுவும் இல்லை. 

அரசியல் சட்டத்தின் 163 மற்றும் 164ம் பிரிவுகள், ‘அமைச்சரவையின் ஆலோசனைப்படி மாநில கவர்னர் எப்படிச் செயல்பட வேண்டும்’ என வரையறுக்கின்றன. அமைச்சரவையின் ‘தலை’ என்பது ‘முதல்வர்’தான். ‘தலை’ இல்லாமல் ‘வால்கள்’ செயல்பட முடியாது. முதல்வர் இல்லையென்றால், அமைச்சரவைக்கு செயல்பாடு கிடையாது. 

கடந்த 84ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல்நலமின்றி இருந்தபோது, தலைமைச் செயலாளரும் முதல்வரின் தனிச் செயலாளரும் கவர்னருக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையில், முதல்வரின் துறைகள் அனைத்தும் நிதி அமைச்சர் நெடுஞ்செழியனிடம் வழங்கப்பட்டன. ‘அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் அதிகாரமும்’ வழங்கப்பட்டது. இலாகா இல்லாத முதல்வராக எம்.ஜி.ஆர் நீடித்தார். ‘நீண்ட நாள் முதல்வர் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்’ என சொல்லிவிட்ட பிறகு, இது தவிர்க்க முடியாதது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.