News
Loading...

நடந்து சென்று ரோந்து பணி

நடந்து சென்று ரோந்து பணி

ஒரு நாட்டின் அமைதி, பாதுகாப்பு எல்லைப்புறங்களில் காவல் காக்கும் ராணுவத்தின் கையிலும், மாநிலங் களில் காவல்துறையின் கையிலும் இருக்கிறது. எப்போதுமே போலீசார் விழிப்புணர்வுடன் இருந்தால்தான், நாம் நிம்மதியாக தூங்க முடியும் என்று பல சமூகஆர்வலர்கள் போலீசாரின் பணியைப்பற்றி மிகஉயர்வாக சொல்வார்கள். விடுதலை வாங்கித் தந்த ‘மகாத்மா காந்தி’ கூட என்றைக்கு கழுத்து நிறைய நகையைப் போட்டுக் கொண்டு நள்ளிரவில் ஒரு பெண் தனியாக செல்லமுடியும் என்ற நிலை நாட்டில் ஏற்படுகிறதோ, அன்றுதான் உண்மை சுதந்திரத்தை அடைந்து விட்டோம் என்றார். சமீப காலங்களாக தமிழ் நாட்டில் நள்ளிரவில்கூட அல்ல, பட்டப்பகலிலேயே பெண்கள் கழுத்தில் ஒற்றை சங்கிலி கூட போட்டுச்செல்ல முடியாத நிலையில், சங்கிலிபறிப்பு திருடர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. இரவிலும், பகலிலும் சரி, வீட்டைப்பூட்டிக் கொண்டு வெளியே எங்கேயாவது போய்விட்டு வருவதற்கு முன்பு, திருடர்கள் மோப்பம் பிடித்துக் கொண்டு ஜன்னல், கதவை உடைத்து, வீடுபுகுந்து திருடி சென்று விடுகிறார்கள். மக்கள் நெருக்கமுள்ள இடங்களிலேயே இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதைத் தவிர்க்க, போலீசாரின் ரோந்துபணி இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது  போலீஸ்டி.ஜி.பி.  ஆக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக இருந்தபோது, ஒவ்வொரு காவல் நிலையத் திற்குட்பட்ட சரகத்திலும் போலீசார் சைக்கிளில் ரோந்து பணி செல்லும் நோக்கில், சகல வசதிகளையும் கொண்ட சைக்கிள்கள் வழங்க ஏற்பாடு செய்தார். ஆரம்பத்தில் சில நாட்கள் போலீசார் சைக்கிளில் ரோந்துபணி சென்றார்கள். இப்போது பல போலீஸ் நிலையங்களில், ரோந்து பணி யில்லாமல் அந்த சைக்கிள்களெல்லாம் தூசிப் படிந்து கொண்டு கிடக்கிறது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு ஆலோசனையை சுற்றறிக்கையாக வழங்கியுள்ளது. இதில், குற்றங்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். முதல்கட்டமாக, நாடுமுழுவதும் குறைந்த பட்சம் 500 நகரங்களிலாவது போலீசார் நடந்து சென்று ரோந்து பணியாற்றவேண்டும். அதிலும் குறிப்பாக, அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களில் போலீசார் நடந்து சென்று ரோந்து பணி செய்ய வேண்டும். அப்போது தான் குற்றங்கள் தொடர்பான உளவு தகவல்களையும் சேகரிக்கலாம். உளவு தகவல்கள் சேகரிப்பது முக்கியப் பணியாக இருக்க வேண்டும். 

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சட்டம்–ஒழுங்கு பிரிவோடு, உளவுப்பிரிவும் தனியாக இருக்க வேண்டும். கோர்ட்டு சம்மன் கொடுப்பது போன்ற பணிகளை போலீசாரிடம் வழங்காமல், வெளியாட்கள் மூலம் வழங்கப் படலாம். இதுமட்டுமல்லாமல், எந்தவொரு குற்றம் நடந் தாலும், எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய வேண்டியது கட்டாய கடமையாகும். எப்.ஐ.ஆர். பதிவுசெய்வதிலும் ஒரு வெளிப்படைத்தன்மை அனைத்து மாநில காவல்துறைகளிலும் உருவாக்கவேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 500 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் 20–க்கு மேற்பட்ட நகரங்கள் வரும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்கேற்ப, உடனடியாக தமிழக காவல்துறையும், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பெரிய, சிறிய நகரங்களில் முதல்கட்டமாக இரவுப் பணியாற்றும்  போலீசாராவது நடந்து சென்று ரோந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். எப்.ஐ.ஆர். போடுவது என்பது போலீசாரின் முக்கியக் கடமை என்பதை உயர்அதிகாரிகள் வலியுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் போலீசார் நடந்து சென்றுதான் ரோந்து பணிகளை ஆற்றினார்கள். மறைந்த போலீஸ் ஐ.ஜி. எப்.வி.அருள், மறைந்த போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால் போன்ற பல அதிகாரிகள் இதுபோல போலீசார் இரவு நேரங்களில் நடந்து சென்று ரோந்து பணியாற்றுவதற்கு பெரிதும் ஊக்கமளித்து வந்தார்கள். இரவில் மிடுக்காக நடந்து சென்று ரோந்து பணியாற்றும் போலீசாருக்கு, ‘பீட் செக்’ செய்யச் செல்லும் உயர்அதிகாரிகளை டீ வாங்கிக் கொடுக்க சொல்வார் ஸ்ரீபால். அதுபோல, இப்போதுள்ள போலீஸ் அதிகாரிகளும் தங்கள் சரகத்தில் நடந்து சென்று ரோந்து பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.