News
Loading...

குப்பைகளுக்கு நடுவே, கோடிகளைக் கொட்டி கட்டப்பட்ட அரசு மருத்துவமனை?!

குப்பைகளுக்கு நடுவே, கோடிகளைக் கொட்டி கட்டப்பட்ட அரசு மருத்துவமனை

கோடிகளைக் கொட்டி கட்டப்பட்ட அரசு மருத்துவமனை நுாற்றாண்டு கட்டடத்தில், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டிய மருத்துவமனை நிர்வாகம், குப்பைக்கு நடுவே உயர் ரக சிகிச்சை வழங்குவதற்கு, வார்டுகளை மாற்றிக் கொண்டிருக்கிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மக்கள், உயர் சிகிச்சை பெறும் இடமாக கோவை அரசு மருத்துவமனை இருந்து வருகிறது. மருத்துவமனைக்கு தினமும் வெளிநோயாளியாக, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், உள்நோயாளியாக 2,250 பேரும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

ரூ.60 கோடி மதிப்பில்...பல்வேறு நவீன தொழில் நுட்ப வசதிகள் இருப்பதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனை துவங்கப்பட்டு நுாறு ஆண்டுகள் ஆனதால், 60 கோடி ரூபாய் செலவில், புதிய நுாற்றாண்டு கட்டடம் கட்டப்பட்டது. மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மருத்துவமனை வார்டுகளை, இப்புதிய கட்டடத்துக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இப்பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை, ரத்த வங்கி, இருதயம், நரம்பியல், சிறுநீரகவியல், 'பிளாஸ்டிக் சர்ஜரி,' எலும்பு மூட்டு, ஐ.சி.யூ., ஐ.எம்.சி.யூ., உள்ளிட்ட பல்வேறு துறைகள் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், நோயாளிகளுக்கு தரம் மிக்க சிகிச்சை இங்கு கிடைக்கிறது.

பல்நோக்கு மருத்துவமனைகளில் உள்ளது போல், அனைத்து வசதிகளும் இக்கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும், அரசு மருத்துவமனை என்றால் நம் கண் முன் தோன்றும் அதே சுகாதாரமற்ற காட்சிகள், புதிய நுாற்றாண்டு கட்டடத்திலும் அணிவகுக்கின்றன. நான்கு தளங்களை கொண்டுள்ள கட்டடத்தில், தரை மற்றும் முதல் தளம் மட்டுமே சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

துரத்தும் துர்நாற்றம்!மீதமுள்ள தளங்கள் அனைத்தும் குப்பை, கூளம் நிறைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில், வார்டுகளில் அள்ளப்பட்ட குப்பைகள், மருத்துவக் கழிவுகள் அங்கேயே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகளை துர்நாற்றம் துரத்தியடிக்கிறது. மருந்துகள், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த பஞ்சுகள் கிடப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

பல கோடி ரூபாய் செலவழித்து, கட்டடத்தை மட்டும் கட்டியுள்ள தமிழக அரசு, அங்கு பணியாற்றுவதற்கு கூடுதல் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, துப்புரவுப் பணிக்கும் சிறப்பு நிதி எதையும் ஒதுக்கவில்லை. இதனால், நுாற்றாண்டு கட்டடமும் நாற்றமெடுக்கும் இடமாக மாறியுள்ளது.

இப்படிப்பட்ட இடத்தில், உயர் ரக சிகிச்சையை எப்படி கொடுப்பார்கள் என்பதே, அப்பாவி மக்களின் ஆதங்கமாக உள்ளது. புதிய கட்டடத்துக்கென துப்புரவுத் தொழிலாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. அதற்கான அறிகுறி எதுவும் அங்கு தெரியவில்லை. இப்போதைக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டியது, நுாற்றாண்டு கட்டடத்துக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்குமே.

புகாரே வரலையாம்!கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின்ஜோவிடம் கேட்டபோது, ''நுாற்றாண்டு கட்டடத்தில் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, ஒவ்வொரு துறையாக மாற்றப்பட்டு வருகிறது. புதிய கட்டட துாய்மைப் பணிக்காக, பிரத்யேக துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருமளவு குப்பைகள் அகற்றப்படுகின்றன. நோயாளிகள் இதுகுறித்து நேரடியாக புகார் தெரிவிக்கவில்லை. துாய்மைப்பணியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

குப்பை குவிந்திருப்பது பற்றி, டீனை சந்தித்து நோயாளி புகார் தெரிவிக்கும் அளவுக்கு, அங்கு சூழ்நிலை இல்லை என்பது யதார்த்தம். நோயாளி சொல்லித்தான் அகற்ற வேண்டுமென்றால், டீன், மேற்பார்வையாளர், இருப்பிட மருத்துவ அலுவலர் என இத்தனை நிர்வாகிகள் எதற்கு என்பதே, பொது ஜனத்தின் கேள்வி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.