News
Loading...

அமைச்சரவை படத்தை அப்லோடு செய்ய முடியவில்லை!

அமைச்சரவை படத்தை அப்லோடு செய்ய முடியவில்லை!

தமிழக அரசின் இணையத்தளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக
www.tn.gov.in
செயல்பட்டுவருகிறது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் அறிக்கைகள் நிகழ்ச்சி நிரல்கள், கடந்த கால நிதிநிலை அறிக்கைகள், அரசு ஆணைகள், முதல்வர் அறிவிப்புகள் எனப் பல முக்கியக் குறிப்புகளும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கருத்துக்கள் இதில் இடம்பெற்றிருக்கும். பொதுமக்கள் அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வமான செய்திகளை இதன்மூலமே பெறுகின்றனர். இப்படி அரசுக்கும் பொதுமக்களுக்குமான நிர்வாகப் பாலமாக இயங்கிவரும் இணையத்தளம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி பிற்பகலுக்கு மேல் முடக்கப்பட்டு, மறுநாள் இயங்க ஆரம்பித்தது.

www.tn.gov.in
என்ற இணையத்தளம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் முழுக்க கணினி மயமாக்கப்பட்ட நிலையில், இந்த இணையத்தளம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படைத் தகவல் ஆதாரமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு இணையத்தளத்தின் முக்கியப் பக்கங்கள் திடீரென முடங்கின. அதில், PAK CYBER SKULLZ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளதால், இது பாகிஸ்தான் நாட்டுத் தீவிரவாதிகளின் சதி வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இணையத்தளத்தின் பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பதால் அன்றைய தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் பதிவேற்ற முடியாமல் செய்தித் துறையின் ஊழியர்கள் திணறினர்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்தித்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டோம். நம்மிடம் பேசிய அதன் உயர் அதிகாரிகளில் ஒருவர், ‘‘தமிழக அரசின் இணையத்தளத்தைப் பராமரித்துவருவது தேசியத் தகவல் தொடர்பு மையம்தான். தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்” என்றார்.

தமிழக அரசின் இணையத்தளத்தை பராமரித்துவரும் ‘நிக்’ எனப்படும் தேசியத் தகவல் தொடர்பு மையத்தினை (NIC)  தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் விரிவாக நம்மிடம் பேசினார்.

“அரசின் இணையத்தளத்தை யாரும் முடக்கவில்லை. டேட்டா ஆக்சஸை கையகப்படுத்தி அதில் இடம்பெற்றிருந்த பல கன்டென்டை எடுக்க முயற்சி நடந்திருக்கிறது. அதேசமயம் டேட்டாக்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தகவல் தெரிந்ததும் உடனடியாக செர்ட்டின் (certin)மற்றும் சைபர் குற்றப்பிரிவுக்கும் புகார் அளித்து விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்ட விசாரணையில் அது பாகிஸ்தான் நாட்டிலிருந்து நடந்த முயற்சி என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக வங்கி அல்லது வேறு எந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான நிறுவன இணையத்தளத்தை முடக்கியிருந்தால், அதில் ஆபத்து உள்ளது. ரகசிய ஆவணங்களைப் பராமரிக்கும் இணையத்தளமாக இருப்பின் சிக்கல் உண்டு. ஆனால், அரசின் இந்த இணையத்தளத்தை பொறுத்தவரையில் இதில் பெரும்பாலும் மக்களுக்கான பொது ஆவணங்கள்தான் பராமரிக்கப்படுகின்றன. ரகசியமான ஆவணங்கள், குறியீடுகள் என்று எதுவும் பராமரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க இது ஒரு தகவல் பெறும் இணையத்தளம்தான். எந்த ஒரு பொதுஜனமும் எந்த டிவைஸிலிருந்தும் தனக்குவேண்டியத் தகவல்களை எளிதில் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசு இணையத்தளம் இது. எனவே இதை முடக்குவதன்மூலம் யாரும் எந்தவித லாபமும் அடையமுடியாது.

இருப்பினும் ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. மீண்டும் தவறு நடக்க வாய்ப்புகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பான அம்சங்களுடன் இணையத்தளத்தை மீண்டும் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 

இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு டிவைஸ் இருந்தால் யாரும் எந்த இடத்திலிருந்தும் எந்த இணையத்தளத்தையும் முடக்க முடியும் என்ற நிலை உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஒரு டிவைஸிலிருந்து செய்யப்பட்டதால் இதை செய்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று சொல்லமுடியாது. அதனால் சந்தேகத்தின்பேரில் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஆக்சஸையும் துண்டிக்க முடியாது. அதுமட்டுமின்றி இன்று எல்லா நாட்டிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால் நாடுகளுக்கிடையேயான கட்டுப்பாடுகள் விதிக்கும் சாத்தியம் குறைவு. இதையெல்லாம் மனதில்கொண்டே பாதுகாப்பு அம்சங்களில் இன்னும் கவனம் செலுத்தி இணையத்தளத்தை தயார் செய்துவருகிறோம். மீண்டும் வடிவமைக்கப்படும் தளம் கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்வோம்” என்றார்.

அரசு முடக்கம் என்பது எப்படியும் நடக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.