News
Loading...

மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி!

மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி!

சின்னச் சின்ன ஞாபகங்கள்

சின்னவள் என் சிந்தையிலே!

அத்தை என்று உன்னை அழைக்க

அமுதூறுது என் நாவிலே!

அன்புக்கரம் நீ பிடித்து

கொஞ்சிக் கொஞ்சிப் பேசையிலே!

வண்ண வண்ணப் பூங்காவில்

அத்தை மடி மெத்தையிலே

சின்னவள் நான் குறும்புசெய்ய

புன்னகைத்தாயே மலர் போலே!

- ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமார் மகள் தீபா எழுதிய கவிதை இது! ‘இளவேனில் பூக்கள்’ என்கிற தீபாவின் கவிதைத் தொகுப்பில் எழுதப்பட்ட முதல் கவிதையே அத்தை மடி மெத்தையடிதான். அத்தை ஜெயலலிதாவை நினைத்து தீபா எழுதிய இந்தக் கவிதைகள் ஜெயலலிதாவின் காதுகளில் எட்டியதா? 

பவர் ஸ்டார்கூட அப்போலோ மருத்துவமனைக்குள் போய்த் திரும்புகிறார். 

தி.மு.க. எம்.எல்.ஏ.கள்கூட செகண்ட் ப்ளோர் வரையில் போய் வருகிறார்கள். ஜெயலலிதாவைப் பார்த்தவர்களைக்கூட பார்த்துவிட்டு வருகிறார் நடிகர் கார்த்திக். ஆனால் ரத்தபந்தமான ஜெயலலிதாவின் அண்ணன் மகளைக்கூட அப்போலோவுக்குள் விடவில்லை. அந்த மருத்துவமனையின் பிரமாண்ட கேட்டைக்கூட தீபாவால் தாண்ட முடியவில்லை. ரத்தத்தின் ரத்தங்கள் அப்போலோ வாசலில் வாடிக் கிடக்கிறார்கள். அவர்களோடு ஒருவராகக் கலந்து கிடக்கிறார் ஜெயலிதாவின் மருமகள் தீபா! 

‘‘பத்து முறைக்கு மேல் அப்போலோவுக்குப் போய்​விட்டேன். ‘அத்தையைப் பார்க்க அனுமதியுங்கள்’ எனக் கெஞ்சிப் பார்த்துவிட்டேன். மெயின் கேட்டைக்கூட தாண்ட முடியவில்லை. ஒருமுறை போராடிப் போக முயன்றபோது ‘காத்திருங்கள் கேட்டுவிட்டு சொல்கிறோம்’ என்றார்கள். ரொம்ப நேரம் கழித்து ‘இப்ப சந்திக்க முடியாது. நீங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள். உயர் அதிகாரி ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்’ எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆனால், அதன்பிறகு யாரும் என்னை அழைக்கவே இல்லை. தினம் தினம் அப்போலோ வாசலில் நின்றுகொண்டே இருக்கிறோம்’’ என்கிறார் தீபா.  

நீண்ட முயற்சிக்குப் பிறகு தீபாவை சந்தித்தோம். லண்டனில் இதழியல் படித்துப் பட்டம் பெற்ற தீபா மனம் திறந்து பேசினார். ‘‘அத்தையை இதற்கு முன்பு சந்திக்காதவர்கள்கூட வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகிறார்கள். ரத்த சொந்தங்கள் எவரும் வந்து பார்க்க முடியவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியி ருப்பது எவ்வளவு கொடூரம்’’ எனச் சொல்லி அழுகிறார் தீபா. 

‘‘உங்கள் அத்தையுடன் இருந்த நாட்களைச் சொல்லுங்கள்?’’

மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி!

‘‘என்னுடைய அப்பா, அம்மாவுக்கு சென்னை தியாகராயர் நகரில் வீடு இருந்தபோதும் அத்தையின் போயஸ் கார்டனின் வீட்டில்தான் அவர்கள் அதிக நாட்கள் இருந்தார்கள். போயஸ் கார்டன் வீட்டில்தான் நான் பிறந்தேன். எனக்கு தீபா என்கிற பெயரை அத்தைதான் வைத்தார். மூன்று வயது வரையில் அங்கேதான் வளர்ந்தேன். அதன்பிறகு ராயப்பேட்டையில் இருக்கும் வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தேன். ராயப்பேட்டை வீட்டில் இருந்தபோதுகூட போனில் அத்தை எங்களுடன் பேசுவார். அத்தை என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். பிறந்தநாளுக்கு எனக்குப் பரிசுகள் கொடுத்தி ருக்கிறார். அவர் கொடுத்த புத்தகங்களையும் இப்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். கார்டனுக்கு எப்போது வேண்டுமானாலும் போய் வருவேன். என்னைப் பார்த்ததும் எந்தக் கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுப்பிவிடுவார்கள். அந்த அளவுக்கு கார்டனில் நான் செல்லப் பிள்ளையாக இருந்தேன். யார் கண்பட்டதோ தெரியவில்லை. அவரை சந்திக்கக்கூட முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டி ருக்கிறேன்”

‘‘கடைசியாக அத்தையை எப்போது பார்த்தீர்கள்?”

‘‘1995-ம் ஆண்டு செப்டம்பரில் வி.என்.சுதாகரன் திருமணம் நடந்தது. அக்டோபரில் என் அப்பா இறந்து போனார். அதன்பிறகு கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டன. நாங்கள் இருப்பது யாருக்கு பிரச்னை எனத் தெரியவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் போய் வர முடியவில்லை. 2002-ம் ஆண்டுதான் கடைசியாக அத்தையைப் பார்த்தேன். அதன்பிறகு அந்த ரோட்டுப் பக்கம்கூடப் போக முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எங்களை சிலர் ஒதுக்க ஆரம்பித் தார்கள். அப்போது நான் சின்னப் பெண் என்பதால் அதையெல்லாம் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. கடைசியாக அத்தையைப்  போய் பார்க்கப் போனபோது, ‘இவங்க இங்கே வந்தால் என்னிடம் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அங்கே இருந்த பணியாளர்களிடம் சொன்னார் அத்தை. ஆனால் அதன்பிறகு பல முறை அங்கே போனபோது விரட்டியடிக்கப் பட்டோம். நாங்கள் வந்து போன தகவலைக்கூட அத்தையிடம் சொல்லவில்லை. நான் அத்தையைப் பார்க்க வருவது சிலருக்குப் பிடிக்க வில்லை.’’

‘‘அந்தச் சிலர் யார்? சசிகலா குடும்பத்தினரா?’’

‘‘அவர்களைத் தவிர வேறு யார் அங்கே இருக்கிறார்கள். 1996-ம் ஆண்டு அத்தை கைது செய்யப்பட்டு சென்ட்ரல் அருகே மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்​பட்டிருந்தார். அப்போது சிறையில் போய் அவரைப் பார்த்தேன். அப்போது நான் சின்ன பெண். ‘எப்படி இருக்கீங்க அத்தை’ எனக் கேட்டேன். ‘நல்லா இருக்கேன். நீ இங்கே எல்லாம் வரக்கூடாது’னு சொல்லி என்னை அனுப்பி வைத்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் அத்தை அடைக்கப்பட்டிருந்த நேரத்தில்கூட போய்ப் பார்க்க முயன்றேன். சென்னை மத்திய சிறைச்சாலையில் எப்படி போய் அத்தையைப் பார்த்தேனோ அதேபோலதான் பெங்களூரிலும் போய் பார்க்க முயன்றேன். முடியவில்லை. அவர் ஜாமீனில் வந்தபோது கார்டனில் தொண்டர்களோடு கலந்து நின்றேன். அவரை நேரில் சந்திக்க முயன்று தோற்றுப் போனேன். நூற்றுக்கணக்கில் கடிதங்களும் ஃபேக்ஸ்களும் அனுப்பியும் அது அத்தையின் கைகளுக்குப் போய்ச் சேரவில்லை. எந்த நிலையிலும் அத்தையை எப்படியாவது சந்தித்துவிட முடியாதா எனத் தொடர்ந்து முயன்று வருகிறேன். முடியவில்லை’’ 

‘‘அத்தையை சந்திக்கவிடாமல் ஏன் தடுக்கிறார்கள்?’’

மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி!

‘‘அதுதான் புரியவில்லை. என்னைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் அத்தையிடம் தவறாகச் சொல்லி நெகட்டிவான செய்திகளைப் பரப்பி ரத்த பந்தங்களிடையே பிரிவை ஏற்படுத்திவிட்டார்கள். அத்தையை சந்திக்க முயன்றால்  ‘உங்களை மேடத்துக்குப் பிடிக்கவில்லை. சொந்த பந்தமே வேண்டாம்’ எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் அத்தை அப்படி நடப்பவர் இல்லை என்பது எனக்குத் தெரியும். நாங்கள் வந்தால் யாருக்காவது பாதிப்பு வரும் என நினைக்கிறார்கள் போல. நான் கார்டனில் வந்து போன காலத்தில்கூட அவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களை எந்த நேரத்திலும் நாங்கள் வெளியே போகச் சொல்லவில்லையே. ரத்த உறவுகளான எங்களை மட்டுமே சந்திக்கவிடாமல் தடுப்பது எதற்காக என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ரிலேஷன் கட்டாகிவிடும் என நினைக்கிறார்கள். அவர்கள் மட்டுமே பக்கத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சோல் புரோப்பரைட்டர் மாதிரி அத்தைக்குத் தனி உரிமையாளராக இருக்க விரும்புகிறார்கள். அதற்கு முட்டுக்கட்டைகள் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்’’

‘‘உங்கள் திருமணத்துக்குக் கூட ஜெயலலிதா வரவில்லையே, என்ன காரணம்?’’

‘‘நாத்தனார்( ஜெயலலிதா)  தலைமையில்தான் திருமணம் நடக்க வேண்டும் என என் அம்மா ரொம்பவே ஆசைப்பட்டார். நிச்சயம் முடிவதற்கு முன்பே அத்தையை சந்திக்க முயன்றார். முடியவில்லை. அத்தைக்கு எந்தத் தேதி வசதியாக இருக்கும் எனப் பார்த்து  அந்தத் தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ள அம்மா ஆசைப்பட்டார். நாத்தனார் இல்லாமல் திருமணம் நடக்ககூடாது என நினைத்தார். இதற்காக அத்தையிடம் இன்டிமேஷனும் கொடுக்க முடியவில்லை. இன்விடேஷனும் தர விடவில்லை.’’

“இப்போது ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நலம் பற்றி முன்பே உங்களுக்குத் தெரியுமா?” 

‘‘ என் அப்பா வெயிட் லிப்டிங் செய்து கொண்டிருந்தபோது எலும்பு முறிந்துவிட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட அத்தை உடனே டாக்டர் சொக்கலிங்கத்துக்கு போன் செய்து அண்ணனைப் பார்க்கச் சொன்னார். அண்ணனுக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதில் அக்கறை காட்டிய அத்தை, தன் உடல்நிலையைப் பற்றி நிச்சயம் அக்கறை கொண்டிருப்பார். ஆனால் தன்னுடைய உடல்நலத்திற்காக அவர் மருத்துமனைக்கே செல்லவில்லை. அதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார். அவரின் உடல்நிலையில் அக்கறை காட்டாமல் இருந்தது புரியாத புதிராக இருக்கிறது. அத்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மூன்று வாரத்துக்கு மேல் ஆகிறது. அவருக்கு என்ன நடந்தது என்று சுற்றியிருப்பவர்களைத் தவிர யாருக்கும் இதுவரை தெரியவில்லை. அப்பா ஜெயகுமார் இறந்தபோது எங்கள் இல்லத்துக்கு வந்து அத்தை ஆறுதல் சொன்னார். ஆனால் அவருக்கு ஆறுதல் சொல்லி பக்கத்தில் இருக்க முடியவில்லை. நான் மட்டுமல்ல. மற்றவர்களையும் அனுமதிக்கவில்லை.’’ 

‘`சொத்துக்கு ஆசைப்பட்டுதான் நீங்கள் வருவதாக சொல்லப்படுவது பற்றி?’’

மருத்துவமனையில் அத்தை.. வாசலில் மருமகள்.. தடுக்கும் மன்னார்குடி!

‘‘இப்போதுதான் அத்தையைப் பார்க்க முயல்வது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக அவரை சந்திக்க முயன்று வருகிறேன். ஏதோ நேற்றுதான் அவரை சந்திக்க முயன்றதாக ஒரு தோற்றம் உருவாக்கப்​படுகிறது. ‘உனக்குப் பெயர் வைத்ததே நான் தான்’ என அத்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு நான் அத்தையிடம் செல்லமாக இருந்தேன். அத்தையின் பாசத்துக்குகாகத்தான் ஏங்குகிறேன். இப்போது அவர் உடல்நிலை குன்றியிருக்கும் நிலையில் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள முடியவில்லை என்கிற கவலைதான் எனக்கு இருக்கிறது. எனக்கு சொத்து எல்லாம் வேண்டாம். அத்தை வேண்டும்!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.