News
Loading...

டீ கடை பெஞ்ச் : 13-11-16'லீவ்' எடுத்து லஞ்ச பணத்தை மாற்றும் அதிகாரிகள்

''பைக் வேணும்னு கேட்டிருக்காருங்க...'' என, பெஞ்ச் கச்சேரியை துவங்கினார் அந்தோணிசாமி.

''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு, செலவின பார்வையாளரா, அமித் பிரதாப் சிங் என்ற, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியை நியமிச்சிருக்காங்க... இவர், மதுரை சர்க்யூட் ஹவுஸ்ல தங்கி, தினமும், தொகுதிக்கு கார்ல போயிட்டு வர்றாருங்க...

''சில நாட்களுக்கு முன்னாடி, அமித் பிரதாப் சிங், 'எனக்கு ஒரு பைக் ஏற்பாடு பண்ணுங்க... தொகுதியில, தெரு தெருவா போய், கண்காணிக்கணும்'னு கேட்டிருக்காருங்க...

''தெரு தெருவா சுத்துனா, நம்ம கட்சிகளின் வண்டவாளம் எல்லாம் சந்தி சிரிச்சிடுமே... இதை கேட்டு, நம்ம அதிகாரிகள் பதறி போயிட்டாங்க... அதனால, 'சார் நீங்க இருக்கிற இடத்துல இருந்து, திருப்பரங்குன்றம், 15 கிலோ மீட்டர் இருக்கு... பைக்குல போறது எல்லாம் சரியா வராது... கார்லயே போயிட்டு வாங்க'ன்னு நாசூக்கா நழுவிட்டாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''சம்பாத்தியமே இல்லை... செலவுக்கு எங்க போறதுன்னு புலம்புதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''யாரு பா...'' என்றார் அன்வர் பாய்.

''திருவள்ளூர் மேற்கு மாவட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சமீபத்துல நடந்துச்சு... இதுல, பேசின மாவட்ட செயலர், கிருஷ்ணமூர்த்தி, 'தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தல்ல, நம்ம மாவட்டத்துக்கு, அஞ்சு வார்டுகள் ஒதுக்கி இருக்காங்க... தேர்தல் செலவுக்கு நகர செயலர்கள், தலா, 25 ஆயிரம், ஒன்றிய செயலர்கள், தலா, 20 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு வரணும்... நான், 90 சதவீதம் செலவு செய்றேன்... நீங்க, 10 சதவீதம் கூட செய்யலைன்னா, எப்படி கட்சியை நடத்த முடியும்'னு பேசியிருக்காரு வே...

''இதை கேட்ட நிர்வாகிகள், 'இந்த கட்சியில இருந்து, இதுவரைக்கும், பத்து பைசா சம்பாதிக்க முடியலை... செலவு மட்டும் செய்யுங்கன்னா, எங்க போறது... இந்த கூட்டத்துக்கு வந்ததே வேஸ்ட்'னு புலம்பிட்டே போனாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''லஞ்ச பணத்தை மாத்த, 'லீவ்' எடுத்துண்டு போயிடுறா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.''யாரை சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''சென்னை, சேப்பாக்கம் எழிலகத்துல, போக்குவரத்து, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நில நிர்வாகம், வணிக வரின்னு, 'பசை'யான துறைகளின் அலுவலகங்கள் இருக்கு... இதுல, அதிகாரிகள், ஊழியர்கள்னு ஆயிரக்கணக்குல வேலை பார்க்கறா ஓய்...

''இங்க, நிறைய லஞ்ச பணம் புழங்கும்... இதுல, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரைக்கும் பங்கு உண்டு... இப்ப, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாம போய், வங்கிகள்ல, அதை மாத்தி கொடுக்கறால்லியோ...
''எழிலகத்துல வேலை பார்க்கற அதிகாரிகள், ஊழியர்கள் பலர், 'லீவ்' போட்டு, தங்களிடம் இருந்த லஞ்ச பணத்தை மாத்திண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''அது சரி... எத்தனை மோடி வந்தாலும், இவங்களை திருத்த முடியாது பா...'' என, அன்வர் பாய் சலித்து கொள்ள, நண்பர்கள் சிரித்தபடி கிளம்பினர்.

கட்சி கொடி கம்பங்களில் காசு பார்த்த தாசில்தார்

''காசை கண்ணுல காட்டாம, விரட்டுறாங்களேன்னு புலம்பறா ஓய்...'' என, பெஞ்சில் முதல் ஆளாக பேச ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரு பா...'' என்றார் அன்வர்பாய்.''தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் ஆத்துக்காரம்மா பிரேமலதா, கட்சியில எந்த பொறுப்புலயும் இல்லை... ஆனா, கட்சியை அவங்க தான் வழிநடத்தறாங்க... இடைத்தேர்தல் தொகுதிகள்ல, பிரேமலதா பிரசாரம் செஞ்சுண்டு இருக்காங்காங்கல்லியோ...

''பிரசாரத்துக்கு நிறைய பேரை கூட்டிட்டு வாங்கோன்னு, நிர்வாகிகளிடம் சொல்றாங்க... அது மட்டும் இல்லாம, ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும், 100 பேரை அழைச்சிண்டு வந்து, தேர்தல் பணி செய்யணும்னும் சொல்றாங்க ஓய்...

''இதுக்கெல்லாம் பணம் எதுவும் தரமாட்டேங்கறாங்க... ஆனா, நிர்வாகிகள்கிட்ட எரிஞ்சு மட்டும் விழறாங்களாம்... இதனால, அவா எல்லாம் முழி பிதுங்கி போய் கெடக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''ஏட்டிக்கு போட்டியா நடந்துக்குறாங்க பா...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''கடலுார், கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலரா அமைச்சர் சம்பத்தும், மேற்கு மாவட்ட செயலரா,

எம்.பி., அருண்மொழித்தேவனும் இருக்காங்க... ரெண்டு பேரும், கீரியும், பாம்புமா இருக்காங்க பா...''சமீபத்துல, விருத்தாசலத்துல அமைச்சர் சம்பத் கலந்துக்கிட்ட அரசு விழாவையும், முதல்வருக்காக, கொளஞ்சியப்பர் கோவில்ல நடந்த பூஜையையும், அருண்மொழித்தேவன் புறக்கணிச்சுட்டாரு பா...

''ஆனா, அன்னைக்கு சாயந்தரமே, கொளஞ் சியப்பர் கோவிலுக்கு போன அருண்மொழித்தேவன், முதல்வர் குணமடைய வேண்டி, வெள்ளித் தேர் இழுத்தாரு...

''அதே மாதிரி, பூவாலை கிராமத்துக்கு, கடலுார்ல இருந்து அரசு பஸ்சை, அமைச்சர் சம்பத் துவக்கி வச்சாரு... அதே பஸ்சை, அருண்மொழித்தேவன், பூவாலை கிராமத்துல இருந்து துவங்கி வச்சாரு பா... இவங்க நிழல் யுத்தத்துல சிக்கி, தொண்டர்கள் தவியா தவிக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

'பழைய இரும்பு கம்பங்களை, எடைக்கு போட்டுட்டாருல்லா வே...'' என, அதிரடி தகவலை பேச ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''யாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''பெரம்பலுார் தாலுகா ஆபீஸ்ல, அதிகாரியா இருக்கிறவரை தான் சொல்லுதேன்... காசு விஷயத்துல மனுஷன் கறார் பேர்வழி... கமிஷன்ல ஒரு ரூபாய் குறைஞ்சாலும், கையெழுத்து போட மாட்டாராம் வே...

''சட்டசபை தேர்தலப்ப, தாலுகாவுல பொது இடங்கள்ல இருந்த கட்சி கொடி கம்பங்களை, பழைய தாசில்தார் அகற்றினார்... அந்த கம்பங்களை எல்லாம், தாலுகா அலுவலக வளாகத்துல போட்டு வச்சிருந்தாவ வே...

''நம்ம அதிகாரி, கொடி கம்பங்கள்ல இருந்த கட்சி கரைகளை, சிவப்பு பெயின்ட் அடிச்சு மறைச்சு, பழைய இரும்பு கடையில போட்டு, பணத்தை, பாக்கெட்டுல போட்டுக்கிட்டாரு வே...'' என்ற அண்ணாச்சி, ''நாயரே, பாலகிருஷ்ணன் வந்து பணம் கொடுத்தா, வாங்கி வச்சிரும்... நாளைக்கு வாங்கிக்கிடுதேன்...'' என கூறிவிட்டு கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...