News
Loading...

கரன்சி கட் - 1-ம் தேதி சம்பளம் என்ன ஆகும்?

கரன்சி கட் - 1-ம் தேதி சம்பளம் என்ன ஆகும்?

‘‘செல்லாக்காசு நடவடிக்கைக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது என்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய, ‘நரேந்திர மோடி ஆப்’ கருத்துக் கணிப்பு சொல்கிறதே? அவர் நூற்றுக்கு 92 மதிப்பெண்களை வாங்கி உள்ளாரே?” 

‘‘அதைக் கேட்கிறீரா? ‘ரூபாய் நோட்டு தொடர்பான சர்வே மோடியின் ஆப் கடந்த 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 5 லட்சம் பேர் வாக்களித்த அந்தக் கருத்துக் கணிப்பில், ‘மோடியின் அறிவிப்பு சிறப்பானது; இது கறுப்புப் பணத்தை நிச்சயம் ஒழிக்கும்’ என்ற ரீதியில், 92 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வெறும் 2 சதவிகிதம் பேர்தான், ‘இது மோசமான அறிவிப்பு’ என்று குறிப்பிட்டுள்ளனர். மீதி உள்ளவர்கள், ‘இந்த அறிவிப்புக்குப் போதிய கால அவகாசம் கொடுத்திருக்கலாம்’ என்றும் ‘நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்திருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.”

‘‘இதெல்லாம் மோடியை ஃபாலோ செய்பவர்களது கணிப்பு அப்படித்தானே?”

‘‘ம்! ‘மோடி ஆப்’ சொல்லும் ரிசல்ட்டுக்கும் எதார்த்தத்துக்கும், மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது. அதற்கான உதாரணங்களை யாரும் எங்கேயும் போய்த் தேடவேண்டியத் தேவை இல்லை.  ஒவ்வொருநாளும் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கின்றனர். சுமார் 125 கோடி மக்களுக்கு சுமார் இரண்டு லட்சம் ஏ.டி.எம் எந்திரங்கள்தான் உள்ளன. அவற்றிலும் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கு இன்னும் வசதி செய்யப்படவில்லை; அதில் எடுக்கப்படும் பணத்தை மாற்றிச் செலவு செய்வதற்கும் வழியில்லை; புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் தமிழகத்தை வந்தடைந்ததாகவேத் தெரியவில்லை. இத்தனைக்கும் மேலாக, ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு வேறு. இப்படி தொந்தரவுகள் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன!”

‘‘இந்தக் குழப்பங்கள் எல்லாம் எப்போதுதான் தீரும்?”

‘‘குழப்பங்கள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. இப்போது நடப்பது எல்லாம் ‘ட்ரெய்லர்’. மெயின் பிக்சர் டிசம்பர் 1-ம் தேதிதான் ஆரம்பிக்கப்போகிறது. அதன்பிறகுதான் உச்ச நீதிமன்றம் சொன்னது மாதிரி ‘தெருக்களில் கலவரம்’ ரேஞ்சுக்கு பிரச்னைகள் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மத்திய உளவுத்துறை இந்த அர்த்தத்தில் தனது அறிக்கையைத் தயாரித்துச் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லியும் இருக்கிறதாம்!”

‘‘அப்படியா?”

‘‘டிசம்பர் 1-ம் தேதி, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் வந்துவிடும். இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் 46 லட்சம் பேர். மத்திய அரசின் ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் ஏறத்தாழ 55 லட்சம் பேர். இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில்தான் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வரவு வைக்கப்படுகிறது. இவர்கள் தவிர்த்து, 48 கோடி பேர் தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். இவர்களில் 27 கோடிப்பேர் கார்ப்பரேட் ஊழியர்கள் என்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரம். தமிழக அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுகிறவர்கள் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் பேர். இவர்கள் அனைவருக்கும் 1-ம் தேதி, அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் ஊதியம் வரவு வைக்கப்படும். அதை எடுப்பதற்கு ஒட்டுமொத்தமாக அனைவரும் வங்கிகளின் வாசல்களிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் வரிசை கட்டுவார்கள். அப்போதுதான் இருக்கிறது சீரியஸான விவகாரம்!”

‘‘இதை உணர்ந்துள்ளார்களா?”

‘‘இந்த விவகாரம் சீரியஸாகக் கவனத்தில் வைக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. நாடு முழுக்க இருப்பதே இரண்டு லட்சம் ஏ.டி.எம் மெஷின்கள்தானே. அவற்றில், இப்போதுதான் 85 ஆயிரம் ஏ.டி.எம் மெஷின்களைத் தரம் உயர்த்தி உள்ளார்களாம். மீதமிருப்பவை எல்லாம் இன்னும் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆனால், 1-ம் தேதியை முன்னிட்டு வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், பஸ் மற்றும் ரயில் பாஸ் மற்றும் அன்றாட வீட்டுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு வேறு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு வங்கியின் வாசல்கள் ஏ.டி.எம் வாசல்களில் சந்தைக்கடையைப்போல் கும்பல் கும்பலாகக் கூடப் போகிறார்கள். அதில் ஏற்படப்போகும் குழப்பம் எப்படி இருக்கும், அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும். இதுவரை நடந்த குழப்பங்கள் வேறு. ஆனால், டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு நடக்கும் குழப்பங்களும் சிரமங்களும் நாடு முழுவதும் வியாபித்திருக்கும். பணம் கேட்டு வங்கிக்குப் போவார்கள், வங்கிகளில் பணம் இருக்காது. என்ன செய்யும் ஜனம்? யோசிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது!”

‘‘வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம் அனைத்தையும் செக் கொடுத்துக் கட்டுங்கள் என்று மத்திய அரசு சொல்லி உள்ளதே?”

‘‘நடக்கிற காரியமா இது. செக்கில் பணம் வாங்கும் அளவுக்கு எந்தப் பள்ளிக்கூடத்தில் நேர்மையாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்? அதுபோல, வீட்டு உரிமையாளர்களிடம் போய் செக் கொடுத்து நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? அன்றாடம் செய்யும் சில்லரைச் செலவுகளுக்கு எல்லாம் செக் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. பணம் எடுப்பதிலும் பிரச்னை. அதைச் செலவு செய்வதிலும் பிரச்னை. செலவு செய்த பணத்துக்கு மீதி சில்லரை வாங்குவதிலும் பிரச்னை என்று நாலா பக்கமும் வெடிக்கப் போகிறது” 

‘‘ம்!”

‘‘மிடில் க்ளாஸ் ஆள் ஒருவரைக் கேட்டேன். ‘எல்லா மாசமும் 10-ம் தேதிக்கு அப்புறம்தான் காசில்லைங்கிற பிரச்னை ஆரம்பிக்கும். ஆனா அடுத்த மாசம் 1-ம் தேதியிலிருந்தே ஆரம்பிச்சுடும் போலிருக்கு. வீட்டு வாடகை, பால், மளிகை, காய்கறி, ஈ.பி, காஸ், மெடிக்கல், ஸ்கூல் பீஸ்-னு எல்லாச் செலவுகளும் மாசம் பொறந்ததும் வாசல்ல வந்து நிக்கும். அக்கவுன்ட்ல பணம் இருந்தாலும் பணத்தை எடுக்குறதுல உள்ள சிரமம், அதைவிடவும் சில்லரையா மாத்துறதுல உள்ள சிரமம்னு எல்லோரும் ஒரே நேரத்துல முட்டிக்கிட்டு நிக்கப்போறோம்’ என்று புலம்பினார். பேச்சுலர்ஸ் நிலைமையோ இன்னும் மோசம். அப்பப்ப அவசரத் தேவைக்கு மட்டும் 100, 200 என்று ஏ.டி.எம்-ல் எடுத்து செலவழிப்பாங்க. ஆனா, இப்ப உள்ள நிலைமையில மொத்தமா எடுத்தாக வேண்டிய சூழ்நிலை. மேன்ஷன் உரிமையாளர்களும்கூட வாடகையை 100 ரூபாய் நோட்டுகளாகத் தரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்களாம். ஒரு நாளில் வெறும் 100 ரூபாயை வைத்தே ரோட்டோரக் கடைகளில் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். ஆனால், இப்போதோ கார்டு தேய்த்தே பில் கட்ட வேண்டியிருப்பதால், பெரிய ஓட்டல்களுக்கு செல்லவேண்டிய கட்டாயம். அங்கு ஒரு வேளைக்கே 100 ரூபாயைத் தாண்டுகிறது என்று புலம்புகிறார்கள்’’ என்றபடியே எழுந்த கழுகார் ‘ஜெயலலிதாவை சந்திக்க அப்போது வருகிறார் இப்போது வருகிறார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நரேந்திர மோடி இதுவரை வரவில்லை. ஆனால், கடந்த வியாழன் அன்று டெல்லியில் அ.தி.மு.க எம்.பி.-க்களை சந்தித்த  நரேந்திர மோடி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அக்கறையோடு விசாரித்திருக்கிறார். ‘நான்கைந்து நாட்களாக நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு பிரச்னையை கிளப்பும் எதிர்க் கட்சிகளோடு அ.தி.மு.க எம்.பி.-களும் கைகோர்த்து இருந்ததைப் பார்த்த நரேந்திர மோடி அவர்களை ஐஸ் வைப்பதற்காக ஜெயலலிதா பற்றி விசாரித்தார்’ என்று  சொல்கிறார்கள்’’ 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...