News
Loading...

500 கோடியில் திருமண கொண்டாட்டம்... 500 ரூபாய்க்கு தெருவில் திண்டாட்டம்!

500 கோடியில் திருமண கொண்டாட்டம்... 500 ரூபாய்க்கு தெருவில் திண்டாட்டம்!

இந்தியாவே திரும்பிப் பார்க்கவைத்தது, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் கல்யாணம். அந்த ரிக்கார்டை உடைத்தெறிந்துள்ளது கர்நாடகாவில் நடந்துள்ள ஒரு திருமணம். தேசம் முழுவதும் வங்கிகளில் சாமான்யர்கள் காத்துக்கிடக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்த பி.ஜே.பி-யின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் இல்லத் திருமணம் பெரும் ஆடம்பரத்துடன் நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும், ஆந்திரா சுரங்க அதிபரின் மகனான ராஜீவ் ரெட்டிக்கும் நடந்த திருமணம்தான் இது. இந்த கல்யாணப்பந்தலுக்குள் நுழையும் முன்பாக, ஜனார்த்தனரெட்டியின் ஃபிளாஷ்பேக்... 

ஜனார்த்தன ரெட்டியின் தந்தை தலைமைக் காவலராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மகன்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி என மூன்று பேரும் சேர்ந்து சுரங்கக் கம்பெனி தொடங்கினார்கள். பெல்லாரி மாவட்டத்தில் கனிம வளங்களைச் சுரண்டி, குறுகிய காலத்திலேயே கோடிகளில் புரண்டார்கள். ஒரு நாளைக்கு, குறைந்தது 5 கோடி சம்பாதித்தார்கள். காலை உணவைச்சாப்பிட்டு விட்டு சுரங்கத்துக்குச் சென்றால், மதிய உணவு சாப்பிட ஹெலிகாப்டரில்தான் வீட்டுக்கு வருவார்கள். தாய் ருக்மணி பெயரில் ஹெலிகாப்டர் வைத்திருந்தார்கள். வசதிகள் உயர ஆரம்பித்ததும் பி.ஜே.பி-யில் இணைந்தார்கள் ‘ரெட்டி பிரதர்ஸ்’.  

1999 நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி பெல்லாரியில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ் நிறுத்தப்பட்டார். சுஷ்மா சுவராஜுக்கு பக்கபலமாக நின்றார்கள் ரெட்டி பிரதர்ஸ். சுஷ்மா பிரசாரத்தில் ரூபாய் நோட்டுகள், பரிசுப் பொருட்கள் என மக்களை திக்குமுக்காட வைத்தார்கள். 3,58,000 வாக்குகளை வாங்கினார் சுஷ்மா சுவராஜ். இதற்குப் பின்னால் இருந்தது ரெட்டி சகோதரர்களின் உழைப்பு.

500 கோடியில் திருமண கொண்டாட்டம்... 500 ரூபாய்க்கு தெருவில் திண்டாட்டம்!

சுஷ்மாவுக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கம் அதிகமானது. ரெட்டி சகோதரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் ஆஜரானார் சுஷ்மா. வருடம்தோறும் நடக்கும் வரலட்சுமி பூஜைக்கு சுஷ்மா தவறாமல் நேரில் வந்து வாழ்த்துவார். ‘‘வரலெட்சுமி பூஜைக்கு வருபவர்கள் கைநிறைய ‘லட்சுமி’களைப் பெற்றுச் செல்வார்கள்’’ என கர்நாடக முதல்வர் சித்தராமையாவே சொல்லியிருக்கிறார். எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார் ஜனார்த்தன ரெட்டி. அவரது சகோதரர் கருணாகர ரெட்டி வருவாய்த் துறை அமைச்சர் ஆனார். உபயம் சுஷ்மா. எடியூரப்பா அமைச்சரவையில் ரெட்டி பிரதர்ஸின் அதிகாரம் வலுப்பெற்றது. எடியூரப்பாவுக்கே தண்ணி காட்டினார்கள். பெல்லாரி கலெக்டரை தங்களை கேட்காமல் மாற்றியதற்காக 50 எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து, எடியூரப்பாவின் முதல்வர் நாற்காலியை ஆட்டம்காணச் செய்தனர்.  பி.ஜே.பி.தலைமையிடம் ரெட்டி சகோதரர்களுக்கு செல்வாக்கு இருந்ததால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. அதன்பிறகு எடியூரப்பாவின் பதவி போனதும், அவர் தனிக் கட்சி ஆரம்பித்ததும், மீண்டும் பி.ஜே.பி-க்கு வந்ததும் தனிக் கதை.

அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில், சுரங்க முறைகேடு வழக்கு உட்பட ஜனார்த்தன ரெட்டி மீது 8 வழக்குகள் பாய்ந்தன. ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் ஜனார்த்தன ரெட்டி அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வருவதற்காக ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரூ.50 கோடி கொடுத்த வழக்கு மேலும் இறுக்க... ஜனார்த்தன ரெட்டி வெளிவர முடியாமல் 3 வருடங்களுக்கு மேல் சிறையிலேயே காலத்தை ஓட்டிவிட்டு, இரு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவருடைய வங்கிக் கணக்குகள், சொத்துக்களை சி.பி.ஐ முடக்கிய நிலையில், மகளின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தியிருப்பதுதான் வியப்பை அதிகரித்துள்ளது.  

இப்போது திருமணத்துக்குள் போவோம். அழைப்பிதழே பாகுபலி பிரமாண்டம்தான். எல்.சி.டி பெட்டியாக அழைப்பிதழை வடிவமைத்திருந்தனர். பெட்டியை திறந்தால் எல்.சி.டி ஸ்கிரீனில் சினிமாவைப்போல பாடல் ஒளிபரப்பாகியது. அதில், ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தினர் மணமக்கள் தோன்றி திருமணத்துக்கு அழைக்கிறார்கள். இடையில், மணமக்கள் டூயட் காட்சியில் தோன்றுகிறார்கள். அழைப்பிதழ்களுக்கு மட்டும் ரூ. 2.25 கோடி செலவாம்.  திருமணச் செலவு ரூ. 650 கோடி என அறிவிக்கப்பட்டபோதும் ரூ. 1,000 கோடியை தாண்டிவிட்டதாம்.  

திரைப்பட ஆர்ட் கலைஞர்களை வைத்து செட் போட்டிருந்தனர். பெங்களூரு அரண்மனையின் நுழைவு வாயிலை, திருப்பதி கோயிலைப் போல மாற்றியிருந்தனர். அரண்மணைக்கு வெளியே 38 ஏக்கர் மைதானத்தில் அவரவரின் சொந்த ஊரைப்போல வடிவமைத்து இருந்தனர். தாலிக் கட்டும் மணமேடை, விஜயநகரப் பேரரசின் தர்பாரை போல பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

500 கோடியில் திருமண கொண்டாட்டம்... 500 ரூபாய்க்கு தெருவில் திண்டாட்டம்!

வி.ஐ.பி-க்கள் வருகைக்காக 15 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டிருந்தன. வி.ஐ.பி-களுக்காக பெங்களூருவில் உள்ள அனைத்து ஸ்டார் ஹோட்டல்களும் 2,000 கார்களும் புக் ஆகியிருந்தன. கட்சிக்காரர்களும், தொண்டர்களும் வருவதற்காக சொகுசுப் பேருந்துகளும் இருந்தன. ஒரு வாரத்துக்கும் மேலாக திருமணச் சடங்குகளும் நிகழ்ச்சிகளும் நடந்தபடியே இருந்தன். மணமகள் வீட்டில் கன்னட, தெலுங்கு, தமிழ், பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருமண வரவேற்பில் ஷாருக்கான், பிரபுதேவா, தமன்னா, கத்திரினா கைஃப் உள்ளிட்ட ஸ்டார்களின் நடனங்களும் அரங்கேறின. 

இவை எல்லாம் இருக்கட்டும். கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லி களத்தில் குதித்துள்ள மோடியின் தலைமையிலான பி.ஜே.பி புள்ளிகள் பலரும் இந்த ஆடம்பர திருமணத்தில் குதூகலத்துடன் பங்கேற்றனர். வங்கிகளின் மீது கவனத்தைக் குவித்துள்ள வருமான வரித் துறையினர் ரெட்டியின் இல்லத் திருமணத்தை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் மேட்டர்.

‘‘500, 1000 செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள்; பணக்காரர்கள் தூக்க மாத்திரைக்காக அலைகிறார்கள்’’ என்றார் பிரதமர் மோடி. மோடி சொன்னது, ரெட்டி போன்ற ‘ஏழை’களைத்தான். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.