News
Loading...

ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம்

ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம்

பெங்களூரு மாநகரம் திணறியது

500 ரூபாய்க்காக‌ வங்கிகளின் வாசலில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில், கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன‌ ரெட்டி, ரூ.650 கோடி செலவில் தனது மகள் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார்.

ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரங்க அதிபர் விக்ரம் தேவரெட்டியின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக ரூ.6 கோடி செலவில் எல்சிடி வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

திருமணத்துக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் காலத்து அர‌ண்மனை, திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில், ஹம்பி விட்டாலா கோயில், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரியில் உள்ள காளி கிராமம், தாமரைக் குளத்துடன் கூடிய‌ கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டன.

திரைப்பட பாணியிலான‌ இந்த செட்களை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களின் கலை இயக்குநர்கள் ஒன்றரை மாதங்களாக உருவாக்கினர். மேலும் அரண்மனை மைதானம் முழுவதும் பெரிய அளவிலான கேமிராக்கள், எல்சிடி திரைகள் ராட்சத பலூன்கள், அலங்கார வளைவுகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. மணமக்களின் குடும்பத்தார் சவாரி செய்வதற்காக 40 குதிரை சாரட் வண்டிகளும், 40 மாட்டு வண்டிகளும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து கடந்த 12-ம் தேதி இரவு நலங்கு நிகழ்வில் தொடங்கி தினமும் ஒவ்வொரு இரவும் மெஹந்தி, சங்கீதம், நடனம் என விதவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் மணமக்களின் குடும்பத்தினரும், பாஜகவினரும் அதிகளவில் பங்கேற்றனர்.

ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம்

வைரத்தில் ஜொலித்த ரெட்டி குடும்பம்

முகூர்த்த தினமான நேற்று காலை ஜனார்த்தன ரெட்டி தனது மகளை சாரட் வண்டியில் அமர வைத்து திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில் போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தார். வைரம் மற்றும் தங்கத்தால் ஜரிகை செய்யப்பட்ட சேலை அணிந்திருந்த பிராமணிக்கு முழுவதும் வைரத்தால் ஆன நகைகளை அணிவித்து இருந்தனர். இதேபோல மணமகன் ராஜீவ் ரெட்டி உட்பட இரு குடும்பத்தாரும் முழுவதும் வைரத்தால் ஆன நகைகளே அணிந்திருந்தனர்.

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள், ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர்கள், பெல்லாரி மக்கள் என லட்சக் கணக்கானோர் குவிந்தனர். திருப்பதியில் இருந்து அழைத்துவரப்பட்ட 8 வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓதி, ஜனார்த்தன ரெட்டி முன்னிலையில் பிராமணி கழுத்தில் ராஜீவ் ரெட்டி தாலி அணிவித்தார்.

குவிந்த பாஜக தலைவர்கள்

நாட்டில் கறுப்புப் பணம் விவகாரம் அனல் பறக்கும் வேளையில் பாஜக தேசிய தலைவர்கள் இந்த ஆடம்பர திருமணத்துக்கு வரமாட்டார்கள் என முதலில் தகவல் வெளியானது. எனவே கர்நாடக போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டு, தனியார் பாதுகாவலர்கள் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார், வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இதேபோல கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஷால், சரத்பாபு, சாய்குமார் ஆகியோரும், கன்னட நடிகர்கள் ரவிச்சந்திரன், சாது கோகிலா உட்பட ஏராளமான திரையுலகினரும் பங்கேற்றனர். இந்த திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

மகிழ்ச்சியில் ரெட்டி

ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம்

இறுதியாக ஜனார்த்தன ரெட்டி கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளாக நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் இங்கு குவிந்திருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக மாற்றிவிட்டனர். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என இங்கு ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. எனக்கு எத்தகைய சோதனைகள் வந்தபோதும் எனது நண்பர் ஸ்ரீராமலு என்னோடே இருந்தார். இதிகாசங்களில் மட்டுமே காணப்பட்ட இத்தகைய நட்பு, இப்போது உங்கள் முன்னால் இருக்கிறது. இந்த திருமணத்துக்காக ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நாட்டில் மக்கள் 500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கும் அல்லாடும் சூழலில் ஜனார்த்தன ரெட்டி வீட்டு பிரம்மாண்ட‌ திருமணம் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பெரும்பாலான பார்வையாளர்கள், “பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்துள்ள நிலையில், ஜனார்த்த ரெட்டிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? இவரெல்லாம் எந்த வங்கியில் போய் வரிசையில் நின்று இவ்வளவு பணத்தையும் மாற்றினார். இந்த நாட்டு சட்டங்கள் எல்லாம் ஏழைகளுக்கு மட்டும் தானா?” என கேள்வி எழுப்பிக்கொண்டே சென்றனர்.

அசர வைத்த வாகன படையெடுப்பு

ஜனார்த்த ரெட்டி மகள் திருமணத்துக் காக பெல்லாரி, ஆந்திரா ஆகிய இடங் களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் வந்தன. இதேபோல 1800 டாக்ஸிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிகளின் ஆடி, ஜாகுவார், பிஎம்டபுள்யூ போன்ற‌ விலை உயர்ந்த கார்களும் படையெடுத்தன. இது தவிர சிங்கப்பூர், மலேசியா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த விவிஐபிகளின் வசதிக்காக 15 ஹெலிபேடுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முகூர்த்த புடவை விலை ரூ.17 கோடி

மகள் திருமணத்தின் காரணமாக ஒட்டுமொத்த பெல்லாரி ரெட்டி சகோதர்கள் குடும்பமே வைரத்தால் மின்னியது. குறிப்பாக பெண்கள் அனைவரும் ஒட்டியானம், காப்பு உட்பட வகைவகையான வைர நகைகளை அணிந்திருந்தனர். அதிலும் மணமகள் பிராமணி அணிந்திருந்த ஒட்டுமொத்த நகைகளை மதிப்பிட வருமான வரித்துறை நாள் கணக்கில் செலவிட வேண்டும். அவர் அணிந்த முகூர்த்த புடவையின் விலை மட்டும் ரூ.17 கோடி. தங்க ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த புடவையில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம்

வெற்றிலை செலவு ரூ.50 லட்சம்

பெங்களூரு அரண்மனையில் கடந்த 5 நாட்கள் இரவில் நடைபெற்ற பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் செலவு மட்டும் ரூ.50 லட்சம். இதில் திருமண தினமான நேற்று மட்டும் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. வெற்றிலை பாக்கு மடித்து தருவதற்காக 500 மாடல்களும், 500 இளம்பெண்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். பாக்குக்கு பெயர் பெற்ற பெல்லாரியில் உள்ள குல்சார் பான் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்டு வெற்றிலை பாக்கு வகைகளை உருவாக்கினர்.

ரோஜா, மல்லிகை தூவ மாடல்கள்

திருமணத்தின் போது விருந்தினர்களை வரவேற்கவும், சிவப்பு கம்பளத்தின் மீது நடக்கும் மணமக்களின் மீது காஷ்மீர் ரோஜா மற்றும் ஆம்பூர் மல்லி பூக்களை தூவுவதற்கு மாடல்கள் வரவழைக்கப்பட்டனர். இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து தலா 500 ஆண் மற்றும் பெண் மாடல்கள் வந்திருந்தனர். இந்த மாடல்களுக்கு வெள்ளை நிற பட்டு வேட்டு சட்டை, வெள்ளை நிற பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகைகள் சீருடையாக வழங்கப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.