News
Loading...

“7 1/2 பர்சென்ட் கொடு!” - கமிஷன் கேட்ட கல்வியாளர்...

“7 1/2 பர்சென்ட் கொடு!” - கமிஷன் கேட்ட கல்வியாளர்...

கல்விப் பணியில், மிகப் பெரும் வெற்றிக் கொடியை நாட்டிச்சென்றவர் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர். ராதாகிருஷ்ணன். அதனால்தான் அவரது பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால், அத்தனை மதிப்பு மிக்கவரின் பெயரைக்கொண்ட கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ஆர்.ராதாகிருஷ்ணன் கல்வித் துறைக்கு புதிய அவமானப் பட்டத்தை வாங்கிக்கொடுத்துள்ளார்.

பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``2008-2009-ல் கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜோதிபுரத்தில் இயங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றியவர் ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் பொறுப்பேற்றப் புதிதில், ‘ஆர்.ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழக முன்னேற் றத்துக்குப் பாடுபடுவார்’ என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ராதாகிருஷ்ணனோ இதனை சம்பாதிக்கும் தொழிலாகவேப் பார்த்தார். தன் மனைவியுடன் இணைந்து புதிய புதிய பெயர்களில் இடங்கள் வாங்கிக் குவித்ததோடு, அந்த இடங்களை உயர்தர வீட்டுமனைகளாக மாற்றினார். கோவை வடவள்ளி பகுதியில் சுமார் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் அட்டகாசமான வீட்டு மனைகள் ரெடி செய்து வைத்திருக்கிறார். கல்வித் துறையின் பணத்தை தனது வீட்டுக்கு தண்ணியாய் வாரி இறைத்துள்ளார். இவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது செய்த மாபெரும் சாதனை என்று சொல்லப்போனால், லஞ்சம் வாங்கிக் குவித்தது மட்டுமே. 

முதலில் வரை கோவை அண்ணா பல்கலைக் கழகமாக செயல்பட்டது. 2011-ல் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு மண்டல மையமாகவே செயல்பட்டுவருகிறது. மேஜை, நாற்காலி வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கிய வழக்கில் தற்போது கைதாகியிருக்கும் ராதாகிருஷ்ணன், இதில் மட்டும் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். ஒப்பந்தக்காரர்கள் முகமது இக்பால் மற்றும் செந்தில்குமாரிடம் இதற்காக டிமாண்ட் வைத்து பேசியுள்ளார். 

ஒரே இடத்தில் மேஜை, பலகைகள் வாங்கினால் தவறுகள் தெரிந்துவிடும் என்று இரண்டு இடத்தில் ஒப்பந்தம் பேசியுள்ளார். ‘பொருட்களில் 10 சதவிகிதம் எனக்குக் கொடுத்துவிடவேண்டும்’ என்றும் அவர்களோடு ஒப்பந்தம் பேசியுள்ளார். ஆனால், ஒப்பந்தக்காரர்களோ ‘5 சதவிகிதம் என்றால் ஓ.கே’ என்று சொல்லி உள்ளனர். பிறகு நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் ஏழரை சதவிகிதம் என்றால் ஓ.கே’ என்று டீல் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன் ராதாகிருஷ்ணனுடன் ஒப்பந்தம் பேசிய ஒப்பந்தக்காரர்கள் ‘5 சதவிகிதத்துக்கு மேல் தரமுடியாது’ என்று கறாராகச் சொல்லி கடையை மூடி விட்டார்களாம். செந்தில்குமார் மற்றும் இக்பாலும்தான் ஃபிட்டாக இருந்தனராம். அதனால், கிடைத்தவரை லாபம் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். பிறகு வேலை விரைவாகத்தான் முடிந்தது... ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை ஒப்பந்தக்காரர்கள் இந்தப் பொருட்களிலிலேயே சரிக்கட்டியாகவேண்டும் என்பதால், தரமற்ற பொருட்களாக செய்து கொடுத்துவிட்டனர். 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை மறைமுகமாக விசாரித்துவந்தது. தகவல் உண்மையென்று தெரிய வந்ததும் கவர்னரிடம் அனுமதி பெற்று உரிய விசாரணை நடந்தது. சாய்பாபா காலனிப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். அப்போது ராதாகிருஷ்ணனும், அவருடைய மனைவி அமிர்த சஞ்சீவியும் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக் குவித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெஞ்ச், நாற்காலி வாங்கிய வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என்ற இரு வழக்கிலும் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அமிர்த சஞ்சீவி இருவர் மீதும் கடந்த 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்’’ என்றனர். 

இதையடுத்து ராதாகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதற்கிடையில்தான் மேஜை, நாற்காலி வாங்கியதில், 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு கோவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 17 சாட்சிகளுடன் 32 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன், ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.