News
Loading...

74 வயது பெண் சாமுராய்!

74 வயது பெண் சாமுராய்!

இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்கே மீனாட்சி அம்மாவின் களரி ஃபைட் தான். குதிரை போலப் பாய்ந்து, இரும்புக் கேடயத்தை உயர்த்தி, பளபளக்கும் கத்தியை சாமுராய் போல எதிராளியின் கழுத்தில் வைக்கிறார் மீனாட்சி. கழுகைப் போன்ற கூர்மையான பார்வையுடைய மீனாட்சிக்கு வயது 74 என்பதை நம்ப முடியவில்லை. மீனாட்சி தன்னைவிட 40 வயது குறைவானவருடன் களரிச் சண்டைபோடும் வீடியோ பெரும் வைரலாகியது. எல்லோரும் அவருக்கு ‘சாமுராய் அம்மா’ என்ற புனைப்பெயரே வைத்துவிட்டனர். 

பல வருடங்களாக கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரியைக் கற்றுக்கொடுத்து வரும் மீனாட்சியின் ஸ்டைலான களரி ஃபைட்டுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. ‘‘களரிச் சண்டையில் எதிராளியைத் தாக்குவதை விட, தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதே முக்கியமானது. நம் மனதையும், உடலையும் உறுதியாக்கும் தற்காப்பு வித்தைகளில் முக்கியமானது களரி. 

கல்வியைப் போல  எல்லா பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டியது களரிக் கலைதான். வாள் வீச்சு மட்டுமல்ல... குறுவாள், சிலம்பம்... ‘உறுமி’ (சுருள் பட்டா), ஈட்டிச் சண்டையும் சொல்லிக் கொடுப்பேன்..’’ என்று மலைப்பை ஏற்படுத்துகிறார்  மீனாட்சி அம்மா. கேரளம்  கடத்தனாடன் களரியில், ஒவ்வொரு நாளும் வீரக்கலையான களரியின் அதகளம்தான். களரியுடன் இருபத்தெட்டு ஆண்டுகளாக மீனாட்சி  இணைந்திருக்கிறார். பார்த்தால் ‘வயது ஐம்பது’தான் எனத் தோன்றும் அளவுக்கு உடலை கட்டுக்குள் வைத்திருக்கிறார். 

சிறுவயதிலேயே களரியைக் கற்று, இன்றைக்கு  களரி கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்களில் முக்கியமானவராக இருக்கிறார் “எனது அப்பா களரியின் தீவிர ரசிகர்... அதனால் என்னை ஆறு வயதிலேயே களரியில் சேர்த்து விட்டார். நான் வயதுக்கு வந்ததும், வீட்டில் பெரியவர்கள் ‘பொண்ணு வயசுக்கு வந்துட்டா.. இனியாவது களரிப் பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வை’ என்று அப்பாவிடம் சொன்னார்கள். ஆனால், ‘பெண்ணுக்கு தன்னம்பிக்கை வேண்டும். 

அந்தத் தன்னம்பிக்கையை களரி கொடுக்கும்’ என்று சொல்லி அப்பா என்னை களரிப் பயிற்சிக்குத் தொடர்ந்து அனுப்பினார். களரியை அர்ப்பணிப்புடன் கற்றேன்.   பதினேழு வயதில், இந்த கடத்தனாடன் களரியில் பயிற்சியாளராகச் சேர்ந்தேன். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 பேர் களரிப் பயிற்சி பெறுகிறார்கள். ஆறு வயது சிறுவர் சிறுமியர் முதல் இளைஞர்கள், குடும்பப் பெண்கள் வரை ஆர்வத்துடன் களரியைக் கற்றுக்கொள்கிறார்கள். 

காலை, மாலை, இரவு என்று மூன்று வகுப்புகள் நடக்கும். இரவு பெண்களுக்கு மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படும். இந்தக் களரியில் வயதுதான் முக்கியம். சிறு வயதில் பயிற்சியைத் தொடங்குவது நல்லது. சின்ன வயதில் தொடங்கினால் சீக்கிரம் களரியைக் கற்றுக் கொள்ளலாம். களரிப் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த மாதங்களில் கேரளத்தில் கடுமையாக மழை பெய்யும். 

அந்த மாதங்களில் உடலை வெப்பமாக வைத்துக்கொண்டு சிறு நோய்களை விரட்டவும் களரிப் பயிற்சி உதவுகிறது; மனமும் பக்குவமடையும்’’ என்கிறார் சாமுராய் அம்மா. இங்கே களரிப் பயிற்சிக்கு என்று தனியாக எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. குருதட்சணை மட்டும் பெறப்படுகிறது. குருதட்சணையிலும் இவ்வளவுதான் தர வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. களரிச் சண்டை கல்விக் கூடங்களில் பாடமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.