News
Loading...

9 மாதகால பிரசவ விடுமுறை

9 மாதகால பிரசவ விடுமுறை

தேர்தலில் ஒரு கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதில் தேர்தல் அறிக்கை மிக முக்கியப்பங்கு வகிக்கும். கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வின் சார்பில் ‘‘50 தலைப்புகளில்’’ தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில், அரசு பெண் ஊழியர்களின் பிரசவ விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பர் 1–ந் தேதி சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அவர், ‘பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக்கருத்தில்கொண்டு, நான் 2011–ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், அரசுப்பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப்பாதுகாக்க, 1980–ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன். எங்களது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகாலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், ‘அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணிப்பாதுகாக்கும் வகையில் பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பு, 9 மாதகாலமாக உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்’ என்றார்.

இந்த அறிவிப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. உடனடியாக அமலுக்கு வந்த இந்த உத்தரவின்படி, ‘2 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பெண் அரசு ஊழியர்களின் பிரசவகால விடுமுறை உடனடியாக முழுச்சம்பளத்துடன் 270 நாட்கள், அதாவது 9 மாதம் வழங்கப்படும். இந்த 9 மாதவிடுமுறையையும் பிரசவத்திற்கு முன்பும், பின்பும் எந்த நாட்களில் எடுத்துக்கொள்வது என்பதை அந்தப்பெண் அரசு ஊழியரே முடிவுசெய்வார். தற்போது பிரசவ விடுமுறையில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்’ என்று கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக இது அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்தான். உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டவேண்டியதின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் ஊட்டவேண்டிய காலக்கட்டங்களில் அந்தப்பெண் ஊழியருக்கு விடுமுறை அளிப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். தாய்ப்பால் ஊட்டுவதற்கு மட்டுமல்லாமல், குழந்தையை தன் நேரடி கண்காணிப்பில் பராமரிக்கவேண்டிய கட்டாயமும், ஒரு தாய்க்கு இந்த காலக்கட்டங்களில் இருக்கிறது.

ஆனால், பெண் அரசு ஊழியருக்கு 9 மாதம் விடுமுறை அளிக்கும்போது, அவருடைய பணியை நிச்சயமாக கூடுதலாக ஒருவர் கவனிக்க முடியாது. அரசுப்பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற நிலையில், ஒரு பெண் ஊழியர் விடுமுறையில் போனால், அவரது பணியை கவனிக்க ஆள் இல்லாமல் நிர்வாகத்தில் தொய்வு விழுந்துவிடக்கூடாது. ஒரு தற்காலிக ஊழியர் அந்த இடத்தில் நியமிக்கப்படுவதை அரசு உறுதிசெய்யவேண்டும். பல அலுவலகங்களில் அதிலும் சில நகரங்கள் மற்றும் குக்கிராமங்களிலுள்ள அரசு அலுவலகங்கள், சின்னஞ்சிறு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில் எல்லாம் ஒருசிலர்தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட பணிகளில் உள்ள பெண் ஊழியர்களில் பிரசவ விடுமுறைக்கு ஒருவர் சென்றால், பொதுமக்களுக்கு ஆற்றும் பணிகளில் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், தற்காலிக ஊழியர்களை நியமிப்பது குறித்தும் அரசு உடனடியாக பரிசீலித்து தகுந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும். இவ்வாறு தற்காலிக ஊழியர்களை நியமிப்பதன் மூலம், வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித்தவிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறுநிவாரணம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு கொடுப்பதற்கும் ஒரு வழிபிறக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...