News
Loading...

கோவையில், வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற கூட்டத்துக்குள் கார் புகுந்தது: 11 பேர் காயம்

கோவையில், வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற கூட்டத்துக்குள் கார் புகுந்தது: 11 பேர் காயம்

கோவை அருகே தாறுமாறாக சென்ற கார், மற்றொரு கார் மீது மோதிவிட்டு வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் கர்ப்பிணி, அவருடைய 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 11 பேர் காயம் அடைந்தனர்.

தாறுமாறாக வந்த கார்

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது32). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக மனைவி ஸ்ரீஜா(27), யேசானா(4), அஸ்மிகா(9 மாதம்) ஆகியோருடன் காரில் வந்து இருந்தார். காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்வராஜ், வங்கி அருகே பொதுமக்களுடன் வரிசையில் நின்றார். 6 மாத கர்ப்பிணியான ஸ்ரீஜா தன்னுடைய 2 குழந்தை களுடன் காரில் இருந்தார். வங்கி அருகே ஏராளமானவர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது தாறுமாறாக வேகமாக வந்த மற்றொரு கார், செல்வராஜின் குடும்பத்தினர் இருந்த கார் மீது மோதியது. அதன்பிறகும் நிற்காமல் தாறுமாறாக சென்று வங்கி அருகே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு பணம் எடுக்க காத்து நின்ற கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் கார் மோதியதில் பலர் காயம் அடைந்தனர்.

குழந்தைகள் உள்பட 11 பேர் காயம்

கர்ப்பிணி ஸ்ரீஜா, அவருடைய குழந்தைகள் யேசானா, அஸ்மிகா மற்றும் வங்கியில் வரிசையில் காத்து நின்ற மாகாளி(45), நந்தகுமார்(28), ராதாகிருஷ்ணன்(56) ஆகியோரும், மேலும் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து ஏற்படுத்திய காரை, சின்னியம்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவருடைய மகன் சஞ்சய்குமார் (19) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் மாணவர். அவருடன் அவரது நண்பரான சஞ்சய்குமார் (19) என்பவர் இருந்துள்ளார். கார் தாறுமாறாக சென்று மோதியதால் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 11 பேர் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 9 மாத குழந்தைக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

English Summary : Car brake in the crowd who stood in line to take the money

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...