News
Loading...

ரசாயனக் கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு

ரசாயனக் கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு

ரோடு: காவிரியில் ஆலைக்கழிவுகள் கலப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. இதனால் மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகர் பகுதி மக்கள் காவிரி ஆற்றுத்தண்ணீரைத்தான் குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார்கள். காவிரியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்காக வைராபாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு குழாய்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் கிணறுகள் இருந்தாலும் காவிரி தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று ஈரோடு மக்கள் காவிரி தண்ணீரையே குடித்து வந்தனர். ஆனால் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட பின்னர் ஆலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் காவிரியில் நேரடியாக வந்து கலந்தன.

ஒருபுறம் காலிங்கராயன் வாய்க்கால் ரசாயன விஷக்கழிவு வாய்க்காலாக மாறியது. அதேநேரம் ஈரோடு, வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம், பெரியசேமூர், சூரம்பட்டி என்று நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகளும் காவிரியில் கலந்தது. இதனால் காவிரி தண்ணீர் புற்றுநோய் உருவாக்கும் தண்ணீராக மாறியது. எனவே ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு வைராபாளையத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டு, மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்துக்கான அனுமதி பெறும் நிலையிலேயே நிலுவையில் உள்ளது.

ஊராட்சிக்கோட்டை தண்ணீர் வருமா? என்ற கேள்வி எழுந்தாலும், தட்டுப்பாடு இல்லாமல் காவிரி தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் அளித்து வந்தது. ஆனால் காவிரியில் கலக்கும் ஆலைக்கழிவுநீரால் தற்போது ஆற்றுநீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பச்சை நிறமாக காணப்படும் தண்ணீரைத்தான் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடங்களில் வீட்டு உபயோகத்திற்காக எடுத்துச்செல்கிறார்கள். கடந்த வாரம் காவிரியில் இருந்து நீரேற்றம் செய்து வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகும் சாக்கடையாக இருந்தது. வீடுகளில் குழாய்களை திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது.

இது மாநகர பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நீரேற்று நிலையம் சென்று பார்வையிட்டபோது காவிரியில் தண்ணீர் உறிஞ்சும் பகுதி முழுவதும் தண்ணீர் சாய மற்றும் தோல் ஆலைக்கழிவுகள் நிரம்பி இருந்தது தெரியவந்தது.வெண்டிபாளையம் தடுப்பணையில் மின்சார உற்பத்திக்காக நீர் தேக்கியதால் சாக்கடை பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கியது தெரியவந்தது. உடனடியாக நீரேற்றம் மற்றும் தண்ணீர் வினியோகத்தை நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகள் வெண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து தண்ணீரை திறந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

சில நிறுவனங்களில் இருந்து கழிவுகளை காவிரி ஆற்றில் வெளியேற்ற மண்ணுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும்போது கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் குறைந்தாலும் குழாய் பதிக்கப்பட்டு இருப்பது வெளியே தெரியாத வகையில் போட்டு உள்ளனர். தற்போது வெண்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் கழிவுநீர் சாக்கடையாக மாறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆலைக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருகிறது. 

எனவேதான் மாநகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் துர்நாற்றத்துடன் உள்ளது. இதை குடித்தால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆலைக்கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆலை உரிமையாளர்களும், அனைத்து மக்களின் நலன் கருதி மனச்சாட்சியுடன் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...