News
Loading...

முறைகேடான பணத்தை டெபாசிட் செய்பவர்கள் தப்பவே முடியாது: அருண்ஜெட்லி

முறைகேடான பணத்தை டெபாசிட் செய்பவர்கள் தப்பவே முடியாது: அருண்ஜெட்லி

புதுடெல்லி: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்காக முறைகேடாக சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்பவர்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்ப முடியாது என்று நிதிமந்திரி அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார்.

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தூர்தர்சன் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: இது பிரதமர் மோடி எடுத்த மிகவும் துணிச்சலான முடிவு. இதனால் கருப்பு பணம் வைத்திருப்போர் கடுமையாக அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அரசியல் முறை மற்றும் தேர்தல் நடைமுறைகளை சுத்தம் செய்யவும் இது உதவும்.இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக எடுக்கப்பட்டது. தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் அது நீண்டகாலத்துக்கு பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் அதை மாற்றுவதற்காக எடுக்கப்பட்டு உள்ளது.

இது, இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி நாட்டை மேலும் வளர்ச்சி காணச் செய்யும். இன்னும் சில மாதங்களில் நிலைமைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டுகளையோ அல்லது அதற்கு குறைவான தொகை கொண்ட மதிப்புள்ள நோட்டுகளையோ வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம், ஒன்றைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது, யாருக்கும் சலுகை அளிக்கும் திட்டம் அல்ல.

வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விதிப்பதில் எந்த விலக்கும் அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் செலுத்திய பணத்தின் மீது இந்த நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடாக சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்தவர்கள் தப்ப முடியாது. அவர்களுக்கு இந்த நிதி ஆதாரம் எப்படி வந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.இப்படி செலுத்தப்படும் பணம் முன்பு வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டு மீண்டும் செலுத்தப்பட்டிருந்தால் அது சட்டப்பூர்வமானது ஆகும். அதேபோல் முறையாக ஈட்டிய பணத்தையும் அல்லது சேமித்த பணத்தை டெபாசிட் செய்தாலும் அதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டால் எந்த நடவடிக்கையும் இருக்காது.

அதே நேரம் இப்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம், சட்டவிரோதமான முறையில் சேர்ந்தது, அது குற்றப் பின்னணி கொண்ட பணம், ஊழல் மூலம் சேர்க்கப்பட்டது என்பது தெரிய வந்தால் அது சிக்கல் நிறைந்ததாக அமையும்.நேர்மையான முறையில் பணத்தை சேமித்த குடும்பத் தலைவிகள் மற்றும் விவசாயிகள் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வது குறித்து எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை.

ஏனென்றால் இவர்கள் ரூ.25 ஆயிரம், ரூ.30 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் என்ற அளவில்தான் பணத்தை டெபாசிட் செய்வார்கள். அவர்களுடைய குடும்பச் செலவு போக இந்த அளவிற்குத்தான் அவர்களிடம் சேமிப்பு இருக்கும். எனவே குடும்பத் தலைவிகளும், விவசாயிகளும் எந்த கவலையும் இன்றி வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் பணத்தை செலுத்தலாம்.பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை அகற்றிவிட்டு புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம். பொதுமக்கள் இதற்காக பீதி அடைய தேவை இல்லை. ஆனால் அடுத்த 2, 3 வாரங்களில் அதிக அளவிலான புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு மக்களின் சிரமங்கள் குறைந்து இயல்பான நிலை திரும்பிவிடும்.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் நோக்கம் பண பரிவர்த்தனை முறை அனைத்தும் மின்னணு முறையில் நடைபெறவேண்டும் என்பதற்காகத்தான். இப்போது மக்கள் தங்களுடைய வருமானம் குறித்து தெரிவித்து, அதற்கான வரியை செலுத்தலாம். இதனால், வரி செலுத்துவதற்கு இணக்கமான நாடாக இந்தியா மேலும் திகழும். தவிர நேரடி பணம் பரிமாற்றம் இல்லாத பொருளாதார நாடாகவும் முன்னேறும். மக்கள் பணத்துக்கு பதிலாக மக்கள் காசோலைகளை பயன்படுத்தலாம்.

கருப்பு பணம் வைத்திருப்போர், குற்றங்கள் மூலம் பணம் சம்பாதித்தவர்கள், ஊழல் செய்து பணம் சேர்த்தோர் இந்த புதிய திட்டத்தால் அதிகம் பாதிப்பு அடைவார்கள். நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.கருப்பு பணம் என்பது அடிப்படை உரிமை கொண்டது அல்ல. அனைவரும் கருப்பு பணம் வைத்திருக்க உரிமைகள் கொண்டவர்கள் என்று உறுதி அளிக்கவும் முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவும் இயலாது. நேர்மையாக இருப்பவர்கள் இந்த முடிவு குறித்து மிகவும் மகிழ்ச்சி கொண்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

English Summary : Deposits of old notes in banks not to enjoy tax immunity

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...