News
Loading...

வேலைவாய்ப்புக்கு திறன் பயிற்சி

வேலைவாய்ப்புக்கு திறன் பயிற்சி

எந்தவொரு நாடு என்றாலும், மாநிலம் என்றாலும் சரி, அது தொழில் வளர்ச்சியோ, பொருளாதார வளர்ச்சியோ, கல்வி வளர்ச்சியோ போன்ற எந்த முன்னேற்றப்பாதையில் பீடுநடைபோடவேண்டுமென்றாலும், அங்கே வேலைவாய்ப்புகள் பெருமளவில் இருந்தாக வேண்டும். ஆனால், இந்த காலக்கட்டங்களில் படித்து முடித்தவர்கள் மற்றும் படிக்காத இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. அந்தவகையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 ஆகும். இவர்கள் அனைவருக்கும் நிச்சயமாக அரசோ, தனியார் நிறுவனங்களோ வேலைவாய்ப்புக்களை அளித்துவிடமுடியாது. அவர்களுக்கு சுயவேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை அளித்தால்தான், அவர்கள் எதிர்காலத்துக்கு ஒரு வழியைக் காட்ட முடியும். அந்த வகையில், சுயவேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென்றால், நிச்சயமாக ஏதாவது ஒரு தொழிலில் திறன்பயிற்சியை அளித்துத்தான் தீரவேண்டும். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘அனைத்து பஞ்சாயத்து நிலையங்களிலும் ‘அம்மா’ இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மையம் அமைக்கப்பட்டு, குறுகியகால பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு சுயதொழில் தொடங்க உதவிகள் வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதிக்கேற்ப, முதல்கட்டமாக இந்த ஆண்டு அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 35 பஞ்சாயத்து யூனியன்களில் இருசக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சிமையம் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புப்படி, தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பயிற்சி நிலையங்கள் ஒவ்வொன்றிலும் 30 பேர்களுக்கு 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு மாதஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், சுயதொழில்புரிய ஏதுவாகவும், அதேபோல, அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 60 பஞ்சாயத்து யூனியன்களில் ஒரு ஒன்றியத்தில் 60 பேர் என்ற அடிப்படையில், 3,600 பயிற்சியாளர்களுக்கு 3 மாதபயிற்சி வழங்கவும், அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20 ஆயிரம் இளைஞர்களுக்கு சேவைத்துறை பணியாளர்களான, விற்பனையாளர், கண்காணிப்பாளர், பாதுகாப்பு, சேவை புரிபவர், செவிலியர், சுகாதாரத்துறை உதவியாளர், ஹவுஸ் கீப்பிங் போன்ற பணியாளர்களுக்கான நலன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது. உடனடியாக இத்தகைய பயிற்சிகள் அளிக்கும் பணிகளை அனைத்து இடங்களிலும் தொடங்க வேண்டும். அதுபோல, இதன் எல்லையை, எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க அரசு உதவினால் ஏராளமானோர் சுயவேலைவாய்ப்பு பெறவும், தனியார் நிறுவனங்களில் சேருவதற்கும் வசதியாக இருக்கும். மேலும், இத்தகைய திறன்பயிற்சிகளை மிகவும் உயர்தரத்தில் அமைத்து, அந்தபயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும்போது, அந்த சான்றிதழ்களுக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தால், இந்த பயிற்சியை பெற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இத்தகைய அங்கீகாரம் பெற்ற பயிற்சி சான்றிதழ்கள் அவர்களுக்கு, வங்கிகள் சுயதொழில் தொடங்குவதற்கு கடன் கொடுக்கவும், அரசு நிதிநிறுவனங்கள் கடன் உதவிகளை அளிக்கவும், தேசிய  அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் அளிக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். ‘‘திறன் இந்தியாவை’’ நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற பயிற்சிகள் அந்த புதிய இந்தியாவில் சிறந்த இடத்தை நமது இளைஞர்களுக்கு தேடித்தரும் என்பதில் அய்யமில்லை.

English Summary : Employment skills training

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.