News
Loading...

5, 8–வது வகுப்புகளில் தேர்வு

5, 8–வது வகுப்புகளில் தேர்வு

நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளும், கல்வியறிவு பெறவேண்டும். ஏழ்மை ஒருபோதும் அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்ற சீரியநோக்கில் கொண்டு வரப்பட்டதுதான், ‘‘குழந்தைகள் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்’’. இந்த சட்டத்தின்கீழ் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி ஒரு அடிப்படை உரிமையாகிவிடுகிறது. இந்தச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு, பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை மிக அதிகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு கல்வி தொடர்பான ஆய்வில், புகழ்பெற்ற ‘பிரதம்’ தன்னார்வ ஆய்வு நிறுவனம் தனது 10–வது கல்வி அறிக்கையை வெளியிட்டது. இந்தச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு, பள்ளிக்கூடங்களில் 96 சதவீத குழந்தைகள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சித்தரும் தகவலை தெரிவித்துள்ளது. ஆனால், கல்வித்தரம் சற்று குறைந்திருப்பது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘‘குழந்தைகள் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில்’’ 16–வது பிரிவில் பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படும் ஒரு குழந்தையை, முதல் வகுப்பிலிருந்து 8–வது வகுப்புவரை பெயிலாக்கவோ, பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கவோ கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால், ஆய்வறிக்கையில் 8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25 சதவீத மாணவர்களுக்கு 2–வது வகுப்பு பாடப்புத்தகங்களைக்கூட சரியாக படிக்கமுடியவில்லை. சாதாரண கணக்குகளை போடுவதற்கான திறமைகூட குறைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எளியவார்த்தைகளை வாசிக்கும் திறன்கூட குறைந்திருக்கிறது என்பதுபோன்ற பல குறைபாடுகளைக் கூறியிருக்கிறது. 

இந்தநிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு 21 மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்களும், மற்ற மாநிலங்களிலிருந்து உயர்அதிகாரிகளும் கலந்துகொண்ட மத்திய கல்வி ஆலோசனை வாரியக்கூட்டத்தில் ஒருமுடிவு எடுக்கப்பட்டது. அதாவது, 5–வது, 8–வது வகுப்பிலும் இறுதித்தேர்வு நடத்தி, அதனடிப்படையில் மாணவர்களை பெயிலாக்கவோ, பாசாக்கவோ செய்யலாம். ஆனால், இதற்கான முடிவை அந்தந்த மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று அந்தமுடிவில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த பரிந்துரையை ஏற்று, இலவச கட்டாய கல்விச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. அதாவது, இந்தமாற்றத்தை ஏற்றுக்கொண்டு, தேர்வு வைக்கிறோம் என்று நடைமுறைக்கு கொண்டுவருவதும், இந்தமுறை வேண்டாம், எங்கள் மாநிலத்தில் நாங்கள் குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் கூறியபடி, 8–வது வகுப்புவரையில் எந்த மாணவனையும் பெயிலாக்காமல், அடுத்தவகுப்புக்கு பாசாக்கும் நடைமுறையையே எடுப்போம் என்று முடிவெடுத்து, தொடர்ந்து அதையே செயல்படுத்துவதும் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விடுவதுதான் இந்த மாற்றமாகும். அந்தவகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது.  

பாராளுமன்றம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, சட்டத்தை திருத்தி அமல்படுத்துவது பற்றி பாராளுமன்ற கூட்டத்தில்தான் தெரியும். ஆனால், இந்த மாற்றத்தினாலேயே கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு மாணவனுடைய கற்றலில் குறைபாடு என்பதற்கு தேர்வு இல்லை என்பது மட்டும் காரணமாக இருந்துவிடமுடியாது. கற்பித்தல் முறையில் குறைபாடு இருந்திருக்கலாம், பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல வசதிக்குறைபாடுகள், வீட்டு சூழ்நிலை, பள்ளிக்கூட சூழ்நிலை என்று பல குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். எனவே, ஒரு குழந்தைக்கு கற்றல்குறைபாடு இருந்தால், அது எதனால் என்று கண்டுபிடித்து அதை களைய வேண்டுமே தவிர, பெயிலாக்கிவிடுவது அதற்கு ஒரு நிவாரணமாகாது. 14 வயதுவரையில் தேர்வுபயம் என்பது மாணவர்களுக்கு இருக்கக் கூடாது. 8–வது வகுப்புவரை பாஸ் அல்லது பெயில் என்றவகையில் இருந்தால், கிராமப்புறங்களில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான். ஒரு வகுப்பில் பெண்குழந்தைகள் பெயிலாகி விட்டால், படித்தது போதும் வீட்டுவேலையைப்பார் என்று கிராமங்களில் சொல்லி விடுவார்கள். எனவே, தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்த முறையை ஏற்கக் கூடாது என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.