News
Loading...

மண்டியிடாத வீரன்... மக்களை மறக்காத தலைவன்!

மண்டியிடாத வீரன்... மக்களை மறக்காத தலைவன்!

கியூபா மக்களையும் இயற்கையையும் நேசித்த உண்மையான கம்யூனிஸ்ட்டான ஃபிடல் காஸ்ட்ரோ 90-வது வயதில் காலமான செய்தி, சமத்துவம் - சுதந்திரத்தை விரும்பும் உலக மக்களின் இதயத்தில் இடியாக இறங்கியது.

பொருளாதார சமத்துவத்தையும் ஏழைகள் இல்லா கியூபாவையும் உருவாக்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றிட அயராது உழைத்த காஸ்ட்ரோவின் மூச்சு நின்ற செய்தி, அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்ல... உலக நாடுகள் பலவற்றிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.     

1945-ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது உயர்கல்வியை முடித்திருந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசத்தின்மேல் அளவற்ற காதல் ஏற்பட்டது. ஹவானா பல்கலைக்கழகம்தான் காஸ்ட்ரோவின் இதயத்தையும் மனதையும் திறந்து அவரை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆக்கியது. அதே பல்கலைக்கழகத்தில் ஒருசில மாணவர்கள் ஒரு வேளை உணவுக்குக் கஷ்டப்படும்போது, வேறு சிலரோ சுகபோகத்தில் திளைத்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு குறித்து அப்போதைய அதிபரான பாடிஸ்டாவிடம் அவர் கூறிய புகார், குப்பைக்குச் சென்றது. அப்போதுதான் அமெரிக்காவின் கைக்கூலி அதிபர் பாடிஸ்டா என்பதை அறிந்து, ‘உடனடியாக அந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு உண்மையான மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்று திட்டம் தீட்டினார்.

கியூபாவின் முக்கிய ராணுவ முகாமான மொன்காடாத்தைத் தாக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்து, 1953 ஜுலை 26-ல் இரவில் குழுக்களாகப் பிரிந்து  தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. ஆனால், அந்த முயற்சியின் போது எதிரிகளிடம் மாட்டிக்கொண்டார். கியூபா நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க அமெரிக்காவுக்கு வழிவகுத்துக் கொடுக்கும் பாடிஸ்டாவின் ஆட்சியை விரட்டி அடிக்கவே தாம் திட்டம் தீட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் வாயடைத்துப் போனார்கள். சிறையில் இருந்து 1955 மே 15-ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

சிறைக்குள்ளே கியூபாவின் சுதந்திரம் குறித்து திட்டமிட்ட காஸ்ட்ரோ, சிறையில் இருந்து வெளியே வந்ததும் மெக்சிகோ சென்று சே குவேராவை சந்தித்தார். பின்னர் இருவரும் இணைந்து கியூபா விடுதலைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகப் போராடினார்கள். சே குவேரா உதவியுடன் மக்களையும் விடுதலைப்போரில் பங்கேற்க வழி செய்தார் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோ ஆட்சியைக் கைப்பற்றியபோது, கியூபா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. காஸ்ட்ரோ பதவியேற்றது முதல், தனக்கு நெருக்கமாக இருக்கும், கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்ட பொருளாதாரப் பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி, பொருளாதாரம் குறித்து முடிவு செய்தார். தன்னைக் கிண்டல் செய்த அமெரிக்காவைக் கண்டு அஞ்சாமல், கியூபாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை அரசே கைப்பற்ற வழிவகுத்தார். பல்வேறு துறைகளிலும், கல்வியறிவிலும் கியூபா முன்னேற்றத்தைக் கண்டது.

ஃபிடலை ஒழித்தால் கியூபாவை அழித்துவிடலாம் என்று கணக்கு போட்ட அமெரிக்கா, காஸ்ட்ரோவை கொலை செய்ய மேற்கொண்ட நூற்றுக்கணக்கான முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஃபிடலின் காதலி மூலம் கொலை செய்யத் திட்டமிட்டதும் அம்பலமானது. அவரது காதலி அதனை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த ஆண்டு கியூபாவுக்கு மேற்கொண்ட பயணம் உலக வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

“எனது கியூபா பயணம் இரு நாட்டுக்கும் இடையே நிலவும் பனிப்போரைத் தடுத்து நிறுத்தும்”  என்று ஒபாமா  கூறினார். அதற்கு  காஸ்ட்ரோ, ‘கியூபா தன்னாட்சி பெற்ற ஒரு சுதந்திர நாடு. இங்கு எந்த ஒரு நாட்டின் ஏகாதிபத்தியத் தயவும் தேவைப்படாது’ என்று நறுக்கென்று ஒபாமாவுக்கு கடிதம் எழுதினார். “உங்கள் எண்ணங்கள் மற்றும் போக்கு நல்லவையே. உங்களுடைய தாழ்மையான பக்குவமும் அறிவாளித்தனமும் போற்றப்பட வேண்டியவையே. உதவிசெய்யும் உங்களுடைய எண்ணத்துக்கு மனமார்ந்த நன்றி! ஆனால், உங்கள் உதவி தேவையில்லை. எங்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்களைத் தயாரித்துக் கொள்ளப் போதுமான மக்களைக் கொண்டுள்ளோம்” என்று ஃபிடல் எழுதிய கடைசிக் கடிதம் வெள்ளை மாளிகையை மேலும் உஷ்ணமாக்கியது.

2006-ம் ஆண்டு ஜூலையில் செரிமான பிரச்னைக்காக   அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஃபிடல், 2008-ம் ஆண்டு பிப்ரவரி 19-ல் பதவி விலகுவதாக அறிவித்தார்.

உடல்நலக்குறைவால், நவம்பர் 26-ம் தேதி மரணம் அடைந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு டிசம்பர் 4-ம் தேதி கியூபாவில் நடைபெறவுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு, கியூபாவை தன்னிறைவு எட்ட வைத்த, ஒரு மாபெரும் வீரனின் பெருமையைப் பறைசாற்றும் தினமாக அமையும். 

மறுபிறவி என்ற ஒன்று இருந்தால் ஃபிடல் இந்தியாவில் பிறக்கட்டும்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...