News
Loading...

ஹெல்மெட் அணியாதவர்களை நடு ரோட்டில் மறிக்க கூடாது: உயர் அதிகாரிகள் உத்தரவு

ஹெல்மெட் அணியாதவர்களை நடு ரோட்டில் மறிக்க கூடாது: உயர் அதிகாரிகள் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாலேயே பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு சென்னை ஐகோர்ட்டு ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவை போலீசார் முழுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதியில் இருந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கோர்ட்டு உத்தரவு என்பதாலும், விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு போடப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற சோதனையின் போது போக்குவரத்து போலீசார் நடுரோட்டில் நின்றபடியே மோட்டார் சைக்கிளை மறிப்பதால் விபத்துகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு கே.கே.நகரில், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் திடீரென மறித்ததால், நிலை குலைந்த செல்வம் (19) என்ற வாலிபர் சாலை தடுப்பில் மோதி பலியானார்.

இதே போன்ற ஒரு சம்பவம் தான் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்றும் நடந்து விட்டதாக பொது மக்கள் புகார் கூறுகிறார்கள். சூளைபகுதியை சேர்ந்த மோகித் சர்மா, பவன்குப்தா ஆகிய 2 கல்லூரி மாணவர்களும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சாம்வெஸ்லி தாஸ் என்ற போக்குவரத்து போலீஸ் ஏட்டு அவர்களை தடுத்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஏட்டு சாம்வெஸ்லி தாஸ் மீது மோதியது. இதில் அவரது வலது கால் முறிந்தது.

மாணவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கே.கே.நகர் சம்பவத்தின் போதே, வேகமாக வரும் மோட்டார் சைக்கிள்களை திடீரென மறிக்கக் கூடாது என போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று மெரினாவில் நடந்த விபத்தை தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு மீண்டும் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுபோன்ற சம்பவங்களுக்கு போக்குவரத்து போலீசாரை மட்டும் குறை சொல்லக் கூடாது. வாகன ஓட்டிகளும் ஒரு விதத்தில் இதற்கு காரணம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் போக்குவரத்து போலீசாரை பார்த்ததும் பதட்டம் அடைந்து வேகமாக செல்கிறார்கள். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன. எனவே இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பை தடுக்க கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் போது தப்பிச் செல்ல நினைக்கக்கூடாது. சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் தினமும் ஹெல்மெட் வேட்டை நடத்தப்படுகிறது. சராசரியாக 2 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகின்றன.

இதுபோன்று ஹெல்மெட் வழக்குகள் போடும்போது போலீசார் நேரடியாக அபராதம் வசூலிப்பதில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் கோர்ட்டு படியேறியே அபராதம் செலுத்த வேண்டும்.

கோர்ட்டுகளிலும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை வசூலிக்க நடமாடும் நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. நடமாடும் நீதிமன்றங்கள் 2 மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாட்கணக்கில் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த காத்துக் கிடக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனை தவிர்க்க நடமாடும் கோர்ட்டுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary : Higher officers order for helmet should not block the team in the middle of the road

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...