News
Loading...

வீட்டிலேயே காய்கறி விளைச்சல்

வீட்டிலேயே காய்கறி விளைச்சல்

மென்பொருள் நிறுவனத்தின் பணியில் இருந்து விலகி, இயற்கை விவசாயம் நோக்கி திரும்புவதே  இன்றைய இளைஞர்களின் டிரெண்ட். ஆனால், மண்ணில்லா விவசாயம், ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) என்னும் புது கான்செப்டை நம்மூருக்கு அறிமுகம் செய்துள்ளார் ஸ்ரீராம் கோபால்.

“என் படிப்பை முடித்துவிட்டு, ஒரு ஐ.டி நிறுவனம் துவங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வந்தேன். அந்த கம்பெனி நல்ல நிலைமைக்கு வந்தததும் அதில் இருந்த சவால்கள் குறைந்துவிட்டன. இளமையிலேயே வாழ்க்கையில் திருப்தி அடைவது என்பது எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் ஒரு ஆய்வு முடிவைப் பற்றி தெரிந்து கொண்டேன். இந்தியர்கள் பயன்படுத்தும் காய்கறிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் இருக்கின்றன. புதினா மற்றும் கொத்துமல்லி இலைகள் ஆகிய இரண்டில்தான் அதிகமான வேதிமருந்துகள் கலந்திருப்பதாக தெரிந்துகொண்டேன். இதனை மாற்ற என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

வீட்டிலேயே காய்கறி விளைச்சல்

வெளிநாடுகளில் இந்த ஹைட்ரோ போனிக்ஸ் முறை மிகவும் வெற்றிகரமாக, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, இதனை நம் நாட்டுக்கேற்ப எப்படி செயல்படுத்துவது என சிந்தித்து, 2014-ம் ஆண்டில், ஒரு நிறுவனமாக களத்தில் இறங்கினோம். நிறுவனம் துவங்கியதும், உடனே ‘Leaf Station One’ என்னும் திட்டத்தைத் துவங்கி, புதினா போன்ற கீரை வகைகளை எப்படி இதில் வளர்ப்பது என ஆராய்ச்சியில் இறங்கினோம். இப்படித்தான் எங்கள் பயணம் துவங்கியது.

‘ஹைட்ரோபோனிக்ஸ்’ முறை என்பது, ஒரு ஆய்வகத்தில் வைத்து, நமக்கான செடியை நாமே வளர்க்கும் விவசாய முறை. ஒரு செடியை புழு, பூச்சி அண்டாமல், சுத்தமான செடியாக  நமக்கு ஏற்றவாறு வளர்ப்பதுதான் இந்த ‘ஹைட்ரோபோனிக்ஸ்.’ இது முழுக்க முழுக்க அறிவியல்தான் என்பதால், எந்தவித தீங்குகளும், வர்த்தக ரீதியாக எந்தவித நஷ்டங்களும் வராது.

வெளிநாடுகளில் இருக்கும் இதனை  நம் நாட்டுக்கேற்ப எப்படி செயல்படுத்துவது என்பதுதான் எங்கள் முன் உள்ள சவால். இதற்காக ஒரு நவீன பண்ணை அமைத்து, சோதனைகள் செய்து வருகிறோம். நம் நகரங்களில் விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணமே, இடப்பிரச்னை, தண்ணீர் பிரச்னை, பணியாட்கள் பிரச்னை ஆகியவைதான். இந்த மூன்று சிக்கல்களுமே இந்த முறையில் இல்லை. சாதாரண விவசாயத்தில், ஒரு ஏக்கருக்கு செலவிடும் நீரை என்னால் 100 ஏக்கருக்கு இதில் செலவிட முடியும். ஏனெனில் இதில் பயன்படுத்துவது அனைத்துமே 80% மறுசுழற்சி செய்யப்பட்ட நீர்.

வீட்டிலேயே காய்கறி விளைச்சல்

தினமும் செடிகளுக்கு, தண்ணீர் விடுவது முதல், சத்துக்கள் இடுவது வரை அனைத்துமே தானியங்கி முறையில் கணினி மூலமே நடக்கும். எனவே, இதற்கு கவனிக்க ஆட்களே தேவையில்லை. மேற்பார்வை செய்தால் மட்டுமே போதும். அதற்கடுத்து இடவசதி. நம்முடைய மொட்டை மாடி, அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் இந்த செடிகளை வளர்க்க முடியும்’’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...