News
Loading...

ஊழலை ஒழிக்க முயற்சிக்கும் நேரத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பதா? -மோடி


‘‘ஊழலை ஒழிக்க முயற்சிக்கும் நேரத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பதா?’’ என கேட்டு எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தாக்கினார்.

முழு அடைப்புக்கு அழைப்பு
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததின் தாக்கம், 20 நாட்களாகியும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பழைய நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றுவதற்காகவும், பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளையும், ஏ.டி.எம். மையங்களையும் நோக்கி மக்கள் படையெடுத்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்க்கட்சிகள் மீது சாடல்
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரபிரதேச மாநிலம், குஷிநகரில் நடந்த பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். எதிர்க்கட்சிகளை அவர் பெயர் குறிப்பிடாமல் சாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நான் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் வேறு சிலரோ (எதிர்க்கட்சிகள்) நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

எது வேண்டும்?
நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமா? ஊழலின் தடத்தை தடுத்து நிறுத்த வேண்டுமா?

உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற முடிவு, கடுமையான முடிவுதான். ஆனால் எதிர்காலம் ஒளிமயமாகும்.

பணப்பை வைத்திருந்த காலம் எல்லாம் போய் விட்டது. இனி மின்னணுப்பைக்கு மாறுங்கள். நீங்கள் உங்கள் செல்போனை வங்கிக்கிளையாக பயன்படுத்துங்கள். எப்படி செல்போனில் படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறீர்களோ, அதே போன்று இதைச் செய்யுங்கள்.

‘மக்கள் அல்லல்படுவதை அறிவேன்’
செல்போனை எப்படி பயன்படுத்துவது, எப்படி சார்ஜ் ஏற்றுவது என்பதை கற்றுக்கொள்வதற்காக நீங்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு சென்றீர்களா? நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். தொழில் நுட்பம் எளிதாகி விட்டது. நீங்கள் ஒரு வங்கிக்கணக்கு வைத்திருந்தால், நீங்கள் என்னவெல்லாம் வாங்க விரும்புகிறீர்களா அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

மக்கள் அல்லல்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன்.

மத்திய அரசு முழுமையாக தன்னை ஏழை எளியோருக்கும், விவசாயிகளுக்கும், கிராமவாசிகளுக்கும், தலித் மக்களுக்கும் அர்ப்பணம் செய்து கொண்டுள்ளது.

‘துரோகம் செய்ய மாட்டேன்’
2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது, இங்கே உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது கூட்டம் பெரிய அளவில் இல்லை.

இன்றைய கூட்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், இதில் பாதிக்கூட்டம் தான் அப்போது வந்தது. இப்போது எனக்கு ஆசி வழங்க பெண்கள் உள்பட திரளானோர் வந்திருக்கிறார்கள். நீங்கள் என்மீது கொண்ட நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன். உங்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...