News
Loading...

நாட்டு மருந்துகளுக்கும் தரப் பரிசோதனை

நாட்டு மருந்துகளுக்கும் தரப் பரிசோதனை

‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’’ என்பது காலம்காலமாக கூறப்பட்டு வரும் ஒரு பழமொழியாகும். ‘‘நூறாண்டு காலம் வாழ்க!’’ என்று வாழ்த்துபவர்கள் கூட, அடுத்தவரியில் ‘‘நோய்நொடி இல்லாமல் வளர்க!’’ என்று தான் சொல்வார்கள். அந்த வகையில்தான், நோயை குணமாக்குபவர் படித்து பட்டம் பெற்றவர் என்றாலும், ஊரிலேயே பரம்பரை பரம்பரையாக மருத்துவம் செய்யும் நாட்டு மருத்துவர்கள் என்றாலும் சரி, மக்கள் அவர்கள் மீது  அளப்பரிய நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவர் சொல்வதை செய்தால், நிச்சயமாக நமது நோய் குணமாகும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கையில்தான், தென்காசி அருகே நீரிழிவு நோய்க்கு ஒரு நாட்டு வைத்தியர் கொடுத்த கசாயத்தை சாப்பிட்ட இருவர் துடிதுடித்து பரிதாபமாக செத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த விஷ கசாயத்தை கொடுத்த நாட்டு வைத்தியரும், எனக்கும் நீரிழிவு நோய் இருக்கிறது, நானும் இந்த கசாயத்தைத்தான் குடித்து வருகிறேன் என்று சொல்லி, அவர்கள் முன்னிலையிலேயே அந்த கசாயத்தை குடித்து அவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த நாட்டு வைத்தியர் மருத்துவம் தொடர்பாக எந்த படிப்பையும் படித்ததில்லை. ஆரம்பக்கல்வி மட்டுமே படித்துள்ள இவர், நான் மலைப்பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சில மூலிகைச் செடிகளை பறித்து வந்து கசாயம் தயாரிக்கிறேன். இதை சாப்பிட்டால் நீரிழிவு நோய் போய்விடும் என்று சொல்லி கசாயம் கொடுத்துவந்தார்.

இவர் யார்?, முறையாக மருத்துவம் படித்திருக்கிறாரா?, எந்த மூலிகைகளை பறித்து வருகிறார்?, எப்படி கசாயம் தயாரிக்கிறார்?, இதில் என்ன பலன் இருக்கிறது? என்று எந்த அதிகாரியும் அவரை சோதனைபோட்டதும் இல்லை. அவர் கொடுக்கும் மருந்துகளை யாரும் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தவுமில்லை. மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், முறையாக மருத்துவக் கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டமோ, அதற்கு மேற்படிப்புகளோ படித்து மருத்துவ தொழில் செய்யும் அலோபதி டாக்டர்கள் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் முறையான கல்வி இருக்கிறது. இவ்வாறு படித்து பட்டம் பெறுபவர்களைத்தவிர, சிலர் பரம்பரை பரம்பரையாக இந்தத்தொழிலை செய்கிறோம் என்றும், மற்றும் சிலர் எங்களுக்கு மூலிகை மருத்துவம் நன்றாகத்தெரியும் என்றும், கிராமப்புறங்களில் மருத்துவம் செய்கிறார்கள். இவ்வளவு நாகரிகம் வளர்ந்தபிறகும், இன்னும் கிராமப்புறங்களிலுள்ள வைத்தியர்களை நம்பித்தான் பலர் தங்களது நோய்களுக்கான சிகிச்சைக்கு செல்கிறார்கள். இதில், சிலர் உண்மையிலேயே இத்தகைய மருத்துவத்தில் வல்லவர்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இப்படி ஒருசிலர் கொடுக்கும் வைத்தியம் பலனளிக்கிறது என்பதற்காக, எல்லோரையும் இந்தகாலகட்டத்தில் நம்புவதில் அர்த்தமில்லை. மத்திய அரசாங்கத்தில் ‘ஆயுஷ்’ என்ற பெயரில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி ஆகிய இந்திய பாரம்பரிய மருத்துவங்களை உள்ளடக்கி தனித்துறையே செயல்படுகிறது. பா.ஜ.க.அரசாங்கம் இதற்கான தனி அமைச்சகத்தையே உருவாக்கியிருக்கிறது. ஆக, ‘ஆயுஷ்’ என்று சொல்லப்படும் இந்த மத்திய அரசாங்கத்தின் மருத்துவத் துறையும், தமிழ்நாட்டிலுள்ள நல்வாழ்வுத்துறையும் உடனடியாக ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வாறு நாட்டு வைத்தியம் செய்யும் மருத்துவர்களின் பட்டியலை எடுத்து, அவர்கள் உண்மையிலேயே திறமையுள்ளவர்களா?, அவர்களின் மருத்துவமுறைகள் சரிதானா? என்று அவர்களை பதிவு செய்தும், அவர்கள் வழங்கும் மருந்துகளுக்கெல்லாம் தரப்பரிசோதனை ஏற்படுத்தி, சட்டப்பூர்வமாக அவர்கள் சிகிச்சையை தொடரலாமா?, தொடரக்கூடாதா? என்பது குறித்தும், மக்கள் உயிரிழப்புகளை தடுக்கவும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.

English Summary : Quality testing of drugs

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.