News
Loading...

சேவை வரி வேண்டாமே!

சேவை வரி வேண்டாமே!

கடந்த 13 ஆண்டுகளாக தடைதாண்டி ஓட்டம்போல, ஒவ்வொரு தடையாக தாண்டி வந்த சரக்கு சேவைவரி, இறுதியில் 14–வது ஆண்டில் அதாவது, 2017–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமலுக்கு வரப்போகிறது. நாட்டில் அனைத்துப்பொருட்களுக்கும், சேவைகளுக்கும், மத்திய–மாநில அரசுகளால் 16 விதமான வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இந்த 16 விதமான வரிகளுக்குப்பதிலாக, ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஒரே மாதிரியான மறைமுகமான வரியை வசூலிப்பது குறித்து நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் ‘சரக்கு மற்றும் சேவைவரி’ சட்டமாகும். இந்த வரியை எவ்வளவு விதிப்பது, எந்தவகையில் விதிப்பது என்பதற்காகத்தான், மத்திய நிதி மந்திரி தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர்களைக் கொண்ட ‘‘சரக்கு சேவை கவுன்சில்’’ நியமிக்கப்பட்டது. 

தமிழகத்திலிருந்து இந்த கவுன்சிலின் உறுப்பினராக மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். 4 முறைகள் நடந்த இந்த கவுன்சில் கூட்டங்களில் எந்தெந்த பொருளுக்கு, எவ்வளவு வரிகளை விதிப்பதென்று விவாதிக்கப்பட்டது. இறுதியில், இப்போது 4 விதமான வரிகளை விதிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்கள் பயன்படுத்தும் அரிசி, கோதுமை, உணவு தானியம் போன்ற 150 அத்தியாவசிய பண்டங்களுக்கு வரி கிடையாது என்பது மிகவும் மகிழ்ச்சித் தரத் தக்க செய்தியாகும். அதன்பிறகு, பொதுவாக பயன்படுத்தும் பலபொருட்களுக்கு 5 சதவீதவரி விதிக்கப்பட இருக்கிறது. இதில், 92 வகையான பொருட்கள் ஏற்கனவே 3 சதவீத வரிக்கும் குறைவான வரியே உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்தபொருட்களும் வரியில்லா பட்டியலில் வருமா?, அல்லது 5 சதவீத வரிக்குள் உட்படுத்தப்படுமா? என்று தெரியவில்லை. இது போல, அடுத்ததாக 12 சதவீதவரி விதிக்கப்படுகிறது. இதில், பலபொருட்களின் விலைகுறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடுத்து 18 சதவீத வரிவிதிப்பு, அதற்கடுத்து 28 சதவீத வரிவிதிப்பு. இந்த 28 சதவீதவரி விதிப்பில், கார், புகையிலைப்பொருட்கள், பான்மசாலா, குளிர்பானங்கள் போன்றவை உட்படுத்தப்படும். இந்த 28 சதவீத வரிக்கு உட்படுத்தப்படும் பொருட்கள் மீது வசூலிக்கப்படும் மேல்வரி எவ்வளவு? என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. 

தற்போது பொருட்களுக்கு 3 சதவீதத்திற்கும் குறைவான வரியும், 3–லிருந்து 9 சதவீத வரியும், 9–லிருந்து 15 சதவீத வரியும், 15 முதல் 21 சதவீத வரியும், 21 சதவீதத்திற்கு மேல் வரிகளும் என்று பலவிதமான வரிவிகிதங்களில் பொருட்களுக்கு வரிவசூலிக்கப்படுகிறது. இப்போது 5, 12, 18, 28 சதவீதம் என்று 4 வரி விகிதங்களில் சரக்கு சேவைவரி வசூலிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பொருட்களுக்கான வரிகள் இந்த 4 இனங்களுக்குள் சேர்க்கப்பட இருக்கிறது. எந்தெந்த பொருட்கள் கூடுதல் வரிக்கு ஆட்படுத்தப்படும்? எந்தெந்த பொருள் மீது ஏற்கனவே வசூலித்த வரியைவிட குறைவாக வசூலிக்கப்படும் என்பதெல்லாம் ஒவ்வொரு இனத்திலும் எந்தெந்தப்பொருட்கள் வருகிறது? என்பதை பார்த்தபிறகுதான், ‘சரக்கு மற்றும் சேவைவரியால்’ பொதுவாக மக்களுக்கு பலனா, பாதிப்பா? என்பதுதெரியும். ஓட்டல் பில், டெலிபோன்பில், ரெயில்வே டிக்கெட் கட்டணம் உள்பட பல சேவைகளுக்கு தற்போது சேவைவரி, தூய்மை மேல்வரி, விவசாயமேல்வரி சேர்த்து 15 சதவீதவரி வசூலிக்கப்படுகிறது. சேவைவரியை 18 சதவீதமாக ஆக்கத்திட்டமிருப்பதாக செய்திவருகிறது. அப்படி 18 சதவீதமாக்கினால், நிச்சயமாக பொதுமக்கள் இப்போது இந்த சேவைகளுக்கு செலுத்தும் வரியைவிட 3 சதவீதவரி கூடுதலாக கட்ட வேண்டியதிருக்கும். சாதாரண பாமரன்கூட அடிப்படை சேவைகளுக்காக ஏற்கனவே அதற்கான கட்டணங்களையும் கட்டி விட்டு, கூடுதலாக இவ்வாறு 18 சதவீதம் வரிகட்டுவது அவனுக்கு தாங்கமுடியாத சுமையை ஏற்படுத்திவிடும். எனவே, சேவைவரி விகிதத்தை படிப்படியாக குறைக்கவோ, அல்லது நீக்கிவிடவோ முடிவெடுத்தால்தான் அடிப்படை சேவைகளை கஷ்டமில்லாமல் பெறமுடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.