News
Loading...

கையிலே வளரும் காது!

கையிலே வளரும் காது!

இரண்டு காதுகளில் கேட்கும் பல விஷயங்களையே நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை. ஆனால் அது போதாது தனக்கு என அசகாய முயற்சிகள் செய்து கையிலும் காது வளர்க்கும் மனிதரை அறிவீர்களா? ஆஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர், காதை கையில்தான் வளர்ப்பேன் என அடம் பிடித்து 12 ஆண்டுகளில் அதனை சாத்தியப்படுத்தியும் விட்டார் என்பது அக்மார்க் புதுமைதானே?   

கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆல்டர்நேட்டிவ் அனாடமி துறையின் தலைவரான பேராசிரியர் ஸ்டெல்ஆர்க், 1996 ஆம் ஆண்டிலிருந்து சிந்தித்து உடலில் முயற்சித்து அண்மையில் வெற்றிகண்ட எக்ஸ்பரிமென்ட் இது. மக்களின் வாழ்வில் இதயமாக இணையம் இயங்கி வரும் நிலையில், நியூயார்க்கில் உள்ள ஒருவர் கலந்துகொண்ட கான்செர்ட்டை கேட்டுக்கொண்டே லண்டனில் இன்னொரு நிகழ்வை ரசிக்க முடிந்தால் எப்படியிருக்கும்? என்று உற்சாகமாக பேசியபடி நம் முகத்தைப் பார்க்கிறார் ஸ்டெல்ஆர்க். 

கையிலே வளரும் காது!

ஆனால் மக்கள் இதனை குழப்பமாகவும், குறுகுறுப்பாகவும் பார்க்கிறார்கள். கலையை அவ்வளவு எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது தான் என தானாகவே ஒரு பதிலையும் கூறும் ஸ்டெல்ஆர்க், உடலை கேன்வாஸாக மாற்றும் புதுமையான கலைஞரும் கூடத்தான். ஸ்டெம்செல் மூலம் வளர்க்கப்பட்ட இந்த புதிய காதில் ரத்த ஓட்டம் மேம்பட்டிருப்பதோடு, தசைகளும் வளர்ந்திருப்பதை கையை உயர்த்திக் காட்டி புன்னகைக்கிறார். 

ஸ்டெல்ஆர்க்கிடம் இரு காதுகள் சிறப்பாக செயல்படும்போது எதற்கு புதிய காது? என்று கேட்டால், இந்த காதில் மைக்ரோபோனை பொருத்தியுள்ளேன். இதன் மூலம் நான் எங்கு இருந்தாலும் என் கையிலுள்ள காது உலகத்தோடு இணைந்தேயிருக்கும். நான் ரசிப்பதை உலகமே கேட்டு ரசிக்கலாம். மேலும் ஜிபிஎஸ் மூலம் என் காது எங்கிருக்கிறது என யாரும் அறியலாம் என கோக்குமாக்கு  விளக்கம் வருகிறது ஸ்டெல்ஆர்க்கிடமிருந்து.    
அப்படியென்றால் உங்கள் பிரைவசி என்னாவது? என்றால் என்னுடைய காதை ஆஃப் செய்ய ஸ்விட்ச் ஏதும் கிடையாது.

 இணையமின்றி நான் ஆஃப் லைனில் இருந்தாலும் என்னுடைய காது இணையத்திலேயேதான் இருக்கும் என்று புதிராகப் பேசுகிறார் ஸ்டெல்ஆர்க். 2006ல் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த இரு அறுவை சிகிச்சைகளில் காது நேர்த்தி பெற்றாலும் திடீர் தொற்றினால், மைக்ரோபோனை அதில் பொருத்த முடியவில்லை. பிறகு காது மடல்களை சரியாக வடிவமைக்க ஸ்பெயினைச் சேர்ந்த ஸ்டெம்செல் வல்லுநரை அணுகி காதினை நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.   

தானாக வளரும் காது போன்ற உறுப்புகளை எப்படி உருவாக்கினார்கள்? கையில் சலைன் சொல்யூஷன் மூலம் தசை செல்களை உருவாக்கி, அதில் சிறுநீரக வடிவ சிலிகானை பொருத்தி அறுவை சிகிச்சையினால் காதினை உருவாக்கியுள்ளனர்.  ஆனால் உடல் இதற்கு அவ்வளவு எளிதாக அட்மிஷன் கொடுத்துவிடவில்லை. 

ஒரு கட்டத்தில் தோலில் தொற்று ஏற்பட்டு காதின் இடமே மாறியுள்ளது. நுண்ணிய துளை வழியாக காதின் சிறு அமைப்பு களை வடிவமைக்க உதவும் பாலி எத்திலீன் பொருள் ஒன்று, 250 மைக்ரோமீட்டர்அளவில் ஸ்டெல்ஆர்க்கின் இடது கையில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டெல்ஆர்க் இனி குளோபல் கலைஞன்தான்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.