News
Loading...

டெலிவிஷன் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் ஜெயலலிதா - Apollo டாக்டர்கள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்றம்?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 19-ந்தேதி(சனிக்கிழமை) தனிவார்டுக்கு மாற்றப்படுகிறார். தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவர் இயல்பாக பேசுகிறார். தனது அறையில் உள்ள டெலிவிஷனை பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் டாக்டர் சிவக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர். அதன்பிறகு மேரி சியாங் நாடு திரும்பினார். சீமாவுடன், ஜூடி என்ற மற்றொரு பிசியோதெரபி நிபுணரும் இணைந்து சிகிச்சை அளித்தனர். அவர்களும் தற்போது நாடு திரும்பிய நிலையில், ஜெயலலிதாவுக்கு முதலில் சிகிச்சை அளித்த மேரி சியாங் தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

பிரார்த்தனை

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற சிகிச்சை ஒரு புறம் நடந்தாலும், மறுபுறத்தில் அவர் நலம் பெற அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு கையெழுத்திட்டு எழுதிய கடிதம் அ.தி.மு.க.வினருக்கு புது உற்சாகம் அளித்துள்ளது. ‘எங்கள் அம்மா உடல் நலம் பெற்றுவிட்டார், மீண்டு வந்து விட்டார்’ என்று அவர்கள் உள்ளத்தில் இருந்து உற்சாக குரல் வர தொடங்கி விட்டது.

முதல்-அமைச்சரின் அறிக்கைக்கு பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்ற ஆவலிலும், எதிர்பார்ப்பிலும் அ.தி.மு.க.வினர் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பல்லோ முன்பு அ.தி.மு.க.வினர் கார்த்திகை நாயகனான அய்யப்பனை வணங்கி, நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்றம்

இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 56-வது நாளாக நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் நேற்று காலை 9.15 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சையை அளித்துவிட்டு பின்னர் மாலை 5.55 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் அறையில் இருந்தபடி டெலிவிஷன் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்கிறார் என்றும், மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் இயல்பாக பேசி வருகிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறி உள்ள நிலையில், வருகிற 19-ந்தேதி(சனிக்கிழமை) அவர் தனிவார்டுக்கு மாற்ற இருப்பதாகவும், அந்த தனிவார்டில் டாக்டர்கள் கண்காணிப்பில் அவர் இருந்து அதன்பிறகு ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்