News
Loading...

‘எடிட்டர்’ எழில்!

‘எடிட்டர்’ எழில்!

‘‘டாக்டர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்ததே ஒரு திட்டமிடப்பட்ட விபத்துபோல் அரங்கேறியது. டாக்டர் தேவராஜன் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவம், நோய்கள், மருத்துவ உபகரணங்கள் பற்றிய கலைச்சொல் அகராதியை தொகுத்து வருகிறார். அவருடைய குழுவில் அப்போலோ குழும டாக்டர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சேர்ந்து உருவாக்கும் அந்த அகராதியை வெளியிடும் விழாவில் பிரதாப் ரெட்டி கலந்துகொண்டார். நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவில், பிரதாப் ரெட்டி கலந்துகொள்கிறார் என்ற விஷயம் மதியம் 3 மணிவரைக்கும் யாருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால், இந்த விழா நடப்பதே கடைசிவரை ரகசியமாகத்தான் இருந்தது. ஆனால், 3 மணிக்குமேல் அப்போலோ குழுமத்தில் இருந்துதான், பிரதாப் ரெட்டி இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியானது. அதையடுத்துத்தான் பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். பத்திரிகையாளர்கள் வருவார்கள் என்று தெரியும். தெரிந்தே அவர் கலந்துகொண்டார். கேள்வி கேட்பார்கள் என்று தெரியும். பதில் சொல்லவும் தயாராக வந்தார்.”

‘‘பிரதாப் ரெட்டியே முதலமைச்சர் குணமடைந்துவிட்டதாகச் சொல்லி உள்ளாரே?”

‘‘அவருடைய பேட்டிக்குள் அது மட்டுமல்ல. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தரமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. ‘அப்போலோ டாக்டர்கள் அவரை சிறப்பாகக் கவனித்தனர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், எய்ம்ஸ் டாக்டர்களின் முயற்சியால் ஜெயலலிதா தற்போது தேறி உள்ளார். மேலும், பொதுமக்களின் பிரார்த்தனையும் முக்கியமான காரணம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அர்த்தம், அப்போலோ தரப்பில் எந்தக் குறையும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வைக்கப்படவில்லை. தங்களால் முடிந்தவரை அவரைத் தேற்றிவிட்டோம் என்ற தன்னிலை விளக்கம்தான் அது. ரெட்டியின் பேட்டியில் உள்ள இரண்டாவது முக்கியமான விஷயம், ‘முதலமைச்சர் ஜெயலலிதா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துள்ளார்’ என்பது. இதை பிரதாப் ரெட்டி, யாருக்கோ சொல்ல நினைத்து சொல்லமுடியாமல் புழுங்கிக்கொண்டிருந்த விஷயம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். மேலும், ‘ஜெயலலிதா எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்’ என்றும் ரெட்டி குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்யும் அதிகாரம் அப்போலோ குழுமத்திடம் இல்லை. அது ஜெயலலிதா மற்றும் அவரைச் சுற்றி இருப்பவர்களிடம்தான் இருக்கிறது. அவர்களுக்கு என்ன நெருக்கடியோ... என்ற கேள்விதான் எழுகிறது. அப்போலோ ரெட்டியே முதலமைச்சர் குணமடைந்து விட்டார் என்று சொன்னபிறகும், அவர்கள் இன்னும் அப்போலோவை காலி செய்யாமல் இருக்கின்றனர் என்று அனைவரும் யோசிக்க மாட்டார்களா?”

‘‘அமெரிக்க டிப்ளமெட்களுக்கு இணையாக அப்போலோ ரெட்டி மாட்டிக்கொள்ளாமல் பேட்டி கொடுக்க.... ஜெயலலிதா கிச்சடி சாப்பிட்டார் என்று சிலர் செய்தி போடுகிறார்களே?”

‘‘இப்படி செய்தி போடுவதை சிலர் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்கள். இந்த மாதிரியான தகவல்களை போடச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாராம் ஓர் அதிகாரி. செய்தித் துறை கூடுதல் இயக்குனர் எழில் என்ற எஸ்.பி.எழிலழகனைச் சொல்கிறார்கள். இந்த எழில் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஓய்வுபெற்றவர். இரண்டு முறை பணி நீட்டிப்பு பெற்று இன்னும் பணியில் இருக்கிறார். இவருடைய பழைய வரலாறுகள் டெர்ரர் ஆனவை. 1991 - 96 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஸ்பெஷல் பி.ஏ-வாக இருந்தவர். அதன்பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், முந்தைய ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் தோண்டியெடுக்கப்பட்டன. அதில் செங்கோட்டையன் கைதானபோது எழிலும் கைதானார். அதன்பிறகு, தி.மு.க-வில் செல்வாக்காக வலம்வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பிடித்து தி.மு.க ஆட்சியிலும் செல்வாக்காக வலம் வந்தார். பிறகு, அ.தி.மு.க ஆட்சி வந்ததும் அங்கே மாறி உச்சத்துக்குச் சென்றுவிட்டார். இவர்தான் பல ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு இப்படியான தகவல்களைப் போடச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாராம். இந்த மாதிரியான செய்திகளில் அப்போலோ மருத்துவமனைக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால், அவர்களால் அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி வெளிப்படையாகப் பேசவும் முடியவில்லையாம்.”

பிரதாப் ரெட்டி

‘‘இப்போதைய நிலைமை என்ன?”

‘‘முதல்வர் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியாக ஒரு அறைக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வருக்கு என ஒரு தனி அறையும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. 15-ம் தேதி அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முழுமையாக கண்காணிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. ‘ஜெயலலிதாவின் இதயத் தமனியில் ரத்தக் கசிவு ஏற்படத் தொடங்கியதை அடுத்து நுரையீரலில் சுவாசக் குறைபாடு ஏற்பட்டு திரவச் சேர்மானம் அதிகரித்தது. இதையடுத்து இதய நோய் நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், தீவிர சிகிச்சை மற்றும் தொற்று நோய் மருத்துவர்கள், சிறுநீரக நோய் நிபுணர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு, சிகிச்சை அளித்தது.  வலி மறக்க அளிக்கப்பட்டுவந்த மயக்க மருந்துகளும் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது’ என்றும் சொல்கிறார்கள்.”

‘‘விரல் வீக்கம் என்றார்களே?”

“ஜெயலலிதாவின் வலது கைவிரல் வீக்கமடைந்துள்ளதால் இடதுகையால் கைநாட்டு வைத்தார் என டாக்டர் பி.பாலாஜி கையெழுத்திட்டு சான்றளித்தார். ஆனால், இதுவும் சிக்கல் ஆகி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் தரப்பில் ஆஜரான வக்கீல் வீரா கதிரவன் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இவரது வாதத்தைத் தேர்தல் அலுவலர் ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. வீராகதிரவனின் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் அலுவலர் சொல்ல, நிராகரிக்கும காரணத்தை ரிடர்னாக தருமாறு கேட்க, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி பதில் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். தற்போது பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள். ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 22 ஏ பிரிவின்கீழ், அ.தி.மு.க வேட்பாளரின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவத்தில்  கைரேகை வைத்துள்ள அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஆர்.டி.ஓ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தஸ்துள்ள அதிகாரிகள் முன்புதான்  வைத்திருக்க வேண்டும். டாக்டர்கள் முன்பாக அவர், ரேகை வைத்தது சட்டப்படி செல்லாது. ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவத்தில், அவர் சுயநினைவுடன்தான் ரேகை வைத்தாரா?’ என்று தி.மு.க. தரப்பு கேட்கிறது.”

‘‘மத்திய தேர்தல் கமிஷன் பதிலுக்கு காத்திருக்கிறார்களாக்கும்!”

‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் கடுமையான பலத்துடன் களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் சரவணனை சுற்றி சர்ச்சை கிளம்பியது. பி.ஜே.பி-யிலிருந்து தி.மு.க-வுக்கு சமீபத்தில் வந்த சரவணனுக்குத் தலைமைக்கு எப்படி சீட் ஒதுக்கியது? யார் யார் பணம் வாங்கிக்கொண்டு இவருக்கு சீட் கொடுத்தார்கள் என்று தொண்டர்களுக்குள் புகைச்சல் புகைந்து கொண்டியிருந்தது. இதனால், மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதியும் புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் மூர்த்தியும் கடந்த வாரம் சரவணன் தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்தபோது, வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலே அசிங்கமாகப் பேசி மோதிக்கொண்டனர்.

இந்த சம்பவம் முடிந்தும் இருவரின் ஆதரவாளர்களும் மோதல் போக்கைப் கடைபிடிக்கும் விதமாக, எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடக்கும் தேர்தல்களில் தி.மு.க-வுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மட்டும்தான் சாதமான சூழல் நிலவி வருவதால் இங்கு உட்கட்சி பகையால் தாம் தோல்வியை தழுவப் போவதாக ஸ்டாலினிடம் வேட்பாளர் சரவணன் கதறியிருக்கிறார்.

தீப்பொறி ஆறுமுகம்

இந்த நிலையில், தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மதுரைக்குவந்த ஸ்டாலின், தளபதியிடம், ‘சொன்ன இடத்தில்தான் வேலை செய்வீர்கள் என்று அடம் பிடித்தால் அந்த இடத்துக்கு வெளி மாவட்ட ஆட்களைப் போட்டு வேலை வாங்கவா? இல்லை வேறு ஒருவரை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கவா?” என்று எகிறி இருக்கிறார். மூர்த்தியை அழைத்து, “பொது வெளியில் சண்டையிட்டு மீடியாக்களுக்கு, தீனி போடும் வேலையை செய்யக் கூடாது.  சரவணனை வெற்றி பெறவைக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்றாராம்” என்றவர்,

‘‘ஜெயலலிதா அப்போலோவில் இருந்து விரைவில் வீடு திரும்ப, அ.தி.மு.க-வினர் ஆலய வழிபாடுகள், நேர்த்திக் கடன்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். சென்னை தி.நகர், வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் 7-ம் தேதி சிறப்பு யாகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேத விற்பன்னர்கள் 20 பேர் பங்கேற்று இதை நடத்தியுள்ளனர். இந்த பூஜைக்காக 7 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. எட்டு வகை ரோஜா, விருச்சிப்பூ மூன்று வகை தாமரைப்பூக்கள் மற்றும் சம்பங்கி, முல்லை, மல்லி, ஜாதிமல்லி, தவனம், செண்பகம், சாமந்தி, தாழம்பூ என 68 வகைப் பூக்கள் அதில் இடம்பெற்றன”.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.