News
Loading...

செவ்வாய்க்கிழமை தேர்தல்!

செவ்வாய்க்கிழமை தேர்தல்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  அமெரிக்க அதிபர் தேர்தல், உலகம் முழுக்க பரபரப்பு ஏற்படுத்தும். இந்த நவம்பர் 8ம் தேதி புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போதைய அதிபர் பராக் ஒபாமா 8 ஆண்டு பதவிக் காலத்தை முடித்துவிட்டதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறை குறித்த சில சுவாரசியங்கள் இங்கே...

*அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே நவம்பர் மாதம் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும். 1845ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த நடைமுறை தீர்மானிக்கப்பட்டது. அதனால் எப்போதுமே இந்த செவ்வாயில்தான் தேர்தல் நடக்கும்.

*ஏன் நேரடியாக ‘முதல் செவ்வாய்க்கிழமை’ என தீர்மானிக்காமல், ‘முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை’ என முடிவெடுத்தார்கள்? நவம்பர் முதல் தேதி ஒருவேளை செவ்வாய்க்கிழமையாக வந்து, அது தேர்தல் நாளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். நவம்பர் 1ம் தேதி ‘ஆல் செயின்ட்ஸ் தினம்’. 

இது ரோமன் கத்தோலிக்கர்களுக்கு புனித தினம். அது மட்டுமில்லை, அந்தக் காலத்தில் வணிகர்கள் ஒவ்வொரு மாதக் கணக்கையும் அடுத்த மாதம் முதல் தேதியில்தான் முடிப்பார்கள். அப்படி அக்டோபர் மாதக் கணக்கைப் பார்க்கும்போது, ‘சரியாக பிசினஸ் ஆகவில்லை’ என்ற எரிச்சலில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டைக் குத்திவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையும் இப்படி யோசிக்க வைத்தது.

*அந்தக்காலத்தில் அமெரிக்கர்களுக்குபெரும்பாலும் விவசாயம்தான் தொழில். நவம்பர் மாதம்தான் எல்லா மாகாணங்களிலும் அறுவடை முடிந்து விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள். அதோடு பயணங்களுக்கும் உகந்தவிதமாக தட்பவெப்பநிலை இருக்கும். எனவேதான் இந்த மாதத்தில் தேர்தல் நடக்கிறது.

*அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து வெகுதொலைவு பயணம் செய்து வாக்குச்சாவடிகளுக்கு வர வேண்டி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போகும் பலரும், அதன்பின் திங்கள்கிழமை கிளம்பினால்தான் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க வர முடியும். இதையெல்லாம் உத்தேசித்தே இந்தக் கிழமை அமைந்தது.

*காலம் மாறினாலும் தேர்தல் தேதி மாறவில்லை.  இப்போது பலருக்கும் வாரத்தின் மைய நாளில் தேர்தல் வருவது வசதிக்குறைவாகத் தெரிகிறது. எனவே 34 மாகாணங்களில் முன்கூட்டியே  ஏதோ ஒரு நாளில் தங்கள் வாக்கை மக்கள் செலுத்த வசதி செய்துள்ளார்கள்.

அதிபர் ஒபாமா இப்படி இப்போதே தன் வாக்கைச் செலுத்திவிட்டார். 6 மாகாணங்களில் ‘என்ன காரணத்தால் செவ்வாய்க்கிழமை வர முடியாது’ என்பதை விளக்கிவிட்டு முன்கூட்டியே வாக்களிக்கலாம். இன்னும் 7 மாகாணங்கள் இதை அனுமதிக்கவில்லை. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.