News
Loading...

கறுப்புப் பணம் ஒழியாது! - ஆன்லைன் சர்வே ரிசல்ட்

கறுப்புப் பணம் ஒழியாது! - ஆன்லைன் சர்வே ரிசல்ட்

கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணி அளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தபோது, செய்வதறியாது மக்கள் திகைத்துப் போயினர். உடனே, ஏ.டி.எம்-களில் கூட்டம் அலைமோதியது. அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே ஏ.டி.எம்-களில் இருந்த 100 ரூபாய் நோட்டுகள் தீர்ந்துவிட்டன. பல மையங்களில், “100 ரூபாய் நோட்டுகள் இல்லை. 500, 1000 மட்டும்தான் உள்ளன” என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன. அத்துடன், அடுத்த இரு நாட்களுக்கு ஏ.டி.எம் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டது. இதனால், பெரும் கஷ்டத்துக்கு மக்கள் ஆளானார்கள். நவம்பர் 10-ம் தேதி வங்கிகளும், 11-ம் தேதி ஏ.டி.எம் மையங்களும் செயல்பட தொடங்கின. உடனேயே வங்கிகளுக்குச் சென்று, கையில் உள்ள பணத்தைப் புதிய நோட்டுகளாக மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தனர். இதனால், மக்கள் கூட்டம் வங்கிகளில் நிரம்பி வழிந்தது. வங்கிகளில் பணத்தை மாற்றவும், பணம் எடுக்கவும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். உண்மையில், எந்த மாதிரியான இன்னல் களை மக்கள் சந்தித்தார்கள் என்பது பற்றியும், பணத்தை மாற்றுவதில் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றியும் தெரிந்துகொள்ள, “கறுப்புப் பணம் ஒழிக்க இது சரியான வழியா? - #PeopleSurvey” என்ற தலைப்புடன் விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. 

இந்த சர்வேயில் மக்கள் பலர் பங்கேற்று பதிலளித்தனர். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே...

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழியும் என்று நம்புகிறீர்களா? 

இந்த அதிரடி திட்டத்தால் கறுப்புப் பணம் முழுவதுமாக ஒழிவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் தெரிவித்துள்ளனர். 50 சதவிகித மக்கள், கறுப்புப் பணம் ஒழிய வாய்ப்புகள் இல்லை என்று பதில் அளித்துள்ளனர். 

புதிய ரூபாய் நோட்டுகள் பெறுவதில் அதிக சிரமம் ஏற்படுகிறதா? 

வங்கிகளில் கடந்த இரண்டு நாட்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்படும். ஆனால், 8 மணியில் இருந்தே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர் மக்கள். இருந்தும் புதிய ரூபாய் நோட்டுகளை வங்களிலும், ஏ.டி.எம்-களிலும் பெற முடியவில்லை என 80 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். 18 சதவிகித மக்கள் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

கறுப்புப் பணம் ஒழியாது! - ஆன்லைன் சர்வே ரிசல்ட்

அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்-களும் பணம் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றனவா? 

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகும் ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுப்பதற்குச் சிரமமாக இருந்தது என 90 சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். போதுமான பணம் அனைத்து வங்கி ஏ.டி.எம்-களில் நிரப்பப்படாததே இந்த இன்னல்களுக்குக் காரணம். ஆனால், 9 சதவிகித மக்கள் தங்களுக்குத் தேவையான பணம் ஏ.டி.எம் மூலம் எடுக்க முடிந்தது எனக் கூறியுள்ளனர்.

பணத்தை மாற்றித் தருவதற்கு வங்கி ஊழியர்கள் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? 

ஒவ்வொரு வங்கியிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.  பொதுமக்களுக்கு ஒரு சில வங்கிகளில் பணம் மாற்றம் செய்ய ஊழியர்கள் உதவியதாக 22 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். ஒரு சில ஊழியர்கள் ஒத்துழைக்கவில்லை எனவும் சிலர் கூறியுள்ளனர்.  மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஊழியர்கள் ஒத்துழைப்பு அளிப்பதற்குச் சிரமப்பட்டனர் என 69 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பதில் அளித்துள்ளனர்.

கறுப்புப் பணம் ஒழியாது! - ஆன்லைன் சர்வே ரிசல்ட்

500, 1000 ரூபாய் மீதான தடை என்கிற அறிவிப்பு அரசின் மீது உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறதா? 

பணம் மாற்றுவதற்கு மக்கள் அதிகமாகச் சிரமப்பட்டார்கள். இதனால், மக்களுக்கு அரசின் மீது கோபம் ஏற்பட்டதா எனக் கேட்டதற்கு, 39 சதவிகித மக்கள்தான், ‘ஆம்’ என்று கூறியுள்ளனர். ஆனால் 41 சதவிகித மக்கள்,  நாட்டின் நலனுக்காக இந்த மாற்றம் நடக்கிறது என்பதால் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் 18 சதவிகித மக்கள், தங்களுக்கு அரசின் மீது எந்தக் கோபமும் இல்லை என்று கூறியுள்ளார்கள். 

நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கும் மனநிலையில் இருந்தாலும் போதிய முன்னேற்பாடுகள் செய்துவிட்டு, இந்த அறிவிப்பு வந்திருந்தால், மக்கள் தங்களின் அத்தியாவசியச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தை முன்கூட்டியே மாற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். இவ்வளவு துன்பங்களை தவிர்த்து இருக்கலாம். வங்கி ஊழியர்களுக்கும் எந்தவிதமான  சிரமங்களும் ஏற்பட்டிருக்காது. அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஆகியும், சாமான்ய மக்கள் நீண்ட வரிசைகளில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்கள். கறுப்புப் பணம் வைத்துள்ள பண முதலைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. மாறாக, அன்றாடப் பிழைப்புக்குத் திண்டாடும் மக்களே நொந்து நூலாகிக்கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...