News
Loading...

எங்கள் பணத்தை நாங்களே பிச்சை எடுப்பதா? - சாமான்யர்களின் சாட்டை

எங்கள் பணத்தை நாங்களே பிச்சை எடுப்பதா? - சாமான்யர்களின் சாட்டை

இன்றைய சாமன்யர்களை பணம் இல்லாத வங்கி மற்றும் ஏ.டி.எம்-களின் வாயிலில் இரவு, பகல் பாராமல் பணத்துக்காகப் பல மணி நேரம் கையேந்த வைத்துவிட்டது அரசு.   

`கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை... ஒத்துழைப்பு தாருங்கள்’  என்றார் மோடி. இதனை தொடர்ந்து 9-ம் தேதி வங்கிகள் இயங்காது, 9, 10-ம் தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டார். மூன்று நாட்கள்தானே எப்படியும்  சாமாளித்துவிடலாம் என்று எண்ணிய சாமான்யர்கள், அந்த மூன்று நாட்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லாடித்தான் போய்விட்டனர்.

இதுகுறித்து பல்துறை மக்களிடமும் பேசினோம். 

அமானுல்லா (தனியார் நிறுவனம்): ‘‘வங்கி கணக்கில் பணத்தைவைத்துக் கொண்டுதான் செலவுசெய்து வந்தேன். பிரதமர் அறிவிப்புக்கு அடுத்த நாளே கையில காசில்லை. சரி மூன்று நாள் எப்படியாவது சமாளிக்கலாம் என்று நினைத்தேன். வங்கிகள் திறந்தும் பணத்தை எடுக்க முடியலை. அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர், காய்கறி வாங்கக்கூட காசில்லை. கடந்த மூன்று நாட்களாக லீவு போட்டுவிட்டு பணத்தை எடுக்க முயற்சிக்கிறேன். எடுக்க முடியவில்லை.”

முகமது (தனியார் நிறுவனம்): “அவசரமா நான் திருவாரூக்குப் போக வேண்டிய நிலைமை. பணமில்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு நண்பர்கள்கிட்டதான் கேட்டேன். நண்பர்களிடம் இருந்த சில்லறைகளை சேர்த்துதான் போனேன். இந்த அறிவிப்பால கறுப்பு பணம் ஒழியாது. உழைத்து  சாம்பாதித்த எங்களுடைய பணத்தை எடுக்க பிச்சைக்காரங்க மாதிரி நடு ரோட்டுல நிக்கறோம். இப்ப வரைக்கும் பிரச்னை ஓயவில்லை. இதைவிடக் கொடுமை இந்த நாட்டில் வேறு எதுவும் இல்லை.’’

எங்கள் பணத்தை நாங்களே பிச்சை எடுப்பதா? - சாமான்யர்களின் சாட்டை

சோமசுந்தரம் (குடும்பத் தலைவர்): ‘‘500 ரூபாய் மாத்த முடியாம பல பிரச்னைகளைச் சந்தித்தேன். அன்றாட  செலவுகளுக்காக அல்லாடிவிட்டேன். குடும்பத்துல இருக்கிறவங்களும் ரொம்ப கஷ்பட்டுட்டாங்க.’’

இம்தியாஸ் (குடும்பத்தலைவி): ``மருந்து வாங்க மற்ற அவசரத் தேவைக்காகப் பணம் இல்லாம  கஷ்டங்களை அனுபவிச்சிடோம். ஏ.டி.எம்-ல் 2,000 ரூபாய் என்று  தருகிறார்கள். மருந்து மாத்திரை வாங்கறவங்களுக்கு இந்தக் காசு போதுமா  சொல்லுங்க. இவையெல்லாம் பிரதமருக்குத் தெரியாதா?’’ 

முருகேசன் (டீ விற்பவர்): ‘‘கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சென்று டீ விற்கிறேன். ஒரு வாரமா என்னால பால், டீ தூள் வாங்க முடியவில்லை. சுத்தமா வியாபாரத்தையே நிறுத்திட்டேன். வருமானமும் இல்லை.’’

குமார் (காய்கறி  வியாபாரி): ``வியாபாரம் ரொம்பவே குறைஞ்சு போயிடுச்சி. சாதாரண நாட்களில் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. இப்ப ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய்தான்  வருகிறது. பொதுமக்கள் மார்க்கெட் பக்கமே வர மாட்டேங்குறாங்க.’’

சுரேஷ் (காய்கறி  வியாபாரி): ‘‘வருமானமே இல்லை. சாதாரண நாட்களில் கூலி போக கையில காசு நிக்கும். விற்பனை குறைந்துள்ளதால் ஒரு சில நாட்களில் நஷ்டமும் ஏற்படுகிறது.’’

வனஜா (இல்லத்தரசி): “கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வந்து செல்கிறேன். கூட்டம் அதிகமாக இருப்பதால், பணம் எடுக்க முடியாமல் சென்றுவிடுகிறேன். சாதமும், தயிரையும் வைத்தே கடந்த மூன்று நாட்களாக சாப்பிட்டுப் பொழுதை ஓட்டி வருகிறோம். யாரோ பணத்தைப் பதுக்கியதற்கு எங்கள் குடும்பம் ஏன் பட்டினி கிடக்க வேண்டும்?’’

எங்கள் பணத்தை நாங்களே பிச்சை எடுப்பதா? - சாமான்யர்களின் சாட்டை

மோகனப்பிரியா (இல்லத்தரசி): ‘‘என் குழந்தைக்குத் திடீரென வயிறு வீக்கமாகி காய்ச்சல் வந்துவிட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். இங்கே சின்னச் சின்னத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படுகிறது. உடல் நலமில்லாதக் குழந்தையை ஆஸ்பத்திரியில் தனியாக  விட்டுவிட்டு எப்படி செல்வது என்று  தெரியவில்லை.’’

வெங்கடாசலம் (அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்):  ‘`இந்தியா முழுவதும் ஒரு லட்சம்  வங்கி கிளைகள் உள்ளன. தமிழகத்தில் 9 ஆயிரத்துக்கும் மேல் கிளைகள் உள்ளன. இந்தியா முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரம் ஏ.டி.எம்-கள் உள்ளன. இதில் பாதி ஏ.டி.எம்-களில் பணம் இல்லை. பாதி ஏ.டி.எம்-கள் இயங்கவில்லை. பொதுமக்கள் வங்கிகளுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பணத்தை மாற்றுவது மட்டுமல்ல. பணத்தைப் போடுவதற்காகவும் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். வங்கிகளில்  ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித் துள்ளது. இதனால் செய்வது அறியாது திணறுகிறார்கள். வங்கி ஊழியர்களைப் பொதுமக்கள் குறை சொல்ல வேண்டாம். அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
அதைவிட மிக மோசமான செயல்பாடு வங்கி ஊழியர்களைப் பொதுமக்களுக்கு மை வைக்க  உத்தரவிட்டிருப்பதுதான். ஏற்கெனவே பொதுமக்களை சமாளிக்க முடியாமல், வங்கி ஊழியர்கள் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், மேலும் மேலும் கூடுதல் சுமைகளை ஊழியர்கள் தலையில் ஏற்றுவதால், பொதுமக்களும் வங்கி ஊழியர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.

போதிய  வேலையாட்கள் இல்லை. கணினிகள் இல்லை. இடவசதி இல்லை இப்படி பல பிரச்னைகள் உள்ளன. இரவும் பகலுமாக வேலைசெய்து வருகிறோம். மேலும் செய்யுங்கள் என்றால் எப்படி  செய்ய முடியும். வங்கி ஊழியர்களை மேலும் மேலும் வதைத்தால் `செய்ய மாட்டோம்’ என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். கடும்  மன உளைச்சலுக்கு இடையேதான் இதனை எச்சரிக்கிறோம்.’’

எங்கள் பணத்தை நாங்களே பிச்சை எடுப்பதா? - சாமான்யர்களின் சாட்டை

சண்முகம் (பொருளாதார நிபுணர்): ‘‘இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற் கானது அல்ல. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதே இந்த நடவடிக்கை உருவானது. ஆனால், அப்போது பொருளாதார வல்லுநர்கள் பலரும் இது தோல்வியில் முடியும் என்று  எச்சரித்ததைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. பணக்காரர் களுக்கு எச்சரிக்கை மணி ஏற்கனவே அடித்தாகிவிட்டது.  இது  ஏழைகளுக்கான எதிர்பாராத அறிவிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கறுப்புப் பணத்துக் கான ஒழிப்பு நடவடிக்கை இப்படி இருக்காது. இது கறுப்பை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வரி கட்டாதவர்கள், வங்கி கடன்களை செலுத்தாதவர்கள், இவர்களை நோக்கி மத்திய அரசின்  பார்வை திரும்பி இருக்க வேண்டும். விவசாயிகள் யாரும் வருமான வரி செலுத்துவதில்லை.அதேபோன்று  நமது நாட்டில் கல்வியறி வில்லாத மக்கள் உள்ளனர். பலரும் பல வகைகளில் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளனர். உழைத்து சேர்த்த பணத்தை தங்கமாக, பணமாக வீடுகளில் வைத்துள்ளனர். யாரும் வங்கிகளில் வைப்ப தில்லை. அதற்கு  காரணம்  வங்கிகளுக்கு  செல்லாதவர்கள். இப்படி இருக்கின்ற பணத்தை நாம் கறுப்பு பணம் என்று சொல்ல முடியாது. இதில் வரி கட்டாத பணமும் இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக வங்கியில் செலுத்துங்கள் என்று கூறுகிறார்கள் . அதிலும் இவ்வளவு தான் என்று  விதிமுறையும் வைத்துள்ளனர். இதனால் நேர்மையாக சம்பாதித்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தைப் பதுக்கியவர்கள் யாரும் வங்கி வாசலில் காத்திருக்கவில்லை, படிக்காத ஏழையும் அன்றாட செலவுகளுக்குப் பணம் எடுக்கும் நடுத்தர வர்க்கமும்தான் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.