News
Loading...

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காற்று மாசு

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காற்று மாசு
டெல்லி அளவுக்கு மோசம் இல்லை என்பது ஆறுதல்

தமிழகத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வாகன பெருக்கத்தால் காற்று மாசு ஏற்பட்டாலும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று தர கண்காணிப்பு அறிக்கைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் டெல்லிக்கு நம்ம ஊரு பரவாயில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் காற்று மாசு தொடர்பாக சில முக்கிய நகரங்களில் நிருபர் குழு மேற்கொண்ட அலசல் விவரம் வருமாறு:

இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில், டெல்லியில் காற்று மாசு உச்சத்துக்கு சென்றது. பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் முகமூடி அணிந்தே வெளியில் வரும் நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் நாட்டின் தலைநகரமே முடங்கியது. இந்த நிலை தமிழக நகரங்களில் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழக நகரங்களில் காற்று மாசு எப்படி இருக்கிறது?

சென்னையில் மாசு அதிகரிப்பு

சென்னையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்தி கரமாக இருந்த காற்றின் தரம், தற்போது மிதமான மாசு என்ற அளவுக்கு காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் மணலி (தொழிற்சாலை), ஐஐடி வளாகம் (குடியிருப்பு), ஆலந்தூர் பேருந்து நிறுத்தம் (வாகனப் போக்குவரத்து) ஆகிய 3 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணித்து, அதன் விவரங்களை வெளியிட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மிதமான மாசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது, மிதமான மாசு ஏற்பட்டால், சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, இதய நோய் உள்ளவர் கள் மூச்சுவிட சிரமப்படுவார்கள் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காற்று மாசு

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

சென்னையில் தொழிற்சாலைகளில் ஏற்படும் காற்று மாசுவை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளான கத்திவாக்கம், மணலி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில், ஆன்லைன் காற்று தர பரிசோதனை கருவிகளை பொருத்தி யிருக்கிறோம். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசு ஏற்படுத்தினால், அடுத்த நொடியே எங்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத் துக்கும் தகவல் கிடைத்துவிடும். உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த முறையை தமிழக அரசுதான் முதலில் அறிமுகப்படுத்தியது. இதை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக்கொண்டு, நாடு முழுவதும் அமல்படுத்துமாறு அந்தந்த மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது என்றார்.

44 ஆயிரம் பேருக்கு அபராதம்

போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 2, 3, 4 சக்கரங்கள் கொண்ட தனிநபர் வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் என மொத்தம் 2 கோடியே 20 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. சென்னையில் மட்டும் 47 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. தமிழகத்தில் 2004-05ல் பதிவான புதிய வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 81 ஆயிரம். இது 2015-16-ல், 16 லட்சத்து 84 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வாகன புகையின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டுகிறதா என தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். வாகன புகை சான்று இல்லை என்றால் ரூ.250 முதல் ரூ.1000 வரை வாகனங் களுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கிறோம். தமிழகத்தில் போக்குவரத்து துறை மூலமாக கடந்த 2013-14-ல் 36 ஆயிரம் வாகனங்களுக்கும், 2014-15-ல்44 ஆயிரம் வாகனங்களுக்கும் அபராதம் விதித்திருக்கிறோம் என்றார்.

சாலையில் மணல் அகற்றம்

சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மிக நுண்ணிய துகள்களால் தான் உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். சென்னையில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி குப்பைகள் தீப்பிடித்து எரியும். இதனால் அப்பகுதியில் காற்று மாசு அதிகமாக இருந்தது. மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகளால் அங்கு காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால், காற்று மாசு சற்று அதிகரித்துள்ளது. அப்பணிகள் முடிந்ததும், காற்று மாசு குறைந்துவிடும். மேலும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் முறையாக தண்ணீர் தெளித்தும், சுற்றி வலை அமைத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறோம். சாலைகளில் உள்ள புழுதி மணலை கையால் முறையாக அகற்ற முடியாததால், அதை முழுமையாக அகற்றுவதற்காக ஏற்கெனவே 12 இயந்திர பெருக்கிகளை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. மேலும், தூய்மை இந்தியா திட்ட நிதியிலிருந்து ரூ.5 கோடியே 33 லட்சம் செலவில் மேலும் 4 இயந்திர பெருக்கிகளை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சென்னையில் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காற்று மாசு
மதுரை மூன்றுமாவடி சாலையில் குப்பைகள் கொளுத்தப்படுகின்றன.

பொதுப் போக்குவரத்தில் கவனம்

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன்: சென்னையின் காற்று மாசுக்கு வாகனத்தின் பங்கு எவ்வளவு உள்ளதோ அதே அளவுக்கு தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் மூலம் காற்று மாசுபடுகிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி இயங்கும் இந்த அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, சாம்பல் ஆகியவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்குபவை. முக்கியமாக உடல் நலத்தைச் சிதைக்கக் கூடியவை. எனவே, அனல் மின்சாரத்துக்கு பதில் மாற்று மின் உற்பத்தி வழிமுறைகளை அரசு கையாள வேண்டும். மேலும், பொதுப்போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மதுரையில் சுத்தமான காற்று இல்லை

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காற்று மாசு
மதுரையில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் எழும் புகை மண்டலம்.

பெரிய திறந்தவெளி காற்று மண்டலமான மதுரையில் வீசும் காற்று, காய்ந்த கழிவுகளையும் தனக்குள் சேர்த்துக்கொள்வதால் மாசின் அளவு அதிகரிக்கிறது, பெரும்பாலான சாலைகளின் இரு பக்கமும் குவிந்துள்ள புழுதி, முறையாக போடப்பட்டாத சாலைகளிலிருந்து கிளம்பும் தூசுகளால் காற்று மாசு கணிசமாக அதிகரிக்கிறது. வாகனப் பெருக்கத்தால் புகையின் மாசுவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், கே.புதூர், கீழவாசல், தெப்பக்குளம், ஆரப்பாளையம் பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது.

மதுரையில் காற்று மாசு பற்றி காமராஜர் பல்கலைக்கழக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் கே.முத்துச்செழியன் கூறுகை யில், ‘‘மதுரை மாநகரில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து வருகிறது. கடந்த ஓர் ஆண்டாக காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு அளவு 400 பிபிஎம்மாக (230 பிபிஎம்வரை சுவாசிக்கலாம்) அதிகரித்துவிட்டது. இது சுவாசிப்பதற்கேற்ற சுத்தமான காற்று இல்லை. இதற்கு கார்பன் துகள் கள், காற்றில் அதிகமாக பரவிக் கொண்டு வருவதே முக்கிய காரணம். 6 இடங்களில் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட ஆய்வில், ஒரு மைக்ரோ கிராம் அளவு காற்றில் 2.54 முதல் 29.56 வரை கார்பன் துகள்கள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. இது மகாராஷ்டிர மாநிலம், நாக் பூரில் உள்ள மாசு அளவுக்கு இணையானது. இந்த கார்பன் துகள்களை தொடர்ந்து சுவாசிப்பதால், கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் ஆபத்து உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குமாரவேலுவிடம் கேட்டபோது, ‘‘மதுரையில் தொழிற்பேட்டைகள் இல்லாததால் எந்த விதத்திலும் மாசு ஏற்படவில்லை’’ என்றார்.

சேலத்தில் கட்டுக்குள் காற்று மாசு

சேலம், மேட்டூரில் அதிகளவு தொழிற் சாலைகள் உள்ளன. குறிப்பாக மேட்டூரில் அனல் மின்நிலையம், தனியார் இரும்பாலை, கெம்பிளாஸ்ட் உள்ளிட்ட பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. அதிக மாசு வெளிப்படுத்தக் கூடிய தொழிற்சாலைகள் மாவட்டத்தில் 8 உள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு அளவைக் கண்டறிய அந்தந்த தொழிற்சாலைகளில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘சேலத்தில் காற்று மாசு கட்டுக்குள் உள்ளது’’ என்றார்.

தொல்லை இல்லாத நெல்லை

திருநெல்வேலியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் இல்லை. வாகன பெருக்கத்தால் மட்டுமே காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் மாநகராட்சியில் சேகரித்து, மாநகரை ஒட்டியுள்ள ராமையன்பட்டியில் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்பட்டது. விரைவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி மாநகரில் காற்று மாசு அளவிடுவதற்கான கட்டமைப்புகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இது குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத் தில் கேட்டபோது, ‘‘இம்மாநகரை பொருத்தவரை வாகன புகைதான் காற்று மாசுவை ஏற்படுத்து கிறது. மற்றபடி, இங்கு பெரிய அளவில் காற்று மாசு இல்லை’’ என்றனர்.

தூத்துக்குடியில் கடும் மாசு

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காற்று மாசு
தூத்துக்குடி அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியேறும் புகை மண்டலம். 

அனல்மின் நிலையங்கள், அபாயகரமான தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் தூத்துக்குடி சுற்றுச்சூழல் மாசு மிக்க நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது. இதனால் இந்நகரத்தில் மக்கள் வாழவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் அனல்மின் நிலையங்களால் காற்றில் சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பாதரசம், காற்றில் கலக்கும் துகள்கள் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் சல்பர் ஆக்ஸைடு மிக கடுமையான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்தியாவில் காற்றில் சல்பர் ஆக்ஸைடு அதிகமாக கலந்துள்ள பகுதிகளில் 8-வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் தூத்துக்குடி இருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. அதிகரிக்கும் மாசு காரணமாக புற்றுநோய், தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான நோய்கள், சுவாச கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல்மின் நிலையங் களில் இருந்து வெளியாகும் நிலக்கரி சாம்பல் உப்பளங்களில் படிந்து உப்பின் தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக உப்பள உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘அனைத்து தொழிற்சாலைகளிலும் கண்காணிப்பு கருவி பொருத்தி காற்று மாசு அளவை கண்காணித்து வருகிறோம். காற்று மாசை கட்டுப்படுத்த அனைத்து தொழிற்சாலை பகுதிகளிலும் பசுமை மரங்களை அதிகம் வளர்க்க அறிவுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.

குமரியில் பிளாஸ்டிக் கழிவால் காற்று மாசு

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளால் மாசு ஏற்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘சபரிமலை சீஸன் 16-ம் தேதி தொடங்கும் நிலையில், கன்னியாகுமரி சுற்றுலா மையங்கள், கடற்கரை சாலை, சூரிய அஸ்தமன மையம் போன்ற பகுதிகளில் மாசு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

கடலூரை மாசுபடுத்தும் ஆலைகள்

கடலூர் சிப்காட்டில் உள்ள 14 பெரிய தொழிற் சாலைகள் மூலம் வெளிவரும் புகை மற்றும் கடலூர் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையால் காற்று மாசுபட்டு கிடக்கிறது. கடலூர் பகுதியில் உள்ள மார்டன் ரைஸ்மில் களில் நெல்லை வேக வைக்க நிலக்கரியை பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் சாம்பலும் காற்றில் பறந்து காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையால் மக்களுக்கு கேன்சர் நோய் ஏற்படுகிறது. சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு வரும் 100 நோயாளிகளில் 8 பேர் கடலூரைச் சேர்ந்தவர்கள். சிப்காட் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு மூச்சு திணறல், ஒவ்வாமை உள்ளிட்ட நோய்கள் காற்றில் உள்ள மாசுவால் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, ‘‘காற்று மாசை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

திருச்சியில் வாகன போக்குவரத்தால் மாசு

திருச்சி மாநகரை பொறுத்தவரையில் வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் காற்று மாசு சில நேரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாநகரில் 5 இடங்களில் மாசு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டு அளவிடப்பட்டு வருகிறது.

தரமற்ற சாலைகள், சரியாக பராமரிக்கப்படாத வாகனங்கள், அதிக வாகனப் பயன்பாடு காரண மாக அவ்வப்போது காற்று மாசு அதிகரிக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகள், கல்குவாரிகள் உள்ளன. இந்த பகுதிகளில் காற்று மாசு சற்று அதிகமாக உள்ளது.

கரூர் மாவட்டத்தில் பெரிய அளவில் காற்று மாசுபாடு இல்லை. கரூர் வெங்கமேடு பகுதியில் விரைவில் காற்று கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளதாக மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததாலும், அதிக அளவில் விவசாய நிலங்களும், காலியிடங்களும் நிறைந்திருப்பதாலும் இந்த மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பதற்கான சூழல் இல்லை.

அரியலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் என 7 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெட்டி எடுக்க ஏறத்தாழ 150 சுண்ணாம்பு சுரங்கங் கள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சேதமடைந்து காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், ஆலைகள் மற்றும் வாகனங்களின் புகை ஆகியவற்றால் காற்று மாசுபாடு அதிகமாகத்தான் உள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு அளவீட்டுக் கருவியை பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல்லில் காற்று மாசு குறைவு

‘‘ஆலைகள் மூலம் வெளியேற்றப்படும் புகையால் காற்று மாசு ஏற்படுகிறதா என ஆன்லைனில் ஆண்டு முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. இங்கு காற்று மாசு குறிப்பிடும்படியாக இல்லை’’ என நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கே. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

டெல்லி அளவுக்கு இல்லை என்றாலும், தமிழக நகரங்களில் காற்று மாசு ஓரளவு இருக்கிறது. அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மனம்வைத்தால், தமிழகத்தின் நிலையை இன்னும் மேம்படுத்த லாம். ஆரோக்கியமான சூழலோடு, நோய்கள் இல்லாத ஆரோக்கியமான மனிதர்களையும் உருவாக்கலாம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்